தம்பியோடு வாழும் ஏழைப் பெண்ணின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள்தான் படத்தின் கதை.
‘கதை தான் என் படத்தில் ஹீரோ’ என இயக்குநர் முடிவு பண்ணதால், நாயகன் இல்லாப் படமிது. அக்குறையைத் தீர்க்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘வழக்கு எண்’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி என நான்கு கதாபாத்திரங்களைக் கொண்டு ஒப்பேத்தியுள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனும் காமெடி வில்லன்கள். தன் பட்டுத் தறியில் வேலை செய்யும் பெண்களைப் படுக்கைக்குக் கூப்பிடுவது ‘காமெடி’யாம், விருப்பமில்லா நாயகியை அடைய நினைப்பது வில்லத்தனமாம். முத்துராமனுக்கும் படத்தில் அதே கதாபாத்திரம்தான். ஆனால், நம்பியாரை வழிபடும் இவர் சோலோ காமெடி வில்லன்; சுவாமிநாதனும் ராஜேந்திரனும் ஜோடி.
படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துபவராக கிருஷ்ணமூர்த்தி மட்டுந்தான் படம் நெடுகே பயணிக்கிறார். படத்தின் முடிவில் அதற்குமொரு முற்றுப்புள்ளி வைத்து, படத்தின் போக்கையே தலைகீழாக்கி விடுகிறார் இயக்குநர் கருப்பையா முருகன். ‘ஏழையா பிறந்தது ஒரு குத்தமா? அழகா இருந்தும் பாதுகாப்பில்லையே!’ என நினைக்கும் நாயகியாக கன்னடத்து அர்ச்சனா சிங். படத்தின் தொடக்கத்தில், அவரது அழகின் மீது அவருக்குக் கர்வம் இருந்தாலும், அழகை விட பணம் முக்கியமெனக் காதலனாகப்பட்டவன் உணர்த்தி விடுகிறான்.
இயக்குநரே ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் வரும் ஒரே நல்ல ஆண் இவர்தான். ‘நிராதரவாய் இருக்கும் அத்தைப் பெண்ணைத் தான் கட்டுவேன். கல்யாணத்தன்று தான் அவள் முகத்தைப் பார்ப்பேன்’ என லட்சியத்தோடு வாழ்பவர். லட்சியவாதிகளை உலகம் நிம்மதியாக வாழ விடுமா? இவருக்கு எதிர்மாறான சுனில் குமார் எனும் பாத்திரத்தில் மிப்பு நடித்துள்ளார். ‘காதலிக்க ஒரு பெண்; கல்யாணத்துக்கு ஒரு பெண்’ என மிப்புக்கும் ஒரு லட்சியமுண்டு. அதன் மூலம், படிக்கிற வயதில் காதலெதுக்கு என இயக்குநர் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார்.
‘யானைமேல் குதிரை சவாரி’ என்ற பெயர் போடும் பொழுது வரும் பாடல் ரசிக்க வைக்கிறது. கருப்பையா முருகனின் வசனங்கள் சோடை போனாலும், டைட்டில் சாங் ரசிக்கும்படி உள்ளது. தாஜ் நூர் இசையமைத்துள்ளார்.
‘பெரியவர் சிறியவர் என யாருமே இல்லை. பணமே பிரதானம்’ என டைட்டில் சாங்கில் ஒரு வரி எழுதியிருப்பார் இயக்குநர். படத்தின் மைய கரு இதைச் சுழன்றே கட்டமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் காட்சிக்குப் பின் வரும் வசனம் மிகக் கவித்துவமாக உள்ளது. படம் தந்த ஒட்டு மொத்த அலைக்கழிப்பையும் மறக்கடிக்கச் செய்யும் வசனத்தோடு படம் முடிவது ஆறுதல்.