Shadow

தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

The Danish Girl Tamil Review

The Danish girl (A)

உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம் பெண்களின் உடை அணிந்து மாடலாக நிற்கச் சொல்கிறார். தன் மனைவிக்கு உதவ பெண்களின் உடையை அணியும் எய்னர், தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்குகிறார். பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.

2000 ஆவது ஆண்டு, எய்னரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு டேவிட் எபர்ஷோஃப் எழுதிய ‘தி டேனிஷ் கேர்ள்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்ட படமிது. புனைவு கலக்கப்பட்ட அவரது நாவல் அழகானதொரு காதலை முன்னிறுத்துகிறது. அக்காதலை, படம் நெடுகே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது லுசிண்டாவின் திரைக்கதை.

காதலித்து மணந்து கொண்ட கணவன், ஆறு வருடங்களாக அன்பும் நேசமும் இயைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘நானொரு பெண்ணாக என்னை உணர்கிறேன்’ என்று சொன்னால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? கெர்டாவாக அலிசியா விகேண்டர் அசத்தியுள்ளார். தன் கணவனுக்கு பெண் உடை அணிவித்து அழகு பார்க்கும் பொழுதும், கணவனின் மாற்றம் கண்டு வருந்தும் பொழுதும், கணவரின் பால் மாற்றுச் சிகிச்சைக்கு அவருக்குத் துணையாக இருக்கும் பொழுதும், அலிசியா பிரதிபலிக்கும் கெர்டாவின் ஆழமான காதல் நம்மைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்வது அசாத்தியமான காரியமாகிறது. அதனால் தான், கெர்டாவாக நடித்ததற்காக விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறார் அலிசியா.

இயற்கை நிலக்காட்சி ஓவியர் எய்னராக எடி ரெட்மெய்ன் கலக்கியுள்ளார். எய்னரின் மனக் குழப்பங்களையும், உள்மன ஆசையையும் அற்புதமாக தனது நடிப்பில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் எடி. தான் ஏற்கும் கதாபாத்திரங்களாக மாறி உள்ளிருந்து நடிக்கிறார் மனுஷன். தி தியரி ஆஃப் எவரிதிங் படத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கை எப்படி கண் முன் கொண்டு வந்தாரோ, அப்படி இந்தப் படத்தில் லில்லியை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். ஓவியர் எய்னரையும் மறந்து, பாதி படத்திற்கு மேல் எடியை ‘லில்லி’யாகத்தான் திரையில் காண்பீர்கள்; உணர்வீர்கள்.

இந்தப் படத்தை ரசிக்க உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. எய்னரின் அகத்தை தன் நடிப்பைக் கொண்டு எடி உணர்த்தினால், அலெக்சாந்தர் டெஸ்ப்ளட்டின் மனதை ஊடுருவும் பின்னணி இசை முழுப் படத்தையுமே நமக்குக் கடத்துகிறது. ஈவ் ஸ்டீவார்டின் கலை வடிவமைப்பும், பேகோ டெல்கோடாவின் உடை வடிவமைப்பும் 100 வருடத்து முந்தைய டென்மார்க்கிற்கே அழைத்துச் செல்கிறது. கதையின் கனத்தையும், அது உணர்த்தும் ஆழமான வலியையும் காதலையும் மீறி, படம் ஒரு விஷூவல் விருந்தென்றே சொல்லவேண்டும்.

எந்த மருத்துவருக்குமே எய்னரின் தவிப்பு புரிவதில்லை. மனப்பிறழ்வென்றே முத்திரை குத்துகின்றனர். ஒரே ஒரு மருத்துவர் மட்டும் காது கொடுத்துக் கேட்கின்றார்.

“நான் என்னைப் பெண்ணாக உணர்கிறேன்” – எய்னர்.

“நானும் அவரை அப்படித்தான் உணர்கிறேன்” – கெர்டா.

படத்தின் கதை நிகழும் வருடம் 1920களின் இறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான அறுவைச் சிகிச்சை, எய்னருக்கே முதல் முறையாக நிகழ்த்தப்படுகிறது. முடிவு எப்படி இருக்குமெனத் தெரியாது. ஆனால், எய்னருக்குள் வாழும் லில்லிக்கோ அச்சிகிச்சை மிக அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு எய்னரின் பால்ய கால நண்பன் மத்தியாஸ் ஸ்கூனார்ட்ஸும் ஆதரவாக இருக்கிறான். படம் கவிதையாகும் இடங்கள் இவையே!

லில்லிக்குக் கிடைக்கும் அன்பும் அனுசரணையும் காதலுமே படத்தைக் கொண்டாட காரணமாகிறது. அறுவைச் சிகிச்சை முடிந்ததும், லில்லி தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்கிறாள்.

“நான் என் அம்மா கையில் குழந்தையாக இருக்கிறேன். அவங்க என்னை லில்லின்னு கூப்பிடுறாங்க.”

இது எத்தகைய மகத்தானதொரு கனவென நிராகரிக்கப்படும் திருநங்கைகளாலே உணர முடியும். இயக்குநர் டாம் கூப்பர், அந்தக் கனவு சுமக்கும் ஏக்கத்தை படம் பார்க்கும் அனைவரையுமே உணரச் செய்து விடுகிறார். நாயகன் எடியும், இசையமைப்பாளர் அலெக்சாந்தர் டெஸ்ப்ளட்டும் படத்தைக் காவியமாக்கி விடுகின்றனர்.

‘நானொன்றும் சளைத்தவனில்லை’ என ஒளிப்பதிவாளர் டேனி கோஹன், இறுதிக் காட்சியில் தன் ரம்மியமான ஒளிப்பதிவின் மூலம், முழுப் படமுமே ஒரு விஷூவல் கவிதை தானென முடித்து வைக்கின்றார்.