ஒன்பது இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படம்.
இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர் பிரபாகருக்கு, நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றும் இந்திய-அமெரிக்க நடிகரான கரண் சோனி குரல் கொடுத்துள்ளார். மார்வெல் என்டர்டெயின்மென்ட் படங்களான டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) ஆகியவற்றில் டோபிண்டர் எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார். அத்தொடரின் அடுத்த பாகமான டெட்பூல் 3 (2024) படத்திலும் டோபிண்டர் பாத்திரத்தில் கரண் சோனி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.
பவித்ர் பிரபாகருக்குக் குரல் கொடுத்த அனுபவத்தினைப் பகிர்ந்த கரண் சோனி, “ஒன்பது இந்திய மொழிகளில் ஸ்பைடர்-மேன் படம் டப் செய்யப்பட்டுள்ளது என்பது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஸ்பைடர்-மேன் மீதான இந்தியர்களின் காதலை நன்கு அறிவேன். இந்திய ஸ்பைடர் மேனுக்கு நான் குரல் தருகிறேன் என்ற அறிவிப்பு வந்ததும், எண்ண முடியாத அளவுக்கு எனக்கு அழைப்புகளும் செய்திகளும் வந்தன. முதலில், வாழ்த்துகளாகக் குவிந்த செய்திகள், பின், “சொதப்பி வச்சிடாத!” என்ற சீரியஸ் டோனிற்கு மாறின. நான் சொதப்பாமல் நிறைவாகக் குரல் கொடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்” என்றார்.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தை, ஜூன் 1, 2023 அன்று திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுகிறது.