Search

ஹரிதாஸ் விமர்சனம்

idoss
ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!!

ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை. 

ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை ‘அப்பா’. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இருந்து மீண்டு, கின்னஸ் சாதனை புரிகிறான் என நேர்மறையாக படம் முடிகிறது. இந்தியாவில் பிறக்கும் 88 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரத்தினை படத்தில் காட்டுகின்றனர். ஆட்டிசத்தை சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.

படத்தின் இன்னொரு இழை காவல்துறை அதிகாரி சிவதாஸாக வரும் கிஷோரை மையமாக கொண்டது. அவரது அறிமுகம் என்கவுன்ட்டருக்கான திட்டமிடலுடன் தொடங்குகிறது. ஆனால் மெல்ல பாசமிகு தந்தையாக உருமாறுகிறார். தன் பையனின் உலகம் எதுவென தெரியாமல் மறுகி, பின் அவன் மீது நம்பிக்கை வைத்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறார். ‘என் மகன் போட்டியில் (ஜூனியர் மராத்தான் 2003) பங்கேற்பதே என்னைப் பொறுத்தவரை வெற்றித் தான்’ என தேர்வுக் குழுவிடம் மகனின் எதிர்காலத்திற்காக இறைஞ்சுகிறார். இப்படிப் பொறுப்புள்ள தந்தையாக இருப்பவர் அதிகாரியாக இருக்கும் பொழுது விறைப்பாக இருக்கிறார். அதாவது தனது வாகன ஓட்டியின் தலையில் அடித்து எழுப்புவது, விடுப்பில் இருக்கும் பொழுதும் அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது, ஆதி (பிரதீப் ரவாத்) என்னும் ரவுடியை சுடுவதற்கென துப்பாக்கிக் குண்டில் தன் பெயரை எழுதி வைத்துக் கொள்வதென நேர்மையான(!?) அதிகாரியாக வருகிறார். 

‘என்கவுன்ட்டர்’ என்பதை நாயகத்தனம் நிறைந்த சாகசமாக கொண்டாடும் படங்கள் மிக ஆபத்தானாவை. சில லட்சங்களைத் திருடியவர்களாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்துதற்கே.. வேளச்சேரியில் ஐந்து உயிர்கள் பரிதாபமாக என்கவுன்ட்டரில் பறிக்கப்பட்டது. அந்தத் துக்கக்கரமான நிகழ்வுக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு அதை விட கொடுமையானது. இதன் நீட்சியாக நீதிமன்றமே பெருவாரியான மக்களை மகிழ்விக்க மரண தண்டனையை நிறைவேற்றும் அபத்தமெல்லாம் இந்த நாட்டில் தான் நடக்கும். உண்மையிலேயே நாம் மரணத்தைக் கொண்டாடும் தேசத்தில் தான் வாழ்கிறோமோ என்ற ஐயம் பலமாக எழுகிறது. பரீட்சையில், காதலில் தேறாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வது முதல் “மரணம்” இங்கு வெவ்வேறு வடிவங்களில் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணியாக மாறி வருகிறது.

ஆசிரியை அமுதவள்ளியாக சினேகா. வகுப்பறையில் கிஷோர் அமர்ந்திருப்பதால், இயல்பாய் பாடமெடுக்க முடியாமல் அழகாக சங்கடப்படுகிறார். ‘நாம ரெண்டு பேர் இருந்தே ஒருநாள் சமாளிக்க முடியலையே.. எப்படித் தான் தினமும் தனியாளாக ஹரியைப் பார்த்திருக்கிறாரோ தெரியல’ என தன் தங்கை சொன்னதும், சினேகா ஹரிதாசின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவனுக்கு தாயாகி விட முடிவு செய்கிறார். ஆனால் சினேகாவின் முடிவை மென்மையாக மறுத்து விடுகிறார் கிஷோர். எனினும் தன் வாழ்க்கையையே “தியாகம்” செய்து ஹரிதாசின் சாதனைக்கு பக்கபலமாக இருக்கிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகி என்ன செய்யணுமோ அதை தான் செய்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. மாணவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டியவர். ஒரு மாணவனுக்கு ஒரு ஏணி என்ற கணக்கில் இல்லை நம் சமுதாயத்தின் ஆசிரியர் சதவிகிதம். அமுதவள்ளி என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உண்மையாகவே பொறுப்பென்று ஒன்றிருந்தால்..  பல மாணவர்களை நல்லபடி உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அளித்திருக்க முடியும் எத்தகைய தியாகமும்(!?) செய்யாமலே.

