Shadow

தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் திரைவிமர்சனம்

மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் காட்டுவதைக் குறிப்பிடலாம். இப்படியாக சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இருந்தாலும், மையக்கருவுடன் ஒட்டாமல் திரைக்கதை பயணிக்கிறது.

இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் வடிவேலு காட்டும் பரிதவிப்பான உடல்மொழிதான் அவரது பலமே! ஆனால் தெனாலிராமன் மதியூகி என்பதால்.. மிகப் பொறுமையாக எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருப்பதால் படத்தில் நகைச்சுவைக் காட்சிகளில் மிகுந்த வறட்சி காணப்படுகிறது. பெயரில்லா மன்னர் பாத்திரத்தில் மட்டும் வடிவேலு நடிக்காமல் போயிருந்தால், நம் பாடு மேலும் திண்டாட்டமாகப் போயிருக்கும்.

ரிஸ்க் எடுக்க விரும்பாமல் வடிவேலு, வெற்றிப் படமான 23ஆம் புலிகேசியை அதிகமாக நம்பித் தழுவியுள்ளதாகத் தெரிகிறது. 2006இல் அப்படம் வெளிவந்த பொழுது, அது மிகப் புதிய முயற்சியாக அனைவரையும் கவர்ந்தது. இம்முறை அதனினும் மிஞ்சிய ஸ்க்ரிப்ட்டாக தெனாலிராமன் வந்திருக்கணும். கதையின் நாயகனாக இல்லாமல், படமே வடிவேலு ஒருவருக்காக மட்டுந்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

Meenkashi Dixitஇளவரசி மாதுளையாக மீனாட்சி தீஷித். நாயகன் என்றால் நாயகியும் காதலும் இருந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்திற்காக வலிந்து திணிக்கப்பட்டவராகவே உறுத்துகிறார். அவரது காதலர் தெனாலிராமனாக நடிக்கும் வடிவேலுவைவிட, மன்னராக நடிக்கும் வடிவேலு இளமையாகவும் கலகலப்பாகவும் காட்சியளிக்கிறார். படத்தில் அவ்வளவு நடிகர் பட்டாளம் இருந்தும், பெரும்பாலான காட்சிகளில் வடிவேலு மட்டுமே திரையில் உள்ளார். ஆனால் தொழில்நுட்ப வேலைகள் மட்டும் நேர்த்தியாக அமைந்துள்ளது. முக்கியமாக ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு மிக பிரமாதம். கலை இயக்குநர் எம்.பிரபாகரின் ‘செட்’களும் அட்டகாசம். இந்த ஜானர் படங்களின் பலமே அதன் கலை இயக்குநர்தானே!

இயக்குநர் யுவராஜ் தயாளனிற்கு இது இரண்டாவது படம். சீனர்கள், அந்நிய முதலீடால் ஏற்படும் பாதிப்பு, குறுநில மன்னன் ராதாரவி என படத்தில் மன்னர் எதிர்க்கப்பட விஷயம் இருந்தும், அதில் அதிக அழுத்தம் தரப்படவில்லை. சொறி தவளை சூப், பல்லி வருவல் போன்ற சீன உணவிற்கு நாட்டு மக்கள் நான்கே மாதங்களில் மாறி விகட நகரத்து உணவுவிடுதியை மறந்து விடுகின்றனர். அந்நிய முதலீடை எதிர்த்து நாட்டு மக்களை விழித்தெழச் செய்து, மன்னரே நேரடியாக மக்களுடன் இணைந்து சீனர்களின் கடையை உடைத்தெறிகிறார். என்னக் கொடுமை இது? அதிகாரத்தில் இருக்கும் மன்னர் விழித்தெழுந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாதா? ‘நீங்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என என்ன அழகாக மக்களை குற்றவாளியாக்கி விடுகிறார் கிளர்ச்சியாளர் தெனாலிராமன்?

பானைக்குள் யானையை தான் நுழைத்து விட்டதாக அனைவரையும் நம்பவைத்து விடலாமென்ற வடிவேலுவின் நம்பிக்கைதான் ‘தெனாலிராமன்’ படம்.