Search

தொடரி விமர்சனம்

Thodari vimarsanam

தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு.

சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவியை இவ்வாறே சித்தரித்திருப்பார். இந்த மனைவிங்களே இப்படித்தான் என்ற வாய்ஸ்-ஓவர் வைக்காதது மட்டும்தான் குறை. அதையும், ‘கல்யாணம் வரை தான் காதல் இருக்கும்’ என நாயகனின் வசனத்தால் ஈடுகட்டி விடுகிறார்.

காட்சி ஊடகத்தை நன்றாக வறுத்தெடுத்துள்ளார் பிரபு சாலமன். ‘இந்தப் பாலம் இடிந்து விழுமா? விழாதா? ஸ்டே ட்யூண்ட்’ என தொகுப்பாளினி சொல்வதாகட்டும், தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் விவாத மேடையைக் கலாய்ப்பதாகட்டும், போதிய அவகாசம் எடுத்துக் கச்சிதமாக பகடி செய்துள்ளார். குறிப்பாக வெள்ளை உடையில் வரும் அனுமோகனைக் கொண்டு ஹெச்.ராஜாவை செமயாகக் கலாய்த்துள்ளார் பிரபு சாலமன். மத்திய அமைச்சராக வரும் டத்தோ ராதாரவியின் கதாபாத்திரம் அட்டகாசம். தனுஷை அவமானப்படுத்தும் ஹரிஷ் உத்தமனை ராதா ரவி அவமானப்படுத்தும் இடம் அற்புதமாக உள்ளது. முதற்பாதியில் வந்த ஒரே உருப்படியான காட்சி என்று கூட அதைச் சொல்லலாம்.

முதிர் கண்ணன் சந்திரகாந்தாக வரும் தம்பி ராமையாவை, முதல் பாதி முழுவதும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர். இடைவேளையின் பொழுது தான் கதைக்கே போகிறார் பிரபு சாலமன். 168 நிமிடங்கள் என்பது சற்றே அதிகம் இப்படத்திற்கு. பதைபதைப்பை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் பாட்டை வைத்துள்ளார். இரண்டாம் பாதியிலும், நகைச்சுவை என்ற பெயரில் கருணாகரன் தம்பி ராமையாவை மாட்டி விடப் பார்ப்பதெல்லாம் அதிகபிரசங்கித்தனம். ட்ரெயின் நிற்குமா? தடம் புரளுமா? எங்காவது மோதிச் சிதறுமா? என ட்ரெயினின் உள்ளே இருப்பவர்களுக்கே அந்த சீரியஸ்னஸ் இல்லையெனும் பொழுது, படம் பார்ப்பவர்களுக்கு வருமா? டி.ஆர்.எம். (DRM)- இன் கன்ட்ரோல் ரூமில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டும், இங்கே ட்ரெயினுக்குள் காமெடியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பூச்சியப்பனாக தனுஷ் பேசியபடியும், ஃபீல் செய்தபடியும் உள்ளார். மலையாளி சரோஜாவாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஊடகங்களை வைத்துச் செய்தது போல், மலையாளிகளையும் ஒரு கை பார்த்து விடுகிறார் இயக்குநர். அமைச்சரின் மெய்க்காப்பாளர் நந்தகுமாராக வருபவருக்கு ஏதோ மன நலப் பிரச்சனை போலும். மாத்திரை எடுத்துக் கொண்டாலும், எப்பொழுதும் கொதிப்பான மனநிலையிலேயே உர்ரென வன்மத்தைக் காட்டியபடி இருக்கிறார். கதைப்படி அந்த மெய்க்காப்பாளர் ஒரு மலையாளி ஆக்கும். மன அழுத்தத்தில் உழலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஹரிஷ் உத்தமன் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். படத்தில் இருக்கும் இன்னொரு மலையாளியான நாயகியை நாயகன் ‘லூசுடி நீ’ என்றே முகத்திற்கு நேராக விளிக்கிறார்.

சுருளியின் காதலைப் போல், பூச்சியப்பனின் காதல் அவ்வளவு தீவிரமாக இல்லாதது, படம் தர வேண்டிய தாக்கத்தைக் குறைத்து விடுகிறது. தொடரி தடம் புரளா விட்டாலும், படத்தின் தொடக்கத்தில் இருந்தே திட்டவட்டமான தடத்தில் திரைக்கதை பயணிக்காததால், சிரமப்பட்டே ஸ்டேஷனை அடைகிறது.