எப்படி அரசாங்க வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் குற்றவுணர்வு நாயகனுக்கு இல்லையோ.. அதே போல் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் குற்றவுணர்வு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு இல்லை. மாணவர்களால் ஏதாவது பிரச்சனை எனின் “டி.சி.” தந்து விடுவதிலேயே குறியாக உள்ளார். இன்றைய அரசு ஊழியர்களின் உண்மை முகத்தை படத்தில் நச்சென பதிந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்தப் பொறுப்பற்றத்தன்மை ஒரு குற்றம் என்ற புரிதல் கூட இல்லாமல் அவர்கள் இருப்பது தான். தலைமை ஆசிரியையாக நடித்தவர் மிரட்டியுள்ளார். இந்தப் படத்தின் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இராஜ் கபூர் நடித்துள்ளார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஹரியை உதாசீனப்படுத்தும் முன்கோபி பயிற்சியாளராக அறிமுகமாகி, ஹரியின் உடல் திண்மையை வியந்து அவனுக்கான களத்தை அறிமுகப்படுத்துகிறார். இரண்டே காட்சிகளில் யூகி சேது வந்தாலும் படத்தின் மையக்கருவிற்கு வலு சேர்ப்பதே அவர் பேசும் வசனங்கள் தான். “அவன் பொம்மையை நிஜ குதிரையாக பார்க்கிறேன். குழந்தையின் உலகத்திற்குள் செல்லுங்கள்” என்று மருத்துவராக வரும் யூகிசேது சொல்வது தான் கிஷோருக்குக் கிடைக்கும் ஒரே பிடிப்பு. ஹரிதாசிற்கு குதிரை என்றால் உயிர். குதிரைகள் ஓடுவதைப் பார்த்ததும் அவனும் ஓடத் தொடங்குகிறான். உடனே கிஷோரின் கண்கள் மலர்கிறது. என் பையனை பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாற்றி விட முடியும் என்று நம்பிக்கைக் கொள்கிறார். அவனது விருப்பம் ஓடுவது அல்ல. குதிரை தான். படத்தின் ஆரம்பம் முதலே ஹரிதாஸின் குதிரை மீதான காதல் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து ஓட்டப் பயிற்சி தர முயல்கிறார் கிஷோர். அதற்கு பதில் ஒரு குதிரையுடன் ஓட விட்டிருந்தால் ஹரிதாஸ் குதூகலமாக ஓடிப் பயிற்சிப் பெற்றிருப்பான். எது எப்படியோ அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும் என அழுத்தமாக பதிந்துள்ளனர். அது போதும்.

ஆட்டிசம்

ஹரிதாஸ் கவனிக்கப்பட வேண்டிய படமாக இருப்பதற்கு ஒரே காரணம்.. இப்படம் எடுத்துக் கொண்ட கருவான ஆட்டிசமே. ஆட்டிசம் என்பது நோயல்ல.. குறைபாடு தான் எனப் பார்வையாளர்களின் தலையில் ஓங்கி அடித்துச் சொல்லும் படம் தான். இருப்பினும் ஒரு காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சத்தம் அசூயை வரவழைக்கிறது. ஓமக்குச்சி என்ற பருமனான மாணவனை அறிமுகம் செய்யும் பொழுது, யானை பிளிறும் ஓசையைப் பின்னணியாக கொடுத்துள்ளார் விஜய் ஆன்டனி. ஒருவரின் உருவ அமைப்பினைக் கொண்டு எள்ளி நகையாடுதல் எத்தனை அருவருப்பான விடயம்? அதே போல் “துப்பாக்கியில் தூங்குது தோட்டா” என்ற வருத்தத்துடன் காவல்துறை அதிகாரிகள் பாடுவது போல் பாடல் வரிகள் வருகின்றன. எவரையாவது எதற்காகவாவது காவல்துறையினர் சுட்டுக் கொண்டே இருந்தால் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும் இயக்குநர் குமரவேலன். ரமணா என்னும் ரவுடியை போக விட்டு நெற்றிப்பொட்டில் சுடுகிறார் சிவதாஸ். இறந்து சரியும் அவர் உடலின் அருகில் செல்லும் மூன்று காவல்துறை அதிகாரிகள்.. நன்றாக நெருக்கத்தில் போய் மீண்டும் சுடுகின்றனர். “ஆமான்டா.. நான் லைசென்ஸ்டு கில்லர்” என பெருமிதம் பொங்க கம்பியை ஆதி என்னும் ரவுடியின் கழுத்தில் நாயகன் சொருகுகிறார். 

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. இரவுக் காட்சிகளிலும், நாயகனின் வீட்டிற்குள்ளும் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி அமைப்புகள் மிக ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒளிர்கிறது. எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். படத்தின் கலர் டோன்னும் செம்மையாக உள்ளது. இரவில் நடனம் ஆடும் பொழுது எழும் தெருப் புழுதி கூட படத்தில் அழகாக தெரிகிறது.

ஹரிதாஸ்அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும்.



Leave a Reply