
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா.
தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நேர பிரக்ஞையைப் பற்றிய பதற்றமோ, பயமோ இன்றி தைரியமாக படத்தைக் கையாண்டுள்ளார். படத்தில் ஹீரோயிசமும் இல்லை. தன்முனைப்பு, கனவு, வஞ்சம், கோபம், மகிழ்ச்சி, துரோகம் என படம் உணர்வு நிலைகளில் பயணிக்கிறது.
படம் ஒரு ஈகோ சண்டையில் இருந்து தொடங்குகிறது. தனது லட்சியத்தை அடைய பிறரைப் பயன்படுத்திக் கொள்ளும் குயுக்தியில் பயணிக்கிறது. படத்தின் இடைவெளி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதனின் வேட்கையில் நிற்கிறது. கனவு நசுக்கப்படுவதால் வஞ்சம் எழுகிறது. வஞ்சிக்கப்பட்டதற்காக பழி வாங்கும் வெறி உண்டாகிறது.
படத்தின் நாயகன் சேதுவாக மிரட்டியிருக்கும் சிம்ஹா. நேரம் படத்திலேயே தாதாவாக அவரது உடல்மொழியால் கலக்கியிருப்பார். இதில் முகபாவங்களிலிலும் தோரணையிலும் இன்னும் உக்கிரத்தைக் காட்டியுள்ளார். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவது ஒரு போதை என்கிறார் சேது. அந்த போதையில் இருந்து வெளிவராமல் இருக்க, ‘ஒருத்தனைக் கொன்னுட்டுத்தான் உள்ள வர்றோம்; நாம செத்தாதான் வெளில போக முடியும்’ என தனக்கு சாதகமாகக் காரணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால், சேது அதைவிட பெரிய போதையைக் கண்டடைந்ததும் அதிலிருந்து வெளி வருகிறான். அது “விரும்பப்படுதல்”.
இயக்குநராக விழையும் கார்த்திக்காக சித்தார்த். படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து வந்தாலும், தன்னலம் பெரிதாகக் கருதும் மிகச் சிறப்பான துணை நடிகராகத்தான் படத்தில் தோன்றியுள்ளார். அவர் சொன்னது போல, சில நல்ல படங்களில் தானும் இருக்கேன் என்ற சந்தோஷத்திற்காகத்தான் இப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது படம் பார்த்தால் தெரிகிறது. அவருக்கென வைக்கப்பட்ட காட்சியிலும் கருணாகரன்தான் ஸ்க்ரீனில் ஆக்கிரமிக்கிறார். நாயகனுக்கே இந்தக் கதி என்றால், நாயகியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? கொலை செய்யவில்லையே தவிர கார்த்திக், சேதுவைவிட ஆபத்தானவன். ‘என் கேரியரை அழிச்ச இல்ல; உன் வாழ்க்கையையே அழிக்கிறேன் பாரு’ என்று சித்தார்த் லட்சுமி மேனன், சிம்ஹா இருவரையும் பழிவாங்குகிறான். கோபத்தை வெளிப்படுத்துபவர்களைவிட மனதிற்குள் வைத்து, அதைக் காட்ட சமயம் தேடும் ஆபத்தானவனாக உள்ளான்.
ஓரிரு நொடிகளில் கடந்துவிடக் கூடிய காட்சிகளைக்கூட சமரசம் செய்யாமல் நிதானமாக நினைத்தது அனைத்தையும் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். படம் நெடுகவே மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கென பிரத்தியேகமான டீட்டெயிலிங் என படத்தைச் செதுக்கியுள்ளார். ஒரு காட்சியில் வந்தாலும் நாசரின் அறிவிஜீவி மனநிலை; நரேனையும் நாசரையும் சமாதானம் செய்பவரின் ஷோ முடியவேண்டுமென்ற பதற்றம்; சேதுவின் அடியாட்களினுடைய பலவீனங்கள்; ‘திண்டுக்கலையே ஆண்டா என்ன.. காலை சுத்தி வந்தவன் ஒருத்தனும் இப்போ வர்றலையே! இவர் செத்ததுக்கு சந்தோஷப்படுறவன்தானே அதிகம்’ என்று சேதுவின் இருத்தலையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வசனத்தால்தான் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. தானும் அப்படியொரு வேண்டப்படாதவன்தான் என்றும், விரும்பப்படுதலின் போதை பற்றியும் அங்குதான் சேதுவிற்குப் புரிகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரியும் படத்தின் மிகப் பெரிய பக்க பலம். சினிமாத்தனங்கள் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த படம் முடிவில் தமிழ் சினிமா போல்தான் முடிகிறது. சித்தார்த் துப்பாக்கியைத் தூக்கிப் போடுவது; சித்தார்த் விஜய் சேதுபதியை மிரட்டுவது, சிம்ஹா செளந்தரின் மனைவியை கல்யாணம் செய்து கொள்வதென கடைசியில் சில ஸ்டன்ட்கள் வைத்தால்தான் படம் முழுமையடையும் என நினைத்து விட்டார் போலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா – கார்த்திக் சுப்புராஜின் ‘சிம்ஹ’ தாண்டவம்.
[…] ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் […]