மம்பட்டியான் – 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட்.
சின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது தான் எடுத்தாச்சு.. அப்படியே ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் பணக்காரர்கள்களை எல்லாம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவ முடிவு செய்கிறார். காட்டுக்குள் பதுங்கி இருக்கும் மம்பட்டியான் சட்டத்தின் நீண்ட கைகளில் சிக்கினாரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
பெண் சிங்கம், இளைஞன் எனத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்தாலும் மீரா ஜாஸ்மினை ரொம்ப நாட்களுக்கு பிறகு திரையில் காண்பது போலுள்ளது. அவரது பிரத்யேகமான துள்ளலான நடிப்பை எதிர்பார்த்தால் ஏமாந்து தான் போகணும். அவரது உருவத்திலும், படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திலும் முதிர்ச்சி தென்படுகிறது. எனினும் இப்படத்திலும் பாரம்பரிய நாயகிகளுக்கு உரிய வேலையைத் தான் செய்கிறார். 28 வருடங்களுக்கு முன் வந்த மம்பட்டியானில் சரிதா நாயகியாக நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் போலவே ரொம்ப நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறார் வடிவேலு. ஆனால் சொல்லிக் கொள்ளும் படியாக அவருக்கு நகைச்சுவைக் காட்சிகள் அமையவில்லை.
‘பொன்னர் சங்கர்‘ படத்திற்கு அடுத்து தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம். இம்முறை கதை, திரைக்கதை, வசனம், கலை என சகலமும் அவரே. ஒற்றைக் குதிரை பூட்டப்பட்ட கட்டை வண்டி, மம்பட்டியான கழுத்தில் அணிந்திருக்கும் பெயர் பதித்த பதக்கம், சிறப்புப் படை அதிகாரிகள் தங்கும் முகாம்கள், போலி மம்பட்டியான் கள்ள சாராயம் காய்ச்சும் இடம், ஐய்யனார் சிலை, பிரஷாந்த் தன் மீது போர்த்திக் கொண்டிருக்கும் கருநிறப் போர்வை என படத்தில் கலை வேலை நன்றாக உள்ளது. போலீஸ் முகாம்களில் இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற நேரடியாக மம்பட்டியான் செல்லும் காட்சிகள் நம்ப முடியவில்லை எனினும் சுவாரசியமாக உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலை மீதே எடுக்கப் பட்டுள்ளது. வெண் மேகங்கள், அவற்றின் பிரதிபலிப்பைக் காட்டும் சலசலத்து ஓடும் காட்டாறு, சிற்றருவிகள் என ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு குறிஞ்சி நிலப் பகுதியைச் சுற்றி சுற்றி காட்டுகிறது. மைனா படத்தில் காண்பிக்கப்பட்ட மலைப் பகுதிகளை நினைவுப் படுத்தாதது மேலும் விசேஷம்.
பிரஷாந்த் நாயகனாக நடித்ததோடு மட்டுமின்றி VFX Director ஆகவும் படத்தில் பணி புரிந்துள்ளார். அவரது முகமும், தோள்களும் முன்பை விட பெரிதாக இருப்பது போல் தோன்றினாலும் அவரது நடிப்பு இன்னும் அப்படியே உள்ளது. படத்தின் தலைப்புப் பாடலான, ‘காட்டு வழிப் போற பொண்ணே..’ பாடலை தியாகராஜன் பாடியுள்ளார். இதே பாடலை அதன் மூலப் படத்தில் இளையராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமனின் இசை படத்திற்கு உதவுகிறது எனினும் குறிப்பிட்டு சொல்ல ஏதுமில்லை. பிரகாஷ் ராஜ் அதிகம் அலட்டிக் கொண்டு நடிக்காமல் இயல்பாய் வருவது நன்றாக உள்ளது எனினும் தனது வசனத்தில் மறக்காமல் ‘செல்ல்’த்தைச் சேர்த்துக் கொள்கிறார். படத்தின் முடிவை ஏற்கனவே யூகிக்க முடிவதாலும் (தெரிந்திருப்பதாலும்) இறுதிக் காட்சிகளில் வரும் சண்டை நீளமாக இருப்பது போன்ற உணர்வினைத் தருகிறது.