Search

மூடர்கூடம் விமர்சனம்

moodar koodam

உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.

சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.

வெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் நாயகன் என இவரை மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளலாம். இவருக்கு ஜோடியாக சிந்து ரெட்டி சில நிமிடங்கள் தோன்றி மறைகிறார். தாடி வைத்த முகத்துடன் வரும் குபேரன் சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கிறார். ஒரு வீட்டிற்குள் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது என்றாலும், படத்தின் இறுதியில் ஃப்ரேம் முழுவதையும் ஆட்கள் நிரப்பிக் கொள்கிறார்கள். 

சென்ட்ராயன். படம் இவரை நம்பி தான் எடுக்கப்பட்டிருக்கிறதோ என சந்தேகம் கொள்ளும்படியாக அசத்தியுள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடுபவராகவும், ரெளத்திரம் படத்தில் வில்லனாகவும், சுண்டாட்டம் படத்தில் நாயகனின் நண்பனாகவும் கலக்கியிருப்பார். பள்ளி பருவத்தில் தனக்கு கிடைத்த தண்டனையை, திருட போன வீட்டில் அனைவருக்கும் தருவது சுவாரசியம். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதால், அதிக ரிஸ்க் இல்லாமல் பெரும்பாலான காட்சிகளையே இவருக்கே வைத்துள்ளனர் போலும். முக்கியமாக ஓவியாவைப் பார்த்து மாறும் இவரது முக பாவனைகளை சொல்லலாம். 

‘ஜாப் எத்திக்ஸ்’ என பந்தாவாய் வந்து கழிப்பறையில் சிக்கும் திருடன், பம்பாய் தாவூத் சென்னையில் தொடங்கும் கிளையின் நிர்வாகி, ஐஸ்க்ரீம் வேண்டுமென ஃபோனை அட்டென்ட் செய்து கேட்கும் சிறுமி, ஊரை விட்டு ஓடி வரும் குபேரன், வட சென்னையை கன்ட்ரோலில் வைத்திருக்கும் ‘ரெவுடி’யும் அவரது ஆட்களும், துபாயில் செட்டிலாகவிருக்கும் சிட் ஃபன்ட் அதிபர், அவரது குடும்பம், வீட்டிற்கு யார் வந்தாலும் பயந்து பதுங்கும் ‘டைகர்’ நாய் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இதில் பிரதான கதாபாத்திரங்கள் ஐவருக்கும், ‘டைகர்’ நாய்க்கும், பொம்மை ஒன்றிற்கும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் இடையிடையில் வருகிறது. இந்த சோதனை முயற்சி ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் மையக் கதையை விட்டு விலகுவதால் சலிப்பு எழுவதை தவிர்க்க முடியவில்லை. சார்லி-சாப்ளின் பாணி கருப்பு-வெள்ளை பேசும்படம், அனிமேஷன் காட்சிகள் என ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணி. இதையெல்லாம் தவிர்த்திருந்தால் படம் ‘சூது கவ்வும்’ போன்று முழு நீள காமெடிப் படமாக வந்திருக்கும்.

நவீன். படித்தவர் என்பதால் சிறையில் சந்திக்கும் மற்ற மூவர்களுக்கு தலைவனாகிறார். இவரே படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும். சிம்புதேவன் மற்றும் பாண்டிராஜிடம் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றியவர். கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், தேர்வையும் கச்சிதமாக செய்துள்ளார். உதாரணமாக கே டி.வி.யில் ‘மன்னன்’ படம் பார்த்து விட்டு நவீனை ஹீரோவாகப் பார்க்கும் சிறுமி, பள்ளி வீடென தன்னை அனைவருமே அடிக்கின்றனர் என வருந்தும் சிறுவன் முதலியோரை சொல்லலாம். நவீன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கார். சின்ன சின்ன விஷயத்திற்கும் பெரிதாக வியாக்கியானம் பண்ணுகிறார். படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படத்திற்கு பெரிதும் உதவியுள்ளன. “நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை” என்ற ஜேசுதாஸின் அறிமுகப் பாடலை 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவரையே இப்படத்தில் பாட வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Leave a Reply