Shadow

நல்ல கடவுள்!!

God கடவுள்

“தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?”

“இதோ வந்துடும். போயிடலாம்”

“போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க.”

“சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்” என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார்.

கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், “தாத்தா.. தாத்தா பஸ் வந்துடுச்சு” என்று முக்கில் திரும்பும் பேருந்தை கை காட்டி குதித்து மகிழ்ந்தான்.

பேரனை தூக்கி பேருந்தின் முதல் படியில் வைத்துக் கொண்டே, “நல்ல மனசோடு எது சாமிகிட்ட வேண்டிக்கிட்டாலும் அது கண்டிப்பா நடக்கும்” என்று சொன்னார்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்தவாறு அமர்ந்திருந்தவர் பயணச்சீட்டு எடுத்த சில நிமிடங்களில் நன்றாக உறங்கி விட்டார். திடீரென்று எழுந்த பெரும் ஓசையைத் தொடர்ந்து, தூக்கி எறியப்பட்டார். இடுப்பில் சரியான அடிப்பட்டிருந்தது. ஒருவாறு சமாளித்து எழுந்தவர் கண்களில் பேருந்தும், சுமையுந்தும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து நடந்திருந்தது. மெது மெதுவாக அழு குரல்கள் எழத் தொடங்கின. பேரனை நினைத்து பதறியவர் அங்கும் இங்கும் தலையைத் திருப்பி தேடினார். அவரை நோக்கி அவர் பேரன் மகிழ்ச்சியில் தாவி குதித்து வந்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு ஒன்னும் அடிபடலியே!!”

அதை கவனிக்காத சிறுவன், “எனக்கு ரொம்ப அவசரமா ‘சூச்சூ’ வந்துடுச்சு. பஸ்ச நிறுத்த சொல்லி கடவுள்கிட்ட வேண்டினேனா, உடனே என்னை பஸ்சிலிருந்து தூக்கி கீழப் போட்டுட்டார்” என்று மகிழ்ச்சி குறையாமல் சொன்னான்.