Shadow

ஏலியன்ஸ் 2042 விமர்சனம்

பூமியைத் தாக்கி, அழித்து, தண்ணீரை உறிஞ்சும் ஆக்ரோஷமான பவர் ஃபுல்லான வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது சீனப்படை. எத்தனை வருடம்தான் அமெரிக்கர்களே உலகைக் காப்பாற்றுவார்கள்?

‘ஏலியன்’ எனும் படத்தை 1979இல் ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அதன் அடுத்த பாகத்தை, அவதார் படப்புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1986 இல் ‘ஏலியன்ஸ்’ என்ற படத்தை எடுத்திருந்தார். ‘ஏலியன்ஸ் 3 (1992)’, ‘ஏலியன் ரீசரக்ஷன் (1997)’, ‘ப்ரோமிதியஸ் (2012)’, ‘ஏலியன் கோவெனன்ட் (2017)’ என படங்கள் வந்தன. அதில்லாமல், ‘ஏலியன் Vs பிரிடேட்டேர் (2004)’, ‘ஏலியன்ஸ் Vs பிரிடேட்டேர்: ரெக்வியம் (2007)’ என ஏலியன்ஸ்களை முன்னிலைப்படுத்தி மேலும் ஒரு தொடர் உருவானது.

நானூறு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். எத்தனை முறை சுட்டாலும், இறக்காதவைகள். மூளையே தலையாக, அதில் ஏகத்திற்குக் கண்களும், வாயும் உடைய வினோதமான ஜந்துக்களாய் உள்ளன ஏலியன்ஸ்கள். அதன் தலையிலுள்ள விர்ச்சுவல் ஹெல்மெட்டை மனிதரின் குண்டுகளால் துளைக்க முடியவில்லை. மனித இனமே சின்னாபின்னமாகி, அவர்கள் வாழ்விடம் சிதிலமாகி, கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் உயிர் தப்பி வாழ்கின்றனர்.

சீன இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு மட்டும் எப்படியாவது ஏலியன்ஸ்களிடம் இருந்து மனித இனத்தைக் காப்பாற்ற தீவிரம் காட்டுகிறது. தங்களுக்குத் தலைமையகத்தில் இருந்து கிடைக்கும் சிக்னலைத் தொடர்ந்து அவ்விடம் சேருகிறது படைப்பிரிவு. ஆனால், அது ஏலியன்ஸ்கள், உதிரியாகச் சிதறிக் கிடக்கும் இராணுவத்தினரை வரவைத்துக் கொல்லுவதற்காக வைக்கப்பட்ட பொறி என்றறிகின்றனர். அச்சிறு படைப்பிரிவு ஏலியன்ஸ்களை எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

‘அமெரிக்கப் படை எல்லாம் அழிந்துவிட்து. இனி நாம் தான் மனித இனத்தின் கடைசி நம்பிக்கை’ என்ற வசனத்துடன் தங்கள் ஆக்ஷனைத் தொடங்குகின்றனர் சீனர்கள். ஆஷன் அளவிற்கு எமோஷ்னல் காட்சிகளில் பெரிதாகப் படத்தில் எடுபடவில்லை. சீனத்தின் வறண்ட நிலப்பரப்புகளைத் திரையில் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆறு மொழிகளில் வெளியிடுகிறது 777 பிக்சர்ஸ்.