இத்திரைப்பட விழா, திரைப்படம் சார்ந்து தமிழகத்தில் நிகழும் ஓர் அற்புதமான முயற்சி எனக் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம். அதற்குப் பல காரணங்களை முன் வைக்கலாம். அதில் பிரதானமானது, சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு வைக்கப்பட்ட, ‘2 11 17’ என்ற பெயரே!
‘பாரத ரத்னா’ அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற எடுத்துக் கொண்ட காலம், 2 ஆண்டு 11 மாதம் 17 நாட்கள் ஆகும். அதை நினைவுகூரும் விதமாகவே, இந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 2 11 17 எனப் பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்பட விழா, FilmFreeway எனும் திரைப்பட விழா அமைப்பின் கீழ் இயங்குகின்றது.
இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம், திரையிடல் முடிந்ததும், அப்படத்தின் இயக்குநரோடு கலந்துரையாடப் பார்வையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். மேற்கு வங்கம், ஈரான், பிரேஸில், லண்டன் என பன்னாட்டுக் கலைஞர்களுடனான உரையாடல், எல்லைகளைக் கடந்து கலையை ரசிப்பதற்கும், பிற நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கும், மனிதத்தின் மீதான நம்பிக்கையை உயிர்ப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இத்தகைய முத்தான வாய்ப்பைத் திரைத்துறை மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் உருவாக்கித் தருகிறது 2 11 17 சர்வதேசத் திரைப்பட விழா.
Onu Songo
இரண்டரை நிமிடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட படம். தந்தையை இழந்த ஒரு மகளின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது படம். மேற்கு வங்கம், எபபொழுதும் போல், இலக்கியத்தைத் திரையாக்கம் செய்யும் முயற்சியை என்றுமே கைவிடுவதில்லை போலும். அன்வேஷ் மஜும்தாரின் ஒரு சிறுகதையைக் குறும்படமாக இயக்கியிருந்தார் ஜாய்சிஷ் குமார் பிஸ்வாஸ். ஓனு என்பவர் தனது படுக்கையில் இருக்க, ஓர் அறையில், இரவு பகல் என மினிமலிஸ்டிக்காக எடுக்கப்பட்ட படமென்றாலும், கனமான உணர்வுகளைத் தருவதாக இருந்தன.
Watercolors of Loneliness
ப்ரேசில் நாட்டுப் படைப்பான, ‘வாட்டர்கலர்ஸ் ஆஃப் லோன்லினெஸ்’ எனும் படத்தில், மேத்தியஸ் எனும் இளைஞனின் மனப்போராட்டத்தைப் பேசுகிறது படம். தான் தானாக இருப்பதா, அல்லது மற்றவர்களின் எதிர்பார்ப்பின்படி இருப்பதா என தீவிர யோசனையில் ஆழ்கிறார். தியோ, மார்க்கஸ் ஆகிய நண்பர்களுடன், இவ்வுலகத்தில் தனக்கான பாதை என உரையாடலில் ஈடுபடுகிறார். மேத்தியஸின் வீடு, அந்த வீட்டின் மேல் வாட்டர்கலரால் வரையப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கும் மேகங்கள் என படத்தின் ஃப்ரேம்கள் எல்லாம் ஓவியம் போல் ஈர்த்தன.
Yar
Yar என்றால் Friend எனப் பொருள். ‘யார்’ என்பது ஒரு பாடல். ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றத்திற்காகக் ஈரான் காவல்துறையால் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி, போலீஸ் கஸ்டடியிலேயே இறந்தார். அதைத் தொடர்ந்து தன்னிச்சையாக, ‘Woman, Life, Freedom’ என்ற ஸ்லோகனுடன் பெரும் போராட்டங்கள் ஈரானில் வெடித்தன. ஈரான் அரசாங்கத்திற்கான கோஷங்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கின.
அப்படியொரு எதிர்ப்புக் குரலாகத்தான், இந்தப் பாடலைப் பாடியுள்ளார் ஃபர்னாஸ் ஓகாதி (Farnaz Ohadi). ஃப்ரான் மென்சான் (Fran Menchon) என்பவர் இப்பாடலை இயக்கியுள்ளார்.
