பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் “பிதிர்லோகம்” என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.
காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய “தேவஸ்தான்” என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் “பிரம்மலோகம்” என்றும் “ஹிரண்யலோகம்” என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.
காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக்கப்படுகிறது.
மனிதன் ஏழு அம்சங்களைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
அவையாவன..
ஆத்மா – Will
புத்தி – Intuition
மனசு – Intellect
கிழ்மனசும் காமரூபமும் – Lower manas and desire body
ஆவி இரட்டை வடிவம் – Etheric Double
பிராணன் – Life Force
ஸ்தூல சரீரம் – Physical body
(ஸ்ரீசங்கரர் மனதை அந்தக் கரணம் என்று விபரிக்கின்றார். அந்தக் கரணமானது அகங்காரம், புத்தி, மனசு, சித்தம் என்னும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்)
இவைகளின் கீழ் மூன்று அம்சங்களும் சட உலகில் அழிந்து விடுகின்றன. ஏனைய நாலு அம்சங்களுடனேயே காமலோகத்தில் மனிதன் காலடி எடுத்து வைக்கிறான்.
காமலோகத்தில் அவன் தங்கியிருக்கவேண்டிய காலம் அவனுடைய காமரூபம் எத்தகையதோ அதைப்பொறுத்திருக்கிறது. கீழ்த்தரமான இச்சைகளும் அசைகளும் கீழ் மனதில் உதித்து அவனுடைய காமரூபத்தை உருவாக்குகிறது. அவனுடைய ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் ஏற்பவே அவனுடைய காமலோக அனுபவங்கள் அமையும்.
ஆன்மீக உயர்வு பெற்றவர்களும் பூவுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவர்களும் இந்நிலையை மிக விரைவாகக் கடந்து விடுவார்கள். பலவித ஆசைகளுக்கும் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்களும் கொடிய பாபங்களைப் பரிந்தவர்களும் இங்கு நிண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் காமலோகத்தின் ஏழுபடி நிலைகளையும் கடந்தேயாக வேண்டும். விரைவில் கடந்து செல்வதும் அங்கு தாமதித்துச் செல்வதும் அவரவர் இங்கிருந்த பொழுது அடைந்த பெறுபேறுகளைப் பொறுத்திருக்கிறது.
முதலாவது எலிசபெத் மகாராணியார் தனது நாட்டை அபரிமிதமாக நேசித்த காரணத்தால் காமலோகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து நாட்டின் நலனுக்காக தான் வரித்த திட்டங்களை தனக்குப் பின் அட்சியில் இருந்தவர்களின் மனதில் பதியவைக்க முனைந்து கொண்டிருந்தார் என்றும் நீண்டகாலம் காமலோகத்தில் தங்கிய காரணத்தால் அவருடைய எண்ணங்கள் மெல்ல மெல்ல மறக்கப்பட்ட நிலையில் தனது எண்ணங்களை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே காமலோகத்தைக் கடந்து சென்றார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்மாறாகவிருந்தது விக்ரோறியா மகாராணியாரின் நிலை. இந்த அம்மையார் மனச்சுத்தமுடையவராய் இருந்த காரணத்தாலும் அவர் இறந்தபின் அவருடைய தேசமக்கள் அவரை அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தபடியாலும் அவருடைய சூட்சும சரிரத்தில் மக்களின் அன்புநிறைந்த சிந்தனை அலைகள் நல்விளைலுகளை ஏற்படுத்தியதன் பயனாகவும் அவர் வெகுவிரைவில் காமலோகத்தைக் கடந்து சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
சூட்சும உலகில் நேரக்கணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவது உதாரணமாக நித்திரையில் இருந்து கண்விழிக்கும் பொழுது நாம் நித்திரையில் இருந்தது நீண்டநேரமோ அல்லது குறுகிய நேரமோ என்பதை எமது உணர்வு எமக்குத் தெரியப்படுத்தி விடுகிறது. அதைப்போலவே சூட்சும உலகில் கழியும் காலம் உணர்த்தப்படுகிறது.
