ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.
அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. என்பதற்கு எல்லாம் பதில் திரையில்.
தற்காலிகமாக நினைவிழுக்கும் ப்ரேமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். செப்டம்பரில் சுந்தர பாண்டியன், அக்டோபரில் பீட்சா, நவம்பரில் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் என இந்த வருடத்தின் முடிவு அவருக்கு நிறைவாய் அமைந்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘தென்மேற்கு பருவக் காற்று’ என்னும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மிக சிலருக்கு தான் இப்படிப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையும். அந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர். ராசியான நடிகர் என முத்திரை குத்தப்பட்டு, கன்னாபின்னா படங்களில் நடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாமல் இருக்கணுமே என்ற கவலை எழுகிறது.
மேலே உள்ள படத்தில் கையில் சிகரெட்டுடன் இருப்பவர் பக்ஸ் (எ) பகவதி பெருமாள். அவரது இயற்பெயரும் அதுவே. படத்தின் முதல் பாதி கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார். பவுலிங் செய்து விட்டு பஜ்ஜியை (டீ கிளாஸ் வைத்திருப்பவர்) வெறுப்பேற்றும் பொழுதும், ஸ்கேனில் என்னத் தெரியும் என்று விளக்கும் பொழுதும், டாக்டரிடம் என்ன நடந்தது என்று சொல்லும் பொழுதும், ப்ரேமின் காதலியிடம் ஃபோனில் சமாளிக்கும் பொழுதும் ரசிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் முகம் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் முகம் மலர தொடங்கி விடுகிறது. ஆனால் ஏனோ இரண்டாம பாதியில் அடக்கி வாசிக்கிறார்.
ப்ரேமின் நெருங்கிய நண்பராக கையில் ஃபோனுடன் இருக்கும் சரஸ். கதைப்படி இரண்டாவது நாயகன் என சொல்லலாம். எனினும் மற்ற மூவரை போல லகுவாக மனதில் பதிய மாட்டேங்கிறார். பஜ்ஜி (எ) பாலாஜியும், பக்சும் இணைந்து படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். பக்ஸைப் போலன்றி இரண்டாம் பாதியிலும் தனது அட்டகாசத்தை தொடர்கிறார். ப்ரேமின் காதலி தனலட்சுமியாக காயத்ரி. முதல் பாதியில் பெயராக மட்டுமாகவும், இரண்டாம் பாதியில் மணப்பெண்ணாகவும் வந்து மறைகிறார்.
நண்பர்கள் நால்வரின் குணாதிசயங்களையும், தலைப்பைத் தொடர்ந்து பெயர் பொடும் பொழுதே மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தி உள்ளனர். பிரதான பாத்திரங்களான இவர்களை தவிர்த்து, மற்ற பாத்திரங்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஏனோ தானோ என வந்து செல்கின்றனர். உதாரணத்திற்கு மருத்துவமனையில் பணி புரியும் நர்ஸ், மணமக்களின் பெற்றோர். அப்படியும் சலூன் கடையில் பணி புரிபவரும், நாயகனின் அத்தை மகன் சதீஷாக வருபவரும் ஒரே ஒரு காட்சியில் தோன்றி அசத்துகிறார்கள். ‘என்ன சிவாஜி செத்துட்டாரா?’ என்று நகைச்சுவைக்காக ஒரு வசனம் வருகிறது. அதுவே ப்ரேமிற்கு மறந்திருக்கும் பட்சத்தில், நான்கு வருடத்திற்கு முன்னர் அறிமுகமாகும் பக்ஸ் என்ற கதாபாத்திரத்தையும் லாஜிக்படி மறந்திருக்க வேண்டும். அதே போல் ஃப்ரேமில் சில நொடிகள் தோன்றும் துணை பாத்திரங்களை என்ன செய்ய வைப்பது என்று தெரியாமல் கோட்டை விட்டுள்ளனர். ஆனால் எதுவும் படத்தின் மீதான கவனத்திலிருந்து விலக்கும் அளவு இல்லை. படத்தின் பலம் ஜாலியான வசனங்கள். விஜய் சேதுபதி அடுத்த என்ன வசனம் பேச போகிறார் என படம் பார்ப்பவர் அனைவருக்கும் அத்துபடியாக தெரிகிறது. ஆனால் பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றி விடுவதால் அவர்களும் சேர்ந்து சொல்ல தொடங்குகின்றனர். ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதி நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். ஒரே வசனம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், நண்பர்கள் மூவரின் முக மாறுதல்களைக் கொண்டு இயக்குனர் அழகாக சமாளித்து பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் பாலாஜி. உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது என டிஸ்கியை தொடக்கத்தில் போடாமல், ஜாலியாக படம் முடிந்ததும் புகைப்படங்கள் மூலம் சொல்கின்றனர். அந்த உண்மை சம்பவத்து நிஜ ப்ரேம் தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது படத்தின் கூடுதல் சிறப்பு. ‘மதுபான கடை’ பட இசையமைப்பாளரான வேத்ஷங்கர் தான் இப்படத்திற்கு ஒலிப்பதிவு. படத்துடன் முழுவதும் ஒன்ற முடிவதற்கு இவரது இசை மிக முக்கிய காரணி.
2007 இல், ‘சென்னை 600028’ வெளிவந்த பொழுது ஏற்படுத்திய வியப்பையும், ஆச்சரியத்தையும் ரசிகர்களுக்கு இப்படமும் அளிக்கும். இந்தப் படமும் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றினில் இருந்தே தொடங்குகிறது. ஆனால் சென்னை 600028 தொட்டு செல்லும் காதல், பாடல்கள் என்ற பாரம்பரிய திரைப்பட சங்கதிகளையும் துறந்து.. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தமிழ்த் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் தனித்து நிற்கிறது.