மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?)
விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார்.
முதல் நாள் நாடகம் முடிந்ததும் என் நண்பரிடம் என் நடிப்புத் திறமையைப் பற்றிக் கேட்டேன்.
“மாப்பிள்ளை மாதிரி பளபளன்னு இருந்தீங்க.”
“அலோ நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் தடைப்பட்டவுடன் நல்லா பதட்டப்பட்டேனா!?”
“பதட்டமா? நீங்களா!! உங்களால் அதெல்லாம் முடியுமா? சீன் முடியுற வரை சிரிச்ச முகமா தான் இருந்தீங்க.”
பதட்டப்படா விட்டாலும் சிரிக்காமலாவது இருந்திருக்க வேண்டும். எனக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. 2003 இல் ‘அன்பே சிவம்’ படம் பார்த்தது முதல், காரணமின்றி சிரிப்பதை ஒரு கட்டாயப் பழக்கமாக்கிக் கொண்டேன். கண்ணாடி முன் நின்னு கோபப்பட்டுப் பார்த்தேன். ம்ஹூம்.. டிரஸிங் ரூமில் இருந்த பூசாரியிடம், “எனக்கு எப்படியாச்சும் கோவம் வரணும்” என சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரி மேலும் கீழூம் பார்த்தார். அவர் முகத்தைப் பார்க்கவே செம காமெடியாக இருந்தது. சிரிப்பு மீசையை ஒட்டிக் கொண்டிருந்தார். முதல் நாள் நாடகத்தில் அது இல்லை. அவரின் முக பாவனைகளை எல்லாம் அந்த மீசை மறைத்து விட்டது. “பாப்பார வீட்ல யாராவது கோழிய வெட்டுவாங்களா?” எனச் சொல்லும்பொழுது போதையில் கண்கள் சொருகுவது போல செய்வார். “வெளியில, எங்க வீட்ல வெட்டிக்கிறேன்” என அவர் கண்களில் ஒரு கள்ளத்தனத்தை ரிகர்சலின் பொழுது பார்க்க முடிந்தது. சுந்தர பாண்டியன் படத்தில், நாயகி பயிலும் கல்லூரியின் எதிரே மரக்கடை வைத்திருக்கும் பாயாக நடித்துள்ளார்.
“நீங்க இன்னும் கேரக்டரா மாறலை. அதான் பிரச்சனை. இன்னும் நீங்க நீங்களாவே இருக்கீங்க” என்றார் பூசாரியாக நடித்த சுரேஷ் குமார்.
இரண்டாம் நாள் மேடையில் நுழையும் பொழுது ராமமூர்த்தியாக நுழைந்தேன். அது தான் நான் செய்த பெரிய தவறு. நான் நானாகவே நுழைந்திருந்தால் ஏதோ ஒப்பேற்றிவிட்டு முதல் நாள் போல் வந்திருப்பேன். ஆயிரமாயிரம் கனவுகளுடன் காதலி வீட்டில் காலடி எடுத்து வைத்த எனக்கு கிடைத்தது ஏமாற்றமே!! எனது பரிதாப நிலைக்கு காரணம் ஐந்து பேர்.
அதில் முதல் நபர் என் காதலி வசுமதி. மிஸ்டர் ஸ்ரீனிவாசனிடம் காதலைப் பற்றிப் பேச லக்ஷ்மி மாமியை தூது விட்டிருக்க வேண்டும். முந்திரிக் கொட்டை போல் பேசி, அவருக்கு வெறுப்பு ஏற்பட செய்து விட்டாள் வசு. நான் 1949 இல் பிறந்தேன் என வருடத்தை சொல்லி, வயதை 29 எனக் குறைத்து சொன்னால் ஸ்ரீனிவாசன் கண்டுபிடிக்க மாட்டாரா என்ன? ஏன் அநாவசியமாக வசுமதி பொய் சொல்லணும். 33 லாம் ஒரு வயதா? பொய் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். அது கூட பரவாயில்லை. காதல் தோல்வியால் வீட்டைக் காலி பண்ணுமளவு பக்குவமடைந்த சுந்தரை, ‘என்னமோ நினைச்சுண்டு, எதுக்கோ ஆசைப்பட்டு, அது கிடைக்கலைன்னவுடன் தியாக சொரூபமாய் ஜெகத்ஜோதியாய் இருக்கார் இல்லாப்பா?’ என ஏதோதோ உளறி, கேலியாக உதட்டை சுழித்து, உசுப்பி விட்டு விட்டாள் வசுமதி. மகாபாரதப் போர் மூண்டதே திரெளபதி துரியோதனனைப் பார்த்து ஏளனமாக சிரித்ததால் தானே!! நுணலும் தன் வாயாற் கெடும். வேறென்ன சொல்ல?
