Search

வாலு விமர்சனம்

வாலு விமர்சனம்

2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருமென விளம்பரப்படுத்தப்பட்ட வாலு படம், ஆயிரம் சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக வெளி வந்தேவிட்டது.

காதல் என்றாலே டார்ச்சர் என நினைக்கும் ஷார்ப்க்கு (நாயகனின் பெயர்), ப்ரியா மகாலட்சுமி மீது காதல் மலர்கிறது. முறை மாமனுடன் ப்ரியா மகாலட்சுமிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், ஷார்ப் எப்படி தன் காதலை வெளிப்படுத்தி ப்ரியாவை சம்மதிக்க வைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

நகைச்சுவை, காதல், அப்பா செண்ட்டிமென்ட், தங்கச்சி செண்ட்டிமென்ட், இடையிடையே ஆக்ஷன் என கலந்து கட்டியடித்துள்ளார் சிம்பு. இயக்குநர் விஜய் சந்தரின் இந்தக் கதையை விரும்பி, சிம்பு தாமாகவே முன் வந்து இப்படத்தில் நடித்துள்ளார். ஜாலியாப் போகிறது முதற்பாதி. இரண்டாம் பாதியில், ‘நான் ஏன் இப்படிச் சொன்னேனா?’ என எதற்கெடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ்-கட் போட்டு, ஒவ்வொரு வசனத்துக்கும் முன் நடந்தது என்ன என்ற ரீதியில் வளவளவென இழுக்கிறார்கள். திரையில் இருந்து கதாப்பாத்திரங்கள் இறங்கி, பார்வையாளர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாதது மட்டுமே குறை. அதனாலேயே வாலு படத்தின் இரண்டாம் பாதி, இலங்கை அரண்மனையில் நீண்ட அனுமாரின் வால் போல் அநியாயத்துக்கு நீண்டு விட்டது.

சந்தானம் ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு ஹேர் ஸ்டைலில் வந்தாலும், அது குறையாகத் தெரியாத அளவு படத்தொகுப்பில் சமாளித்துள்ளனர். இளைய தளபதி விஜய்க்கு நன்றி என்ற அறிவிப்பை படம் தொடங்கும் முன் போட்டாலும், படம் முழுவதும் “தல” தூக்கலாகத் தெரிகிறார். படத்தின் இன்னொரு சிறப்பு, தல-தளபதி இருவரையும் ஒன்றாக பைக்கில் பயணப்பட வைத்ததுதான்.

ப்ரியா மகாலட்சுமியாக ஹன்சிகா நடித்துள்ளார். கையில் முயல் குட்டியுடன் அறிமுகமாகி, நாயகன் கண்ணில் பட்டு, நாயகனால் காதலிக்கப்பட மட்டும் உபயோகப்படுகிறார். சிம்புவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் வழக்கம் போல் தானேற்ற கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார். சக்தியின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். பாடல்களைவிட தமணின் பின்னணி இசை அமர்க்களமாய் உள்ளது.

வாலை கொஞ்சம் நறுக்கியிருந்தால் படம் மேலும் ஷார்ப்பாகியிருக்கும்.