பாடல் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபர்னாஸ் ஓகாதி வீடியோ காலில் பார்வையாளர்களுடன் உரையாடினார். ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவின் அருகே உள்ள உப்புச் சுரங்கத்தில் (Salt Mine) படமாக்கியுள்ளனர். ஒரே நாளில் படப்பிடிப்பினை முடித்துள்ளனர். ஆனால், முன் தயாரிப்பில் நான்கு மாதங்கள் ஈடுபட்டுள்ளனர். கருப்பு, வெள்ளையில் படமாக்கப்பட்டதன் மூலமாக, ‘துயரம், கையறுநிலை, நம்பிக்கை (Sadness, Helpness, Hope)’ ஆகியவற்றை வெளிப்படுத்த முனைந்துள்ளனர். எல்லாமே அழிந்த பின் வரும் புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையை முன் வைப்பதுதான் இப்பாடலின் நோக்கம் என்றார். அட்டகாசமான விஷுவல்களைப் பார்க்கும்போது ஃபர்னாஸின் வார்த்தைகளுக்கான முழுப் பரிமாணம் புரிய வரும்.
பொன்னான நிமிடங்கள்
சுமார் பதினொரு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பைலட் படமிது. ஜெய்பீம் புகழ் மணிகண்டனும், பாலசரவணனும், லீமாவும் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த அழகான காதல் கதை. தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ததன் மூலமாக, சந்தியாவிற்கும் கதிருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. சந்தியா, நல்ல வேலையில் இருக்க, கதிரோ தனது நண்பனின் அறையில் தங்கி உதவி இயக்குநராகப் பஞ்சம் பிழைக்கிறான். கதிருக்கும், திருவிற்குமான பேச்சிலர் கால வாழ்வனுபவங்களை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். வழக்கமான கதைக்களம் என்றாலும், ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாமல் படத்தை ரசிக்க முடிகிறது.
ஒல்லியான மணிகண்டன், மிக இளம் வயது பாலசரவணன், விஜய் டிவியின் ‘காஃபி வித் அனு’ நிகழ்ச்சியைப் பற்றிய ரெஃபரென்ஸ் என படம் ஒரு நாஸ்டாலஜியா உனர்வைத் தருகிறது. ஒரு தேர்ந்த இயக்குநருக்கான கைவண்ணத்தைப் படத்தில் காண முடிந்தது. இத்தனை வருடங்களாக ஏன் ரசிகர்களின் பார்வைக்கு இப்படம் வரவில்லை என்ற கேள்வி, படம் பார்த்து முடித்ததும் பெரிதாய்க் குடைந்து கொண்டே இருந்தது.
“யாரிடமும் இயக்குநராகப் பணியாற்றியதில்லை. அதற்காக, ஒரு பைலட் படம் எடுத்து, அதைக் காட்டி வாய்ப்புத் தேடலாம் என நினைச்சேன். இந்த பைலட் ஃபிலிமால் கிடைச்ச வாய்ப்புத்தான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நாயகனாக நடிக்க வைத்து இயக்கிய “ராபின்ஹுட்” படம். அந்தப் படத்தின் எல்லா வேலையும் முடிஞ்சு, இப்போ ஜூலையில் வெளியாகப் போகுது” என்றார் இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.
விரைவில், ட்யூப் லைட் ப்ரொடக்ஷன்ஸ் எனும் யூ-ட்யூப் சேனலில் இப்படத்தை எதிர்பார்க்கலாம்.