ஞானம் 1: பொன்னான மனசே! பூவான மனசே!! வைக்காத பொண்ணு மேல ஆசை.
பிராமண பாஷை பிடிபடலைன்னாலும்.. தெனாவெட்டாக உதட்டை சுழிப்பதும், ராமமூர்த்தி பற்றிப் பேசும் பொழுது வெட்கப்படுவதும், அப்பாவிற்காக வருத்தப்படுவதும், சுந்தர் ராமமூர்த்தியின் பேச்சை எடுக்கும் பொழுது வெறுப்பை உமிழ்வதும், பெருமாளின் சித்தத்தைக் கேட்டு வெட்கப்படுவதும் என நிறைவாக நடித்துள்ளார். ஆனால் முதல் நாள், தண்ணீர் எடுத்து வர உள்ளே ஓடிய வசுமதி சொம்பை எடுத்து வருவது போல வெறும் கையுடன் ஓடி வந்தார். வசுமதியாக நடித்தவர் தெலுங்கு பெண். அவரை கொலுட்டி என அழைத்தாலும் கண்டுக்க மாட்டார். ஆனால் ‘தேள்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதை ஞாபகப்படுத்தினால் மட்டும் டென்ஷன் ஆகி விடுவார். அவருக்கு பெருமை எல்லாம் பாரதி மணியின் இயக்கத்தில் நாடகம் நடித்தோம் என்பதே!!
இரண்டாம் நபர் சுந்தர். நாங்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்தோம் என்பதை தவிர்த்து வேறெந்த சம்பந்தமும் எங்களுக்குள் இல்லை. ‘He is after girls, Vasu’ என்றெல்லாம் என்னைப் பற்றி கதை கட்டி விட்டிருக்கான். Useless fellow. அப்படி நினைச்சது தான் தவறாகப் போய்விட்டது. என்னுடைய அக்கா பெண்ணைக் கொண்டே நிச்சயதார்த்தத்தை சாமர்த்தியமாக நிறுத்தி விட்டான். அவனால் வேறென்ன தான் செய்ய இயலாது? பைத்தியம் பிடிச்சிருக்கு என சொல்லப்பட்டவரை கடவுளாக்கி பணம் பார்த்து விட்டான். சொம்பில் இருந்து திருநீறு வர வைத்த எமகாதகன்.
ஞானம் 2: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
சுந்தராக கலக்கியிருப்பவர் ராம்குமார். தங்கமான பையன். சில நாட்கள் பழக்கத்திலேயே நண்பராக நெருக்கமாக்கிக் கொண்டவர். அவரை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். அதற்கு அவர் தலைவர் போல. எங்கு வாய்ப்பு தேடிப் போனாலும் அனைவரையும் அரவணைத்துக் கொண்டே போவார். போராளி படத்தில், சசிகுமாரை சரக்கு வாங்கிக் கொண்டு வர சொல்லிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுபவராக நடித்துள்ளார். ராம்குமாரை தான் சசிகுமார் தலைகீழாக மாடியில் இருந்து தொங்க விடுவார். சுந்தர பாண்டியனில் சசிகுமாரை அடிக்க, தோப்புக்குள் பைக்கில் இருந்து இறங்கும் முதல் ஆள் இவர் தான். பஞ்சாயத்து சீனிலும் இருப்பார். அட்டகத்தி படத்தில் வரும், “ஆடி போனா ஆவணி” என்ற பாட்டில் 01:20 முதல் 01:35 வரை நீல கலர் டி-ஷர்ட்டில் இருப்பவர் இவர் தான். இப்போது ஒரு படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கவுள்ளார். சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தைப் படித்தவருக்கு, அவருக்கு பிராமண பாஷை வரலை என குற்றச்சாட்டு உள்ளது. சுஜாதா பிராமணராக உருவாக்கியிருந்த சுந்தரை இயக்குநரான பாரதி மணி, வேறு சாதியினனாக ஒரு சோதனை முயற்சி செய்துள்ளார் (இது சம்பந்தமான பாரதிமணியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்). பிராமண பாஷை தான் வேண்டுமென்ற கட்டாயம் இருப்பின், ராம்குமார் கண்டிப்பாக சிரத்தை எடுத்து கலக்கியிருப்பார். ஆனால் எவ்வளவு வசம்பை வாயில் தேய்த்தாலும், அவருக்கு ‘ஒன்னும்’ என சொல்ல வராது. ‘ஒன்னியும்’ தான் சொல்வார்.
