
பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை.
கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். ‘சூது கவ்வும்’ காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ என்னவோ?
நறுக்கு தெறித்தாற்போல் இருக்கும் பணக்கார ரஜினியின் ஃபிளாஷ்-பேக். ஆனால் லிங்காவில் படமே அதன் நீண்ட ஃபிளாஷ்-பேக்தான். அத்தனை பெரிய கூட்டத்திலும் தனித்து ஜொலிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆனால் தன் வயது காரணமான பிரக்ஞையுடன் ரஜினி நடித்திருப்பது படத்தின் சுவாரசியத்தை மட்டுபடுத்தவே செய்கிறது.
பிரிட்டீஷ்காரர்களைப் பகைத்துக் கொண்டு, பெரிய அணை கட்டுகிறார் மகாராஜா லிங்கேஸ்வரர். கலை இயக்குநர் அமரன், ஃபிளாஷ்-பேக்கைச் சுமக்கிறார் என்று சொல்லலாம். அதே போல், காஸ்ட்யூம் டிசைனர் நிக்கார் தவான் கலக்கியுள்ளார். மஹாராஜாவின் கம்பீரத்தை எளிமையாகப் பிரதிபலிக்கிறது அவர் அணிந்திருக்கும் உடை. அய்யோ பாவம் எனச் சுற்றி வரும் விஜயக்குமார், ராதா ரவி போன்றோர்களை மீறி மஹாராஜாவின் தியாகம், லட்சியம், எளிமை என அனைத்தும் நிறைவைத் தந்துவிட்ட வேளையில்.. ‘நேனுதான் இப்படத்தின் வில்லன்லு’ என அப்பாவியாய் நிற்கிறார் ஜகபதி பாபு.
கலிவரதன், மார்க் ஆன்டனி, நீலாம்பரி, சந்திரமுகி, ‘மேஏஏஏ..’ சொல்லும் வில்லன் ரோபோ என பெரிய பெரிய வில்லன்கள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக உணரவைப்பவர்கள். அதனால்தான் என்னவோ ஃபிளாஷ்-பேக்கிற்கு பின் கிடைக்கும் கொஞ்ச அவகாசத்தில், ஆட்டோவில் ஏறத் துடிக்கும் ஜெகபதி பாபு எடுபடாமல் போய்விடுகிறார்.
தமிழ் சினிமா இலக்கணத்தின்படி, படம் ஏனோ தானோவாக இருந்தாலும் க்ளைமேக்ஸில் மட்டுமாவது முழுக் கவனம் செலுத்துவார்கள். காரணம், க்ளைமேக்ஸ்தான் படத்தைப் பற்றிய ஒட்டுமொத்த தாக்கத்தையும் நிர்ணயிக்கக் கூடியது. ஆனால், சமீபத்தைய தமிழ்ப் படங்களின் போக்கோ நேர்மாறாக உள்ளது. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. அதைவிட சோகம், ரஜினியின் அறிமுகப் பாடலும் சோடை போனதே! ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையிலும் லிங்காவைக் கைவிட்டு விட்டார். எல்லாவற்றிற்கும் சேர்த்து, ‘மோனா.. மோனா..’ பாடலில் ஈர்த்துவிட்டார்.
மஹாராஜா லிங்கேஸ்வரரின் டி.என்.ஏ. அனுஷ்காவிற்கு எப்படிக் கிடைத்தது எனத் தெரியவில்லை. படத்தின் தொடக்கம் முதல் (நீண்ட ஃப்ளாஷ்-பேக் தவிர்த்து), ‘ஏம்ப்பா அவங்க உயரத்துக்கு (அனுஷ்கா) லாரியிலேயே ஏறுவாங்க.. ஜீப்ல ஏற ஏன்ப்பா கை கொடுக்கிற?’ என படம் முடியும் வரை சந்தானம் தனது வழக்கமான கலாய்த்தலை இப்படத்திலும் தொடர்கிறார்.
‘என்றா அது சாதி சாதின்னுட்டு?’ என தனது இரண்டாவது படமான சேரன் பாண்டியனிலேயே கேள்வி எழுப்பியவர் கே.எஸ்.ரவிக்குமார். இப்படத்திலும், ‘ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு.. உங்களில் எவனாவது ஒருத்தன், ஒருத்தன் இந்தியனாக இருந்தா.. அவன் உடம்புல இந்திய ரத்தம் ஓடுதுன்னு நம்பிக்கை இருந்தா.. அவன் மட்டும் வாடா’ என ரஜினி வசனம் பேசுகிறார். ரஜினி ‘டா’ சொல்லும் த்வனியே ஸ்டைலுதான்!