மனஅடக்கமின்றி இழுத்தபக்கமெல்லாம் இழுபறிப்படடுக் கொண்டு இங்கு வாழக்கை நடத்தியவர்கள் மறுவுலுகிலும் தமது ஆசைகளுக்கு வடிகால் தேடிக்கொண்டு சடஉலகுக்கு அண்மையிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களை எல்லையில் வாழ்பவர்கள் (Denizens of the border) என்று தத்துவஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தமது ஆசைகளை துறக்கமுடியாமலும் ஸ்தூல சரீரம் இல்லாதபடியால் அவைகளை அடைய முடியாமலும் மிகத்துன்பப்டுவார்கள். காலக்கிரமத்தில் இயற்கையின் தூண்டுதல் அவர்களை மெல்ல மெல்ல மேலே தூக்கி விட்டு விடுகிறது. தங்கள் ஆசைகளை மறந்து அவைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயற்கையின் நடைமுறை ஏதுவாகிவிடுகிறது. ஆனால் இதற்கு நீண்டகாலம் செல்கிறது.
மனோதிடம் (will power) உள்ளவர்கள் ஆசைகளை இலகுவில் களைந்து எறிந்துவிட்டு மேல்படிக்குச் சென்று விடுகிறார்கள். சடவுலகில் என்றாலென்ன, சூட்சும உலகில் என்றாலென்ன, மனோதிடம் மனிதனை நிச்சயமாக முன்னேற்றுகிறது. ஆன்மீக உயர்ச்சிபெற்ற சுயநலமற்ற சுத்த ஆத்மாக்கள் இந்த நிலையைக் கடக்கும்பொழுது அவர்களுக்கு பூரணமான விழிப்பு நிலை ஏற்படுவதில்லை. கனவுக்கும் நித்திரைக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்துகொண்டு கடந்துவிடுகிறார்கள்.
காமலோகம் மனிதனின் கர்மவினைகளுக்கேற்ப ஏழுபடிநிலைகளாக வகுத்துக்கூறப்படுகிறது. கீழ்ப்படி நிலை தான் நரகம் எனப்படுகிறது. கொடிய பாபங்களைச் செய்தவர்கள் இந்நிலையிலிருந்து விவரிக்கமுடியாத துன்பநிலையை உணர்வினால் அனுபவித்துக் கொண்டிருப்பர். நரகத்தில் “நெருப்பில் இட்டுப் பொசுக்கவார்கள்” என்றும் “கழுவில் ஏற்றுவார்கள்” என்றும் கூறப்படும் காரியங்கள் எல்லாம் இந்நிலையில் உள்ளவர்களின் மனோநிலையை விபரிப்பதற்காகக் கூறப்பட்ட வர்ணனைகள். இந்நிலையானது தாங்கொணாத் துன்பத்தையும் வேதனையையும் அணுபவித்துக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வு நிலையே ஒழிய வேறெதுவுமில்லை.
கிரேக்க புராணக் கதைகளில் தாந்தலஸ் (Tantalus) என்ற மன்னன் தனது மக்களுக்குப் பல கொடுமைகளை இழைத்த காணத்தால் நரகத்தில் உழன்றான் என்று கூறப்படுகிறது. நரகத்தில் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்ற இடததில் தான் தாந்தலஸ் நீருக்கு அருகில் நிறுத்தப்படுவான். தாகமேலீட்டால் அவன் நீரை அள்ள எத்தனிக்கும் பொழுது நீர் கைக்கு எட்டாமல் போய்விடுமாம். கனிகள் நிறைந்த மரங்களின் கீழ் நின்றவாறு பழங்களைப் பிடுங்க முற்படும்பொழுது மரக்கிளைகள் விலகிவிடுமாம்.
இதேபோல் சிசிவஸ் (Sisyphus) என்ற பெயருடைய கொறிந்த் மாகாணத்தை ஆண்டமன்னன் தான்புரிந்த பாபங்களுக்காக மலையின் உச்சியை நோக்கிப் பெரிய பாறையை உருட்டிக் கொண்டுபோவதும் அது கீழே உருண்டு வந்துகொண்டேயிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தும் மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டேயிருக்கும் படியான தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தான் என்றும் கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.
– தோழி