மூன்றாம் நபர் ஜோ. தனது சிஸ்டர் மாதிரி என வசுமதியை சொல்வார். பாசமலரில் சிவாஜி, ஜெமினியைப் பிடிக்கா விட்டாலும் தங்கை ஆசைப்படுகிறாளே என கல்யாணம் செய்து வைப்பார். சிவாஜி கணேசன் ஒரு நல்ல அண்ணன். ஆனால் இந்த ஜோ? பக்கத்து வீட்டுக்காரரான சேஷகிரி ராவ்வின் வேட்டியை அவிழ்த்து கோமாளித்தனம் செய்து.. ச்சேச்சே என்ன அண்ணன் இவர்? அவர் கட்டியிருக்கும் வாட்ச் அல்லது ஏதோ கருவியில், இங்கிதம் என்ற சொல்லும் அதன் பொருளும் இல்லை போலும். தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வந்தவர், அதன் பின்புலமான கலாசாரத்தையும் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? உடம்பில் இரத்தம் ஓடினால் தானே.. காதல், ஊடல் பற்றிய அறிவெல்லாம் இருக்கும்?
ஞானம் 3: மாயா.. மாயா.. எல்லாம் சாயா.
ஜோவாக நடித்துள்ளவர் ஸ்ரீதர். மேடை நாடகங்களுக்கு லைட்டிங் அமைப்பவர். தான் இந்தச் சமுதாயத்தை சேர்ந்தவன் இல்லை என நிஜமாகவே எதிர்கால மனிதர் போல் வாழ்பவரே!! அவருக்கு எவருமே ஒரு பொருட்டல்ல. சுஜாதாவும் தான். கால இயந்திரம், ஸ்பேஸ் ஷிப் என சில இடங்களில் மாறி மாறி எழுதியிருப்பாராம் சுஜாதா. ஸ்ரீதருக்கு அது “கால இயந்திரம்” மட்டுமே!! ஸ்பேஸ் ஷிப் என யாராவது சொன்னால் பொங்கி எழுந்து விடுவார். அவரிடம் நாடகத்தன்று, “நீங்க வேஷ்டி கட்டிட்டு வந்தா.. வேஷ்டி காற்றில் பறக்கிற மாதிரி தான இருக்கணும்?” எனக் கேட்டேன். நல்ல மூடில் இருந்திருப்பார் போல. “என் மேலே படும் எதுவும் யார் கண்ணுக்கும் தெரியாது” என சிரிச்சார். அவர் சுந்தரை போல் மேடையை தனதாக்கிக் கொள்ளாமல் (வாய்ப்பிருந்தும்) மிதமான நடிப்பும், பாவனைகளுமே போதுமென்ற ரீதியில் நடித்திருப்பார். முதல் நாள் கால இயந்திரம் வரும் அனிமேஷன் இல்லை. இரண்டாம் நாள் இருந்தது. எனினும் டைமிங் மிஸ் செய்துவிட்டார்கள். அதே போல்.. கணினியில் ப்ளேயர் ஓபபன் செய்வது முதற் கொண்டு ப்ரொஜெக்ட் ஆனது.
