Search

ஸ்பாட்லைட் விமர்சனம்

Spotlight Tamil Review

வலுவான அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பல வருடங்களாக கார்டினல் லா மூடி மறைத்த பாதிரியார்களின் தகாச் செயல்களை, நான்கு பேர் கொண்ட புலனாய்வுப் பத்திரிக்கைக் குழு எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை.

‘பாஸ்டன் க்ளோப்’ நாளிதழுக்கு புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் மார்ட்டின் பேரோன். பத்தி (column) செய்தியாக வந்த ஒன்றை, புலனாய்வு செய்யும்படி ஸ்பாட்லைட் ஆசிரியர் வால்டர் ராபின்சனிடம் கேட்டுக் கொள்கிறார் பேரோன். சிறார்களுக்கு பாலியல் தொந்தரவுகளைத் தொடர்ந்து அளித்து வந்த பாதிரியார் ஜான் கீகனின் செயற்பாடுகள் பற்றி கார்டினல் லா எனும் தலைமை பிஷப்-க்குத் தெரிந்தும், அதைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் அந்தப் பத்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த வக்கீல் கரபேடியனைப் பேட்டிக்காக அணுகுகின்றனர்.

வக்கீல் மிட்செல் கரபேடியன் மிகவும் விசித்திரமான மனிதர். அவரது அறிமுகமே அமர்க்களமாய் உள்ளது. “நான் ரொம்ப பிஸி. எனக்கு நிறைய வேலையிருக்கு” என்று சொல்லித் துரத்தி விட்டுவிடுகிறார். அவரைப் பேச வைப்பது குதிரைக் கொம்பான காரியம். சதா உழைத்துக் கொண்டே இருப்பவர்; இரும்பு மனிதர்; சட்டத்தை மிகவும் மதிப்பவர். அதனாலேயே அவர் உண்மைகளைச் சொல்ல விழைந்தும் விடாப்பிடியாக மெளனம் காப்பார். அந்த வேதாளத்தைப் பேச வைக்கும் விக்கிரமாதித்யனாக நிருபர் மைக்கேல் ரேசண்டஸ் உள்ளார். கரபேடியனே வியக்குமளவு சிறப்பாகப் பணியாற்றுபவர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஓர் ஆழமான நட்பு உருவாகி விடுகிறது. கடைசியாக, தன் வரம்பை மீறாமல் ரேசண்டஸுக்கு ஒரு சின்ன க்ளூ தருவார் கரபேடியன். ‘சிறுவர்களுக்கு எப்படி இப்படியொரு கொடுமை நிகழலாம்?’ என்ற ரேசண்டஸின் ஆவேசத்தையும், அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவர் படும்பாட்டையும் அழகாகத் தன் நடிப்பில் பிரதிபலித்துள்ளார் மார்க் ரஃபல்லோ. ஆம், இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

படத்தின் வரும் ஃபில் சாவியானோ எனும் நபர் உங்களை மிகவும் தொந்தரவு செய்து விடுவார். அவர் SNAP என்ற நிறுவனத்தின் ஓர் அங்கத்தினர். SNAP என்றால் பாதிரியார்களின் தொந்தரவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களின் குழு எனப் பொருள் கொள்ளலாம். பாலியல் தொந்தரவளித்த 13 பாதிரியார்கள் பற்றிய ஆதாரங்கள் சாவியானோவிடம் இருக்கும். எனினும் அவரால் எதுவும் செய்ய முடியாத விரக்தியில் இருப்பார். காரணம், கத்தோலிக்க திருச்சபை எனும் மிகப் பெரும் நிறுவனம். அதனால் காவல் துறை, நீதித் துறை, ஊடகத் துறை எனச் சகலத்தையும் கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.

கரபேடியன் அதை அழகாகச் சுட்டிக் காட்டுவார். ‘அனைவருக்கும் இங்கு நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கு. அதை மீற யாரும் துணிவதில்லை. ஆனால், உங்க புது ஆசிரியர் மார்ட்டின் பேரோன் ஒரு யூதர்; நான் ஆர்மேனியன்’ என ரேசண்டஸிடம் சொல்வார். ‘நீங்க கத்தோலிக்கர்களா?’ என ஃபில் சாவியானோவும் அதே கேள்வியைப் புலனாய்வுக் குழுவிடம் கேட்பார். ‘அப்படி வளர்க்கப்பட்டோம். இப்போ அப்படி இல்லை’ என்பார் ஸ்பாட்லைட்டின் ஆசிரியர் ராபின்சன்.

