32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பொங்கி எழு மனோகரா விமர்சனம்

Dinesh R சேலம் Published: 06/02/2015 2 நிமிட வாசிப்பு Updated: 07/02/2015 சினிமா
எழுத்து அளவு:

Pongi ezhu Manohara review

அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை.

சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, அம்மாவின் பாசத்துக்கு ஏங்குவது, நண்பர்களுடன் இணைந்து கும்மாளம் அடிப்பது, காதலிக்கிறேன் பேர்வழி என பேருந்துக்காகக் காத்திருப்பது, பெட்டிக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் வழிவது, பால் கறந்து கேனில் சைக்கிளில் பால் கேன் கொண்டு செல்வதென படம் முழுவதும் பரபரப்பாக நடித்துள்ளார். படத்தில், ஒரே ஒரு இடத்தில் அப்பாவிற்கு எதிராகப் பொங்குகிறார் மனோகரன். அதுவும் குடி போதையில்தான்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள். மற்ற கதாபாத்திரங்களை விட இரண்டு நாயகிகளுமே மிக எதார்த்தமானவர்களாகத் தெரிகின்றனர். மில்லுக்கு வேலை செல்லும் தேன்மொழியாக அர்ச்சனா. படிபில் ஆர்வமுள்ள பெட்டிக்கடை வைத்திருக்கும் ஆனந்தியாக அருந்ததி நாயர். நாடகம் நடத்துவதில் அதிக ஈடுபாடுள்ள மணி எனும் பாத்திரத்தில் சிங்கம்புலி நடித்துள்ளார். சிங்கம்புலியை விட, நாடகத்தில் நாயகன் வேடம் ஏற்கும் டெய்லர் கதாபாத்திரம் அதிகமாக ஈர்க்கிறது. எப்பவும் கொதி நிலையில் இருக்கும் மனோகரனின் தந்தை காளியாக சம்பத் ராம் நடித்துள்ளார். முதல் மனைவி துரோகம் இழைத்தாரென்ற கோபம் அவருக்குள் கனன்று கொண்டே இருப்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் சம்பத் ராம்.

முதல் பாதி படம் மனோகரன் – தேன்மொழி காதல் கதையாகச் செல்கிறது. அதிலிருந்து மீண்டு, மனோகரன் – ஆனந்தி காதல் கதையாகச் செல்கிறது இரண்டாம் பாதி. படத்தின் முடிவோ வேறு திசையில் எதிர்பாராத வண்ணம் முடிகிறது. இந்தக் கோர்வையற்றத்தன்மை அலைக்கழிக்கப்படும் உணர்வையும் சலிப்பையும் தருகிறது. கண்ணனின் பின்னணி இசை தேவைக்கும் அதிகமான சத்தத்துடன் ஒலிக்கிறது. படத்தின் தொடக்கத்திலிருந்து நேர்த்தியாகவும் கோர்வையாகவும் இருக்கும் இரண்டு விஷயங்கள் C.J.ராஜ்குமாரின் ஒளிப்பதிவும்; அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்புமே!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.