“விஞ்ஞானம் மாமா” என்கிறார் ஜோ. விஞ்ஞானம் எப்படி ஓர வஞ்சனையோடு நடந்து கொள்ளும்? ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் ஜோ தெரிவாராம். வேறு யாருக்கும் தெரிய மாட்டாராம். அதற்கு விட்டலாச்சாரியாரிடமிருந்து ‘மாய மோதிரம்’ தான் வாங்கி போட்டுக் கொள்ளணும்.
சுஜாதா ‘ஜோ’ எனும் பாத்திரத்தின் மூலம் ஒரு நகைமுரணை உருவாக்கியிருப்பார். “நமக்கு யார் காலிலாவது விழுந்து கிடக்கணும்” எனப் பொருள் வரும் வகையில் ஒரு வசனம் பேசுவார் ஸ்ரீனிவாசன். அது சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் சிலிக்கன் மனிதனுக்கும் பொருந்தும். “என் தினசரி வாழ்க்கையை.. உருவாக்கி தந்த கம்ப்யூட்டர் தாத்தாவே!!” என தலைகீழாக நின்று தன் பக்தியைக் காட்டுவார். இரத்தம் போய் சிலிக்கன் வந்தாலும், மனிதனாகப் பட்டவன் ஏதோ ஒன்றை வழிபடும் ஆதி மனிதனின் எச்சமாகவே இருப்பான் என சுஜாதா உணர்த்த முயல்கிறார் போலும்.
நான்காவது நபர் ஸ்ரீனிவாசன். என் காதலியின் தந்தை. மரியாதைக்கு உரியவர். நான் கூட அவரிடம் பெருமாள் தான் வந்துட்டார் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால் தனக்கு பிடித்த சுந்தரின் விருப்பத்தை நிறைவேற்ற, ‘பெருமாள் சொன்னார்’ என அடிச்சு விட்டார் பாருங்க ஒரு ரீலு!! அது அவர் படித்த ‘எதிர்கால மனிதன்’ புத்தகத்தில், சுஜாதா விட்டிருந்த ரீலையே மிஞ்சிவிட்டது. தன் மகளின் விருப்பம் என்னவென்ற அறிய விரும்பிடாத ஆணாதிக்கவாதி என அவர் தெரிந்ததும் அவர் மீதிருந்த மதிப்பும், மரியாதையும் போய்விட்டது.
ஞானம் 4: கடவுள் எங்கேயும் வர மாட்டார். அகம் பிரம்மாஸ்மி!!
நாடகத்தின் நாயகன் பாரதி மணி. ஊர் கூடி தேர் இழுக்கலாம் வாரீர் என அழைத்து விட்டு, தனி ஆளாக அத்தனை பேரையும் தனது நடிப்பால் ஈர்த்து இழுத்து விட்டார். இவர் மீதுள்ள அபிரிதமான அன்பால், 60 Laughters a minute என நாடகம் பற்றி பொய் சொல்லியுள்ளார் சுப்புடு. அது மிகை பாராட்டு. நான் கவனித்த அவரை 6 Claps a minute தான் அரங்கில் எழுந்தது. இந்த 6 claps-ஐ 3:2:1 எனப் பிரிக்கலாம். 3 claps பாரதி மணியின் நடிப்புக்கு, 2 claps சுஜாதாவின் வசனத்திற்கு, மீதம் 1 மற்ற நடிகர்களுக்கு (சத்தியமாக எனக்கில்லை).
கோபமாக இருக்கும் ஸ்ரீனிவாசனை, சுந்தர் புத்தகம் வேணுமா வேணாமா எனக் கேட்பான். அதற்கு ஸ்ரீனிவாசனான பாரதி மணி, “பப்.. பப்.. வேணும்” என கோபத்தையும், எதிர்பார்ப்பையும் கலந்த தொனியில் சொல்வார். ‘வேணும்’ என்ற வெகு சாதாரணமான சுஜாதாவின் வசனத்தை தனது நடிப்பாற்றாலால் கைதட்டல்களாக மாற்றி விடுகிறார் பாரதி மணி. கத்திரிக்காய் நறுக்க கூட ஆள் ஆப்ட்டுவாங்க போல.. ஆனா நாடகத்தில் நடிக்க நாயகி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதற்காக பாரதி மணி பட்ட சிரமங்கள் வார்த்தைகளால் அடக்க இயலாது. உதாரணத்திற்கு ஒன்று.வைஷாலி நடித்த தேள் என்ற படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த ட்ரெயிலரை கண் கொண்டு பார்க்க முடியலை. ஏ.வி.எம். ப்ரிவியூ தியேட்டரை விட்டு நான் ஓட்டம் பிடித்து விட்டேன். ஆனால் பாரதி மணி பெரிய மனிதர் அல்லவா? செவன் டைம்ஸ் அந்த ட்ரெயிலரையும் பாடலையும் பொறுமையாக அவர் பார்க்க நேர்ந்தது. எதிரிக்கு கூட அப்படியொரு துன்பம் நேர்ந்து விடக் கூடாது.
