தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?’
“ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?” என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று ‘வுட்’களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் விஜய்.
கதையைக் கொஞ்சம் கேட்டதும், தமன்னா தேவியாகச் சம்மதம் தெரிவித்துள்ளார். கதையின் மீதான ஈர்ப்பைத் தவிர்த்து, பிரபுதேவா நாயகன் என்ற குதூகலமே அதற்குக் காரணம். பிரபுதேவாவை இதற்கு முன் ஒரே ஒருமுறை விமானத்தில் பார்த்துக் கை மட்டுமே அசைத்திருக்கிறார் தமன்னா.
“நானும், என் ஃப்ரெண்டும் ஒரு தடவை ஃப்ளைட்க்குள்ள போறோம். தூரத்தில் ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு கையசைச்சாங்க. நானும் பதிலுக்கு அசைச்சேன். நான் என் ஃப்ரெண்டிடம், ‘பார்த்தியா வெளிநாட்டினர் கூட எனக்கு ரசிகர்களா இருக்காங்க!’ என்றேன். ‘டேய்! அது தமன்னாடா’ என்றான்.
அப்படி ஃபாரினர் மாதிரி இருக்கும் தமன்னா எப்படி கிராமத்துப் பொண்ணா நடிக்க முடியும்னு எனக்குப் புரியவே இல்லை. விஜய்கிட்டக் கேட்டேன். பார்த்துக்கலாம் என்றார்.
“12 வருஷத்துக்குப் பின் தமிழில் நடிக்கிறேன். நல்லா நடிப்பதை விட, நல்ல பேர் எடுக்கணும்னு வேண்டிக்கிட்டு முதல் நாள் ஷூட்டிங் போனேன். எந்த யோசனையும் சொல்லாம வாயை வச்சுட்டு சும்மா இருக்கணும்; ஆர்.ஜே.பாலாஜி, தமன்னா, விஜய் ஆகியோரிடம் நல்ல பேர் எடுத்தா போதும்னு நினைச்சேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னா கிராமத்துப் பொண்ணாவே மாறிட்டாங்க. அதுக்கு 3 மணி நேரம் மேக்கப். ஒரு பாட்டுக்கு 2 நாள் ஷூட் போனோம்; அதுக்கு 20 நாள் ரிகர்சல் வந்தாங்க. செம டெடிகேட்டட் ஆர்டிஸ்ட்” என தமன்னாவைப் புகழ்ந்தார் பிரபுதேவா.
மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, ஒரே நாளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படமிது. படத்தின் முடிவுகள் மட்டும் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பது போல் வைக்கப்பட்டுள்ளதாம். மூன்று மொழிகளுக்கும் சேர்த்து 58 நாளில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து அசத்தியுள்ளார் இயக்குநர் விஜய்.
படத்தின் நாயகர்களில் ஒருவரான சோனி சூட், படத்தை ஹிந்தியில் வெளியிடுவதோடு, ஷாருக் கானைப் படத்தில் ‘டப்பிங்’ பேச வைத்தும், ஜாக்கி சானை ட்ரெயிலர் வெளியிட வைத்தும் படத்தின் இந்தி வெர்ஷன் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது கூடுதல் செய்தி.