‘சிதறி விசையுடன் விழுதல்’ என தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
விஜய்குமார் நேர்மையான நல்ல காவல்துறை அதிகாரி. அவர் நீதியை நிலை நாட்ட கொடூரமாக ஒரு கொலை செய்து விடுகிறார். நல்லவனே கொலை செய்யும் போது, கெட்டவன் சும்மா இருப்பானா? ஒரு கொலைக்குப் பதிலாக நான்கு கொலைகள் என இலக்கு நிர்ணயித்து பழி வாங்குகிறார் வானமாமலை. நாயகன் கதியென்ன? வானமாமலை வதம் நடந்து தர்மம் வென்றதா? எதார்த்தத்தில் நிகழ்வது போல் அதர்மம் வென்றதா? முதலிய கேள்விகள் தான் படத்தின் கதை.
படத்தின் ஆச்சரியமும் அழகுமாக நிவி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நைனிகாதான். நைனிகா என்றால் அழகிய கண்களுடையவர் எனப் பொருளாம். சில ஃப்ரேம்களில் மீனாவை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம். நைனிகா ஆளும் ஃப்ளாஷ்-பேக்கிற்கு முன்னான ஆரம்ப காட்சிகள் சாரலில் நனைந்தது போல் இருக்கிறது. பின் தொடங்கும் வழக்கமான கதை சொல்லலில் இருந்து அயர்ச்சி ஏற்படுகிறது. இடைவேளைக்குப் பின் அது அதிகமாகி விடுகிறது.
விஜய் மீண்டும் அதகளம் புரிந்துள்ளார். யூகிக்க முடிந்த திரைக்கதையைக் கொஞ்சமேனும் சகிக்க முடிகிறதெனில் அதற்கு விஜய் மட்டும் காரணமே.! வழக்கமான வில்லனெனினும் இயக்குநர் மகேந்திரன், அவர் நம்பும் சினிமா பூச்சற்ற எதார்த்தத்தைக் கம்பீரமாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். மாஸ் ஹீரோ படத்தில், அதிர்ந்து பேசாத வில்லன் பேராச்சரியம். எந்தவித மெனக்கெடலும் இல்லாமல், அவரது பாத்திரத்தை ஒரு டம்மியாக அட்லி படைத்திருந்தாலும், தன் கம்பீரத்தை விட்டுத் தராமல் “குட் ஷோ” எனப் பிரமாதப்படுத்துகிறார் மகேந்திரன். எமி ஜாக்சன் ஊறுகாய் போலவும், சமந்தா நாயகனைக் காதலிக்கவும் தோன்றி மறைகின்றனர்.
தனது முந்தைய படமான ராஜா ராணி போலவே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை சரியாகப் பயன்படுத்தியுள்ளார் அட்லி. ராஜேந்திரன் இல்லாமல் இந்தப் படத்தை கற்பனை செய்தே பார்க்க முடியாது. அவரில்லையெனில், கடும் கோடையில் வெளியேற முடியாத அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கியதற்கு ஒப்பான வேதனை ஏற்பட்டிருக்கக்கூடும்.
தான் ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை இப்படத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார் இயக்குநர் அட்லி. பாடல் காட்சிகளில் கட்டடத்துக்கு வர்ணம் தீட்டியதாகட்டும், கெட்டவர்களின் மரணம் எப்படியிருக்கணுமென டிசைன் செய்ததாகட்டும், ஷங்கரின் தாக்கம் படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. சத்ரியன் அவுட்லைன், கஜினி படத்துப் பேருந்து காட்சி, என்னை அறிந்தால் அப்பா – மகள் அந்நியோன்யம் என பல படங்களையும் கண் முன் கொண்டு வருகிறது. ஆனால், ஷங்கரை விட பிரக்ஞை உணர்வு கொண்டவராக உள்ளார் அட்லி. ‘வன்முறை தவறுதான், ஆனால் எருமைக்குப் புரியும் மொழியில் பேசுவது வன்முறை ஆகாது’ என்ற வசனம் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் அட்லி. இருந்தாலும் மூன்றாம் வகுப்பு அரசு பள்ளி கரும்பலகையில் இருந்து விஜய் உருவும் கோளைக் கண்டால் மாணவர்களை நினைத்துக் கெதக் என்றெழும் பயத்தைத் தடுக்க முடியவில்லை. ரவுடியிசம் செய்வதை விட மூன்றாம் வகுப்பு பாடங்கள் கஷ்டமானது என அரசாங்கத்தின் பாடத் திட்டத்தை மிகத் தைரியமாக எள்ளி நகையாடியதற்கு அட்லியைப் பாராட்டியே ஆக வேண்டும்.