32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Breakfast விமர்சனம்

Dinesh R சேலம் Published: 24/04/2026 3 நிமிட வாசிப்பு Updated: 25/04/2026 சினிமா
எழுத்து அளவு:

காதலித்துக் கல்யாணம் செய்து, மூன்று மாதத்திற்குள் வேகமாகப் பிரிகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாகத் தலைப்பினை வைத்துள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. இவர், செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சங்க காலக் காதல், ஆண்டாள் காலக் காதல், 80களின் காதல் ஆகியவற்றைச் சொல்லிவிட்டு, இந்தக் காலக் காதல் கதைக்குள் வருகிறார். ரிஷபும் லக்‌ஷ்மியும் இணையத்தில் அறிமுகமாகி, வாரயிறுதியில் மலேஷியாவிற்குச் சென்று, காதலாகித் திருமணம் செய்து கொள்கின்றனர். மூன்றாவது மாதத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். அவரை கங்கா தேவி என்பவரிடம் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்கிறது நீதிமன்றம்.

கங்கா தேவி, சென்சார்க்கு வந்த ஒரு திரைப்படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். பிஸ்கட் கம்பெனி முதலாளி மகளான ஜான்வி, குப்பை அள்ளும் பணிபுரியும் பொறியாளரான சாந்தனுவைக் காதலிக்கிறார். அந்தக் காதல் என்னாகிறது எனச் சொல்லி கவுன்சிலிங் தருகிறார். ஜான்வி – சாந்தனுவின் கதை, ரிஷப் – லக்‌ஷ்மியின் முடிவை மாற்றியதா இல்லையா என்பதே கதை.

ஆச்சரியமாக, நாயகனின் நண்பராக நடித்துள்ள ரவி மரியாவின் பாத்திரம் நன்றாக வாடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அவரும் வழக்கமான நடிப்பைக் குறைத்துத் தேவையான அளவளித்து அசத்தியுள்ளார். நாயகனுக்கும் அவருக்கும் பெரிய வயது இடைவேளை அறிந்தும், ஒருமையில் ரவி மரியாவை நாயகன் அழைப்பது ஒட்டாமல் உறுத்துகிறது. பாவமே உருவாக நாயகனின் அம்மாவாக வருகிறார் சந்தியா ராகம் அர்ச்சனா. அர்ச்சனாவின் கணவராக, கோயம்புத்தூர் மாப்பிள்ளை இயக்குநர் C.ரங்கநாதன் நடித்துள்ளார்.

கவுன்சிலிங் செய்யும் கங்கா தேவியாகக் கஸ்தூரி வருகிறார். வாழ்க்கையில் இருவர் பிரியவேண்டும் என முடிவெடுக்கும் போது, எந்தக் கதையைச் சொல்லக்கூடாதோ, அந்தக் கதையைச் கர்மசிரத்தையாகச் சொல்லுகிறார். அவரது பெயரை மகாபாரதத்தோடு இணைத்துக் கட்டுடைத்து, அவருக்கே வைத்தியம் பார்க்கிறார் கவுன்சிலிங்கிற்குச் சென்ற லக்‌ஷ்மி. ஜான்வி – சாந்தனு கதையிலேயே பார்வையாளர்கள் சோர்வாகி விடும்பொழுது, அதை மேலும் அதிகமாக்குகிறது கஸ்தூரி பற்றி ஓப்பனாகும் ட்விஸ்ட்.

ரிஷப், லக்‌ஷக்மியாக நடித்துள்ள க்ரித்திக் மோகனும், அமிதா ரங்கநாத்தும் தங்கள் பாத்திரங்களை அழகாகச் செய்துள்ளனர். ஆனால், நாயகன் நாயகி அந்தஸ்த்தைப் பெறுவது ஜான்வி – சாந்தனுவாக நடித்துள்ள ரோஷ்மினும், பிக் பாஸ் புகழ் ராணவும் தான். ராணவ் எமோஷ்னல் காட்சிகளைத் தவிர்த்து ரசிக்கும்படியாகவே நடித்துள்ளார். ஜான்வியாக நடித்துள்ள ரோஷ்மின், மிஸ் மலபார் பட்டம் வென்றவராவார். இவரது பாத்திரத்தை இயக்குநர் மிகவும் ராவாக உருவாக்கியுள்ளார். கோபத்தை மீறி, அந்தப் பாத்திரத்தின் மீது இனம் புரியா லஜ்ஜையும் உருவாகி விடுகிறது. அதீதம் எனச் சொல்லக்கூடிய அளவிற்குக் கதாபாத்திர உருவாக்கம் உள்ளது. அதை உள்வாங்கி, அப்படியே வெளிப்படுத்தியுள்ளார் ரோஷ்மின்.

படத்தின் முடிவு சுபம் தான் என்றாலும், அதற்காகக் கஸ்தூரி எடுத்தாண்டுள்ள கதையென காந்தி கிருஷ்ணா சொல்லியுள்ள கதை மட்டும் ஒரு வழி செய்து விடுகிறது. கதைக்குள் கதையாக வரும் உப கதையின் திக்கற்ற பாய்ச்சலை நீர்த்துப் போகச் செய்யப் பெரிதும் முயற்சி செய்துள்ளனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஒளிப்பதிவாளர் M.V.பன்னீர் செல்வமும். திருமணம் புரிந்து கொள்பவர்கள் சாகும் வரை ஒருவரை ஒருவர் காதலிக்கவேண்டுமென்பது Ar. காந்தி கிருஷ்ணாவின் முடிபு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.