Search

பாபநாசம் விமர்சனம்

பாபநாசம் விமர்சனம்

தன் குடும்பத்தை உலகமாக நினைத்து வாழுபவர் அண்ணாச்சி சுயம்புலிங்கம். அந்த சின்னஞ்சிறு உலகத்தில், அழையாத விருந்தாளி ஒருவரால் சிக்கலொன்று ஏற்படுகிறது. அச்சிக்கலால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்படி சுயம்புலிங்கம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

படத்தின் முதற்பாதி, அதன் மூலமான மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆர்ப்பட்டமில்லாத காட்சிகளாய் நகர்கின்றன. அதை கலகலப்பாக்குவது எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களே. அங்காடித் தெரு படத்துக்குப் பின், இப்படத்திற்கே கைதட்டல்களைப் பெறுகின்றன அவரின் வசனங்கள். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புக்கு உதவிய எழுத்தாளர் சுகாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷ்யத்தின் ஜோர்ஜ் குட்டி முகத்தில் எந்த பாவனையும் காட்டாதவர்; மன்னிப்பைக் கூட, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கலங்காமல் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் கை கட்டிக் கேட்பவர். மாறாக பாபநாசத்தின் ஒட்டு மீசை சுயம்புலிங்கமோ, ‘பாசமலர்’ படம் பார்க்க நேரிடும் பொழுதெல்லாம் அழும் இளகிய இயல்புடையவர். த்ரிஷ்யத்தின் ஜோர்ஜ் குட்டி, “என் குடும்பம் தகர்ந்து போகாமல் இருக்க எதுவும் செய்வேன்; எங்கள் முன் சரிகள் மாத்திரமே உண்டு” என்பார் ஜோர்ஜ் குட்டி. சுயம்புலிங்கமோ, தன் செயலை எண்ணி அழுது கைகளைக் கூப்பி கண்ணீர் சிந்தும் சாமானியராக உள்ளார். த்ரிஷ்யத்தை பாபநாசம் மிஞ்சும் இடம் இதுவே.! சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்காமல், கண்களால் மன்னிப்புக் கோரும் கமல் எனும் கலைஞனின் விஸ்வரூபம் வெளிப்படும் காட்சியும் அதுவே.! பாபநாசம் எனும் தலைப்பு இப்படத்திற்கு கன கச்சிதமாகப் பொருந்துகிறது.

படத்தோடு ஒட்டாமல் வரும் ஜீவனாக உள்ளார் கெளதமி. சோகை படிந்த தோற்றத்துடன் காட்சியளிப்பவர், தன் பதற்றத்தையோ மன உணர்வுகளையோ பார்வையாளர்களுக்குக் கடத்தாதவராக உள்ளார். இக்குறையை, சுயம்புலிங்கத்தின் இளைய மகளாக நடித்திருக்கும் எஸ்தரும், மூத்த மகளாக நடித்திருக்கும் நிவேதாவும் ஈடு செய்கின்றனர். ஐ.ஜி. கீதா பிரபாகராக அசத்தியிருக்கும் ஆஷா சரத்தை விட, அவரது கணவராக நடித்திருக்கும் அனந்த் மகாதேவன் அதிகமாக ஈர்க்கிறார். எஸ்தரும் ஆஷா சரத்தும், தென்னிந்திய மொழிகள் நான்கில், மூன்று த்ரிஷ்யத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தவிர, வேறொருவரையும் அக்கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதது காரணமாக இருக்கலாம்.

அதிகாரம் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரால், ஒரு குடும்பம் எந்த அளவு பாதிக்கப்படும் என்ற நிதர்சனமும், தொழில்நுட்பம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற எதார்த்தமும்தான் ஜீத்து ஜோசப்பினுடைய திரைக்கதையின் வெற்றி. அதனால்தான் அவரது த்ரிஷ்யம், 4 இந்திய மொழிகளில் மீள் உருவாக்கம் பெற்றுள்ளது. தமிழிலும் அவரே இயக்கியுள்ளது கூடுதல் சிறப்பு.