ஏப்ரல் 23 ஆம் தேதி, கவிஞர் பத்மஜா நாராயணனுக்கு கவிதை உறவுகளில் முதல் பரிசு கிடைத்தது; பாரதி ஒன் மேன் ஷோவாக நாடகத்தில் கலக்கினார்; க்றிஸ் கெயில் ஐ.பி.எல்.லில் 175 ரன்கள் விளாசினார்; அன்றிரவு சென்னையில் மழை பெய்தது. முதல் நாள் இருந்த எனர்ஜி லெவல் (physical stamina) அடுத்த நாள் அவரிடம் கொஞ்சம் குறைந்திருந்தது. எனினும் இரண்டாவது நாள் உற்சாகமும், வியர்வையும் அளவுக்கதிமாகக் கொப்பளித்து நிற்க முடியாமல் நின்று அனைவருக்கும் நீண்டதொரு நன்றியுரையை வாசித்தார். நான்லாம் ஒரு காட்சியில் நடித்ததற்கே செம டயர்ட் ஆயிட்டேன்.
ஐந்தாவது நபர் என் அப்பா (சுஜாதா இந்தப் பாத்திரத்திற்கு பெயர் வைக்கவில்லை). ஓய்வுப் பெற்ற தாசில்தார். மனிதர்களை அவர்களின் ஊரோடு ஞாபகம் வைத்துக் கொள்வார். பெண் பார்க்க வந்த இடத்தில் இவர் அநாவசியமாகப் பேசியதால் தான் நிச்சயமே நின்னது. இவர் பாட்டுக்கு வசுவை பாட சொல்லிட்டார். அப்பாவும், மகளும் இணைந்து, “ஏன்டா வந்தீங்க?” எனக் கேட்பது போல் கர்ணக் கொடூரமாக பாட தொடங்கி விட்டனர். ‘என்னடா இது வம்பாகப் போச்சு?’ என இவரைப் பார்த்தால், நன்னிலம் சுந்தர்ராஜன் யாருன்னு யோசிச்சுட்டிருக்கிறார் (மேலே உள்ள படத்தைப் பாருங்கள்). இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன், இப்ப அந்த நன்னிலம் சுந்தர்ராஜன் யாருன்னு தெரிஞ்சுக்கிறது அவ்வளவு முக்கியமா? வசு பாடின பாட்டுக்கு, பின்னால ஃபோட்டோவில் இருக்கும் சரஸ்வதியே இறங்கி வந்து அவர் கையில் இருக்கும் வீணையிலாயே வசு தலையில் இரண்டு போட்டிருப்பார். ஏதோ குளறுபடி நடக்குது எனப் புரிந்ததும் அமைதியாக வெளியில் வந்திருக்கலாம். “நீங்க அந்தப் பைத்தியக்கார சுந்தர்ராஜன் குடும்பம் தான?” எனக் கேட்டு நிரந்தரமாகப் பிரிச்சு விட்டார். இல்லைன்னா ஸ்ரீனிவாசன் கடவுள் ஆனதும், ஓரெட்டுப் பார்த்துட்டு வந்திருக்கலாம். ஜோ, சுந்தர்ராஜன் என நான் பார்த்திராத நபர்கள் என் காதலிற்கு எமனாகி விட்டனர்.
ஞானம் 5: அநாவசியமான தேடல் இருண்மைக்கு இட்டுச் செல்லும்.
