ரகளபுரம் – கருணாஸ் மிக சிரமப்பட்டு தயாரித்து நடித்துள்ள படம்.
பயந்தாங்கொள்ளி வேலுவிற்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. பிறகு என்னாகிறது என்பது தான் கதை.
படத்தின் கதாநாயகன் தொடைநடுங்கி வேலுவாக கருணாஸ். தன்னை ‘கதையின் நாயகன்’ என்றே சொல்லிக் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அவர் முகம் பொருந்துகிறது. நன்றாக நடனம் ஆடுகிறார். கதைப்படி, துப்பறியும் சாம்பு பாணியில் இன்ஸ்பெக்டராகி விடுகிறார். ஆனால் அதற்கான சுவாரசியமும் திருப்பமும் போதிய அளவு திரைக்கதையில் இல்லை. மேலும் கருணாஸ் நாயகன் என்றால் நகைச்சுவைப் படமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், முழுவதுமாக திருப்திப்படுத்தப்படவில்லை.

கோவை சரளா, சிங்கம்புலி போன்றவர்கள் இருந்தும் நகைச்சுவையில் பெரிய வறட்சி உள்ளது. மேலும் வக்கிரமாகப் போயிருக்க வேண்டிய இந்த இணையின் மொக்கை நகைச்சுவைக் காட்சிகள், சிங்கம்புலியின் பிரத்தியேக குரல் மற்றும் உடல்மொழியாலும், கோவை சரளாவின் அனுபவம் மிக்க நடிப்பாலும் மறைந்து விடுகிறது. சமீப காலங்களில் வரும் பெரும்பாலான படங்களில் தப்பாமல் இருக்கும் ஒருவர் மனோபாலா. இப்படத்திலும் பென்சிலுக்கு சட்டை போட்ட ஆளாகத் தோன்றுகிறார். மயில்சாமி மின்னல் போல் அடிக்கடி தோன்றி இம்சிக்கிறார். படத்தில் ஆறுதலாக இருக்கும் ஒரே நகைச்சுவை நடிகர், கமிஷனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தான்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சுடுகாட்டில் பாடப்படும், ‘ஒபாமாவும் இங்கதான்.. ஒசாமாவும் இங்கதான்’ என்ற தத்துவ குத்துப்பாடலை கருணாசே பாடியுள்ளார். பின்னணி ஒலிப்பதிவும் இம்சிக்காமல் படத்தோடு ஒன்ற உதவுகிறது.
படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதி இயக்கியவர் மனோ எனும் மனோகர். எந்த லாஜிக் பற்றியும் கவலைப்படாமல், தைரியமாகப் படத்தை எடுத்துள்ளார். நகைச்சுவைப் படத்தில், நகைச்சுவை நடிகர் பட்டாளம் இருந்தால் மட்டுமே போதுமென நினைத்து விட்டுள்ளார் போலும். ரகளபுரத்தில் ரகளை இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.