Shadow

தெய்வத்திருமகள் விமர்சனம்

TTM

தெய்வத்திருமகள் – பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. “ஐ ஆம் சாம்” என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர்.

ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி ஒருவர் மணக்கிறார். கிருஷ்ணாவின் மனைவி இறந்து விட, தன் மகள் நிலாவை தனக்கு தெரிந்தவரை வளர்த்து வருகிறார் கிருஷ்ணா. நிலாவின் தாய் வழி தாத்தா, நிலாவை கிருஷ்ணாவிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை மீட்க அனுராதா ரகுநாதன் என்னும் வக்கீலின் உதவியுடன் நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார் கிருஷ்ணா. நிலா தன் தந்தையுடன் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

கிருஷ்ணாவாக விக்ரம். கந்தசாமி, ராவணன் போன்ற முந்தையப் படங்கள் போல் அல்லாமல் விரைந்து படமாக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. வழக்கமான நாயக பாணி படங்களை போல் அல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் நடைபெறுவதாக வரும் காட்சி ஒன்றில் நிலாவாக நடித்திருக்கும் சாராவுடனான சைகை பேச்சுகளில் விக்ரம் நெஞ்சை கனக்க வைக்கிறார் என்றால் மிகையில்லை. அனுபவசாலியான விக்ரம் போன்ற நடிகருக்கு சமமாக நடித்துள்ளார் ஐந்த வயது நிலாவாக வரும் ஆறு வயது சாரா.

வக்கீல் அனுராதா ரகுநாதனாக அனுஷ்கா. ஆடி, பாடி, காதல் பித்து பிடித்து அலையாத பாத்திரத்தில் வரும் நாயகிகள் தமிழ்த் திரையுலகில் அரிது. அந்த அரிதான வாய்ப்பு அனுஷ்காவிற்கு வாய்த்திருக்கிறது. அவருக்கும் அவர் தந்தையான வொய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே மலரும் பாசப் பிணைப்பு சரியாக காட்சிப்படுத்த படவில்லை. மைனா புகழ் அமலா பால், நிலாவின் பணக்கார சித்தியாக பாந்தமாய் வருகிறார். பள்ளியின் இளம் தாளாளராக அறிமுகமாகி ரசிக்க வைக்கிறார்.

அனுஷ்காவின் உதவியாளர் விநோத் ஆக சந்தானம். எப்பொழுதும் போல் படத்தின் கலகலப்பிற்கு உதவியாக உள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், விஜய் டி.வி. புகழ் ‘ப்ளாக்’ பாண்டி போன்றவர்களும் நகைச்சுவைக்காக உபயோகப்படுத்தப் பட்டுள்ளனர். ஒப்பாரும் மிக்காரும் இல்லா வக்கீலாக நாசரும்; தலைமுறை இடைவெளி தரும் வலிகளை சுமந்தவராக வொய்.ஜி.மகேந்திரனும் நடித்துள்ளனர்.

திரையரங்கம் விட்டு கனத்த நெஞ்சுடன் பார்வையாளர்கள் வர காரணமாக இருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அவலாஞ்சி கிராமமும், கலை இயக்குனரின் கைவண்ணத்தில் ‘சாக்டேட் ஃபாக்டரி’யும் அருமையாக திரையில் தோன்றுகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய். மதராசபட்டினத்தில் பல ஆங்கிலப் படங்களை நினைவுப் படுத்தியவர் தெய்வத்திருமகளில் ஒரே ஒரு படத்தை நினைவுப்படுத்துவது ஆறுதலான சங்கதி. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாக நீதிமன்றக் காட்சிகள் அரங்கேறுகின்றன. பொருளாதார அழுத்தத்தினால் உருவாகும் தியாக சீலனாக ஆறு வயது மனவளர்ச்சிப் பெற்றவரைச் சித்தரித்திருப்பது வேதனைக்குரிய முடிவாகும்.

தெய்வத்திருமகள்கிருஷ்ணாவின் மனைவி/நிலாவின் அம்மா.

பி.கு.: மாசடையாத ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தை நேசத்துடன் இருப்பது இயற்கையே. திருமகளாய் பிறந்து, சமூக சேவகியாய் பரிணாமித்து.. மன வளர்ச்சி நின்ற கிருஷ்ணாவை மணந்தது செயற்கரிய செயல்.

Leave a Reply