அதிகாரம் சிலரிடம் தான் இருக்கும்; ஆனால் இந்த ‘நம்பிக்கை’ நீக்கமற பெரும்பாலானோரிடம் நிறைந்த ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் எங்குப் போய் நியாயம் கேட்பார்கள்? புலம்பிக் கூடத் தீர்க்க இயலாது. ‘வெளியில் சொல்லக் கூடாதென் சர்ச்சில் இருந்து சொன்னார்கள்’ என்ற சின்ன இடைவெளிக்குப் பிறகு சொல்லப்படும், ‘என் நண்பர்கள் கூட வலியுறுத்தினார்கள்’ என்ற வலி மிகப் பெரியது. ‘நான் எதைத் தேடிப் போறேனே, அதைப் பற்றி என்னைத் தவிர்த்து எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு’ என ஸ்பாட்லைட் ஆசிரியர் ராபின்சனும் புலம்புவார். நீறு பூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாய் புலனாய்வுக் குழு ஊதி விட்டதும், அவர்களே எதிர்பாராத ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டவர்களிடம் கிடைக்கும்.

படத்தில் அசிரீரி போல் ஒரு தொலைபேசி குரல் வரும். அது ரிச்சர்ட் சைப் எனும் மனநல மருத்துவரின் குரல். பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாதிரியார்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அவர். ஓர் உரையாடலின் பொழுது, ‘பாஸ்டனில் 13 பாதிரியார்கள் இத்தகைய தகாத செயல்களைச் செய்திருப்பார்கள்ன்னு நினைக்கிறீங்களா?’ என ராபின்சன் சைப்பிடம் கேட்பார்.

‘இல்லை. இந்த எண்ணிக்கை மிக மிகக் கம்மி. பாதிரியார்களின் மொத்த எண்ணிக்கையில் 6% பேர் இப்படி நடந்துகொள்வார்கள்’ என்பார் சைப் ஆணித்தரமாக.

‘6 சதவிகதமா? பாஸ்டனில் 1500 பாதிரியர்கள். அப்போ 90 பாதிரியார்கள் இப்படித்தான் என்கிறீர்களா?’ என அதிர்ச்சியில் நம்பாமல் கேட்பார்கள்.

‘ஆம். சந்தேகமே இல்லை. எனது 30 வருட ஆராய்ச்சியில் நான் தெரிந்து கொண்டது’ என உறுதியாகச் சொல்வார் சைப்.

புலனாய்வுக் குழுவிற்கு ஒரு சின்ன ‘க்ளூ’ கிடைக்கும். ரொம்ப அசத்தலான க்ளூ அது. அந்தக் க்ளூவை வைத்து, இரவு பகலாக முயன்று டைரக்டரிகளில் இருந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 87 பாதிரியார்களின் பட்டியலை எடுப்பார்கள். 1 இல் தொடங்கி 13-க்கு வந்து 87 இல் வந்து நிற்பார்கள்.

திருச்சபையின் சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கை நீதி மன்றத்திற்கு வெளியே வைத்து முடித்துத் தரும் வக்கீல் எரிக் மெக்லெய்ஷ் புலனாய்வுக் குழுவிடம் பேச மறுப்பார். அவரை வழிக்குக் கொண்டு வர, ராபின்சன் பயன்படுத்தும் யுக்தி படு அட்டகாசம்.

படத்தில் ஓரிடத்தில், ‘நாம் சர்ச்-ஐ எதிர்க்கிறோமா?’ என்றொரு கேள்வியெழும். ‘இல்லை ஒட்டுமொத்த சிஸ்டத்தை’ என்பார் பேரோன். சிஸ்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் வாட்டிகன் சர்ச்-சின் சார்பில் இயங்கும் வாட்டிகன் ரேடியோ, படத்தைப் பற்றி, ‘நேர்மையானது; பார்க்கத் தூண்டுகிறது. யூ.எஸ். கத்தோலிக்க திருச்சபை தன் தவறுகளை ஒப்புக் கொள்ளவும், மக்களிடம் ஒத்துக் கொள்ளவும், தவறுகளுக்கு பிராயசித்தம் செய்யவும் உதவியுள்ளது’ எனப் பாராட்டி ஒலிபரப்புச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாசிக்கவும் மறந்து, இதயத்தின் துடிப்பை மட்டுமே கேட்பீர்கள். அப்படியொரு விறுவிறுப்பான திரைக்கதை. சிறியதொரு புள்ளியில் தொடங்கி, மெல்ல நூல் பிடித்துப் பரபரவென்று ஓடும் புலனாய்வு, கத்தோலிக்க திருச்சபை மறைக்கப் பார்த்த ஒரு பெரும் பூதத்தை வெளிகொணர்ந்து படம் முடியும் வரையும் நம் முழுக் கவனத்தையும் ஒரு த்ரில்லர் போல் தக்க வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் மெக் கார்த்தி, படத்திற்கு பல விருதுகளைக் கொண்டு வந்து குவிப்பாரென்பது திண்ணம்.