Shadow

நம்பியார் விமர்சனம்

Nambiyaar Thirai vimarsanam

ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை.

குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள்.

ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்டு ஸ்ரீகாந்த் செய்யும் அலப்பறை ரசிக்கும்படி உள்ளது. சுனைனாவின் தந்தையாக வரும் டெல்லி கணேஷ் சிறிது நேரம் வந்தாலும் அசத்துகிறார்.

‘மைண்ட் கேம்’ என ஸ்ரீகாந்த் தன் செயற்பாடுகளைச் சொல்லிக் கொண்டாலும், அனைத்தும் மொக்கையான எண்ணங்களாக இருப்பதால் படம் மீது ஈர்ப்பு ஏற்பட மாட்டேங்கிறது. இயக்குநர் கணேஷா எடுத்துக் கொண்ட கருவில் இருக்கும் புதுமையும் சுவாரசியமும், திரைக்கதையில் இல்லாதது பெரும் குறை. விஜய் ஆண்டனியின் இசை படத்தின் சுவாரசியத்திற்கு உதவுகிறது. “ஆற அமர” என்ற பாடலின் மூலம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் சந்தானம்.

தேவதர்ஷினி வழக்கம் போல், தான் தோன்றும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். நாயகனின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷ்க்கு அழுத்தமான காட்சிகள் அமையாவிட்டாலும், மகனிடம் பேசும் இறுதிக் காட்சியில் ஸ்கோர் அள்ளி விடுகிறார். ஆனால், நாயகனின் அம்மாவாக வரும் வனிதாவிற்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

நம்பியார் என்பது அழகான குறியீடாக இருந்தாலும், படத்தில் காட்டப்படும் உருவகம் சந்தானத்தின் இயல்புக்குத்தான் பொருந்துகிறது (இதே நாளில், ஆகஸ்ட் 19, வெளியான ‘யானைமேல் குதிரை சவாரி‘ படத்தில் ஸ்த்ரீ லோலன் பாத்திரத்தில் வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன், தன் பூஜை அறையில் நம்பியார் புகைப்படத்தை வைத்து பூஜிப்பார்). எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் க்ளைமேக்ஸை வைத்துள்ளது ரசனையான முடிவு. எண்ணங்களிடமும் பேசியே “அதை”த் திருத்தும் அசாத்திய திறமை தமிழ்ப்பட ஹீரோக்களுக்கே உரித்தான சிறப்பு.