Shadow

கண்ணா லட்டு தின்ன ஆசையா! விமர்சனம்

laddu

இந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ‘பவர் பொங்கல்’ என்றே சொல்ல வேண்டும். பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீநிவாசனின் பிடிவாதமான மூலதனம் எதுவும் வீண் போகவில்லை. ரஜினிக்கு போட்டியாக வளர வேண்டும் என்ற அவரது கனவிற்கு ‘இதுதமிழ் குழுமம்’ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவாவின் எதிர் வீட்டிற்கு குடி வரும் செளம்யாவை, சிவாவும் அவரது இரண்டு நண்பர்களும் காதலிக்கின்றனர். செளம்யா மூவரில் யாரது காதலை ஏற்றுக் கொள்கிறார் என்பதுடன் படம் முடிகிறது.

“பவர்” குமாராக பவர் ஸ்டார். ‘லொள்ளு சபா’ மனோகர் போல் கையை வளைத்து நீட்டிப் பேசுகிறார். நல்லவேளை வசனமும் அவர் போல நீட்டி முழுக்கி பேசவில்லை. நிலத்தில் வீசி எறியப்பட்ட விறால் மீன் போல படம் நெடுக்கும் நின்று பேசாமல் ஏதோ தாள லயத்துடன் துள்ளிக் கொண்டே இருக்கிறார். படத்தில் அவர் பரதம் கற்றுக் கொள்ளும் இடமெல்லாம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நடனம் கற்றுக் கொள்ள பல்லக்கில் மேள தாளத்துடன் சென்று அதகளப்படுத்துகிறார். குனிந்து குரு வணக்கம் செலுத்த முடியாமல், “நான் வேணும்னா குட் மார்னிங் சொல்லிக்கிறேனே!!” என பல இடங்களில் வயிறை பதம் பார்த்து விடுகிறார். பற்கள் கொஞ்சம் எடுப்பாக இருப்பதால்.. அவர் காட்டும் நவரசமும் ஒரே ரசமாக காட்சியளிக்கிறது. அதை அழகாக தனது ‘உடல் மொழி’யால் சமாளித்து படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்து விடுகிறார்.

கே.கே. (கல்யாணம் முதல் கருமாதி வரை) என்னும் பாத்திரத்தில் சந்தானம். சந்தானம் ஒரு கிரியா ஊக்கி. அவரால் தனித்து சோபிக்க முடியாது. காட்சிகளில் உடன் நடிக்கும் நடிகர்களை கலாய்த்து தான் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்வார். அப்படிப்பட்டவரிடம் லட்டு போல பவர் ஸ்டார் சிக்கினால் சும்மா இருப்பாரா? புகுந்து விளையாடி உள்ளார். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை.. பவர் ஸ்டாரின் ஃப்யூஸைப் பிடுங்கிக் கொண்டே இருக்கிறார் சந்தானம். ஆனால் அதை எல்லாம் கண்டுக்காமல் சும்மா கில்லி போல அதகளப்படுத்துகிறார் பவர். உதாரணத்திற்கு நாயகியைப் பார்த்து, “அப்படி என்கிட்ட இல்லாதது சிம்புகிட்ட என்ன இருக்கு?” என பொங்கி எழுகிறார். நாயகி ஒரு இடத்தில், “பவர் உங்ககிட்ட பிடிச்சதே.. உங்க மைனஸை எல்லாம் பிளஸாக மாற்றுவது தான்” என முகத்திற்கு நேராக புகழ்வார். அப்ப பவர் கையாளும் உடல்மொழியைப் பற்றிப் புகழ வார்த்தையே இல்லை. பவர் ஸ்டார் தனக்கு உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தைத் தெளிவாக தனது ‘ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ்’க்கு சாதகமாக மடைமாற்றியுள்ளார் சந்தானம்.

2008 பொங்கலிற்குப் பிறகு விஷாகா நாயகியாக மீண்டும் தமிழில் தோன்றியுள்ளார். ஆனால் அவரது முதல் படமான ‘பிடிச்சிருக்கு’ போல நடிக்க வாய்ப்பு எதுவுமில்லாமல் போய் விட்டது. ஆனால் பாடல்களுக்கு நடனமாடி பாரம்பரிய நாயகித்துவத்தை தக்க வைத்துக் கொள்கிறார். ஆனால் தேவையில்லாத இடத்தில் பாடல் தோன்றி கடுப்பேற்றுகிறது. சேது என்பவர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஆனால் பாக்கியராஜ்ஜின், ‘இன்று போய் நாளை வா’ தந்த தாக்கத்தை இப்படம் தரவில்லை. லட்டை தின்று விட்டு கையை உதறிடணும். கண்ணாடி அலமாரியில் எல்லாம் வைக்க முடியாது. அது தான் மூலத்திற்கும் தழுவலுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் தயாரிப்பாளராக சந்தானத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட லட்டுகள் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

Leave a Reply