ஃபாத்திமா
ஃபாத்திமா எனும் ஓர் இஸ்லாமியப் பெண் அகதி லண்டன் மாநகரில் பாடாதப்பாடுபடுகிறார். முகத்தை மூடியவாறு ஹிஜாப் அணிந்த 5 பெண்கள், ஃபிளாட்ஃபார்மில் படுத்திருக்கும் ஃபாத்திமாவைப் போட்டு நையப்புடைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து காப்பாற்றும் முதியவர், வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஃபாத்திமாவை மதுவைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்க, அவர் மதுவை அருந்திவிட்டு, ஃபாத்திமாவுடன் உறவு வைத்துக் கொள்கிறார். அங்கிருந்து தப்பும் ஃபாத்திமா மீண்டும் பூங்காவில் தஞ்சமடைய, மது பிரியர் முரட்டுத்தனமாகக் காயம் ஏற்படுமளவு வன்புணர்ந்து எறிகிறார். பரிதாப்படும் ஒரு முதியவர், ஃபாத்திமாவைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார். கையில் போதை ஊசி போட்டுக் கொண்டு அவரும் ஃபாத்திமாவுடன் உறவு கொள்கிறார். அம்முதியவருடன் சேர்ந்து மதுக்கூடத்தில், தானாகவே மது ஆர்டர் செய்யுமளவு தேறி விடுகிறார் ஃபாத்திமா. பாரில் மது கொடுக்கும் இளைஞனுடன் சிரித்துப் பேசிய ஃபாத்திமா மீது கோபம் கொள்ளும் அம்முதியவர், ஃபாத்திமா மீது அருவருப்புடன் சிறுநீர் கழிக்கிறார். ஃபாத்திமா, மது குடிக்கக் கட்டாயப்படுத்திய முதல் கிழவரிடமே சென்று தஞ்சமடைகிறாள். அவர் தள்ளாத வயதை எட்டும் போது, அவரைக் குழந்தை போல் ஃபாத்திமா பராமரிப்பதாகப் படம் முடிகிறது.
திரையில் தோன்றிய இப்படத்தின் இயக்குநர் பெனிடிக்ட் ஜாஸாட்ஸ்கி (Benedykt Zasadzki), “ரொமான்டிக் காமெடியைக் கண்டு களிச்சாச்சா?” என உற்சாகமான சிரிப்புடன் கேட்டார். பார்வையாளர்கள் சராமரியாகக் கேள்வி கேட்க, அனைத்திற்கும் சிரித்த முகத்துடன் பதிலளித்தார். இவர், போலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் செட்டில் ஆனவர்.
“இந்தக் லண்டனில் நடப்பதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இது ஒரு டார்க் ஃபேண்டஸி உலகம். ஹிஜாப் அணிந்த ஒருவர் சாலையில் சண்டையிடும் ஒரு வீடியோ வைரலானது. அது ஒரு கறுப்பு கோஸ்ட் எதிராளியைத் தாக்குவது போல் பார்க்க அழகாக இருந்தது. அந்த அழகியலைக் கொண்டு வர, ஐந்து கறுப்பு கோஸ்ட்களை ஃப்ரேமில் வைத்தேன். ஆனால், அது மதம் சார்ந்தும் பார்க்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. ஃபாத்திமா என்பவர் மத நெறிமுறைகளைப் பின்பற்றாதவர். குடிக்கிறார். அதனால் அவர் தண்டிக்கப்படுகிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
ஓர் இரவு தான் ஒரு முதியவருடன் இருப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும், பின்னால் தொலைக்காட்சியில் ஓபாமா போய், ட்ரம்ப் வந்து கருணையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதன் மூலம் காலத்தை உணர்த்த முயற்சி செய்திருப்பேன்.
இது போல் அகதிகளுக்கு மட்டுந்தான் நிகழுமா என்றால் இல்லை. எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய ‘வல்னரபல் பீப்பிள் (Vulnerable People)’ யாருக்கு வேண்டுமானாலும் நிகழும்” என பார்வையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
‘போதை வஸ்துக்களை எடுத்த பின் தான் பத்தில் ஃபாத்திமாக்குக் கொடுமைகள் நடக்கப்படுகிறதே! இது போதைக்கான எதிரான படமா?’ என்ற கேள்விக்கு, “அப்படிப் புரிந்து கொள்வதற்கான சாத்தியத்தைப் படம் வழங்குகிறது. ஆனால், இப்படி நிகழ்வதற்கு போதைப்பொருள் மட்டுமே காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை” என்றார் பெனிடிக்ட். முன்பே குறிப்பிட்டது போல், இந்த விழாவின் சிறப்பம்சமே, இத்தகைய உரையாடல்களைப் பார்வையாளர்களுக்கு அமைத்துக் கொடுத்தது தான்!
2 11 17 சர்வதேசத் திரைப்பட விழாவினைப் பற்றி அறியவும் தொடரவும்:
https://www.facebook.com/21117InternationalFilmFestival
https://twitter.com/21117_festival
https://www.instagram.com/21117filmfestival/
– தினேஷ் ராம்