ராமமூர்த்தியின் அப்பாவாக நடிச்சவர் கிருஷ்ணன் வெங்கடாசலம். நாடகத்தில் அப்படியே பாத்திரத்திற்குப் பொருந்தியவர்கள் பத்மஜாவும், வெங்கடாசலமும் மட்டுமே. இவர்எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி. இவரொரு perfectionist. நான் அப்படியே அவர் குணத்திற்கு எதிரானவன். அதனாலோ என்னவோ சம வயது ஆட்களுடன் ஏற்படாத நெருக்கம் அவரிடம் ஏற்பட்டு விட்டது. உனக்கு பிடிச்ச எழுத்தாளர் யாரென என்னிடம் கேட்டால் ரொம்ப யோசித்து, “அப்படிலாம் யாரும் இல்லை. அனைவருமே ஏதோ ஒரு படைப்பில் அவங்க உச்சத்தை அடைகிறார்கள்” என கேள்வி கேட்டவரை குழப்பி விட்டுடுவேன். அதே கேள்வியை இப்ப தூக்கத்தில் எழுப்பி என்னைக் கேட்டால், “கிருஷ்ணன் நம்பி” என சொல்லிட்டு தூங்கிடுவேன். அப்படியென்ன அண்ணன் மீது பாசம்னு வியக்க வைக்கிற அளவுக்கு, கிருஷ்ணன் நம்பி பற்றி சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார். கூடு தளத்தில் “மாயலோகத்தில்” என தொடர் எழுதியுள்ளார் வெங்கடாசலம்.1940 – 60 களில் வந்த திரைப்படங்கள் குறித்தெல்லாம் ஆழ்ந்த தகவல்களை அறிந்தவர். திரையிசைப் பற்றி உயிர்மையில் ஷாஜி தகவல் பிழையுடன் எழுதிய அபத்தமான கட்டுரை குறித்து சொன்னார். அந்தப் பிழைகளை சுட்டிக் காட்டி, மனுஷ்ய புத்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அது பிரசுரிக்கப்படாததால், நேர்மையற்ற உயிர்மையை வாங்குவதையே நிறுத்தி விட்டாராம். “நேர்மை இல்லாம அப்புறம் என்ன ஓய்ய்.. சிறு பத்திரிக்கைன்னுட்டு” என சொல்லி விட்டு, “தகவல் தவறாகக் கடத்தப்படுகிறதே என வருத்தம் தான். யாருகிட்டயும் இதெல்லாம் சொல்லாதீங்க. ஏதாச்சும் பண்ணிட்டுப் போகட்டும்” என்றார். (நான் ஏன் சொல்றேன்? எனக்கு யாரைத் தெரியும்? எழுதுவதும் சொல்வதும் ஒன்றாகா!!)
இந்த ஐவரை கூட மன்னித்து விடலாம். ஏதோ சுய வெறுப்பு விருப்புகள், தொட்டில் முதல் தொடரும் விநோதமான பழக்க வழக்கங்கள் என என் காதலை அறிந்தோ அறியாமலோ பிரித்து விட்டனர். ஆனால் இந்த ரசிகர்கள்?
“இனி ராமமூர்த்தி சகவாசமே வேணாம்” என வசு சொல்லும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியுடன் கை தட்டுகின்றனர். இவங்களுக்கு எல்லாம் நானென்ன பண்ணேன்? இரண்டாம் நாள், என் காட்சி முடிந்ததும் நாடகத்தை ரசிகனாகப் பார்க்க அரங்கிற்குள் நுழிந்தேன். இடைவேளை விட்டு விட்டார்கள். ப்ளூ சஃபாரி போட்டவர் ஒருவர் என்ன கடந்து வேகமாக வெளியில் போனார். நின்று திரும்பி, “மாப்பிள்ளை சார்! வசு உங்களுக்கா சுந்தருக்கா?” எனக் கேட்டார். இதே கேள்வியை ஃபேஸ்புக்கில் கமென்ட்டாக கேட்டிருந்தால், “இன்னும் அரை மணி நேரத்தில் தெரிஞ்சுடும். நீங்களே பார்த்துக்கோங்க சார்” என பதிலளித்திருப்பேன். நேரிலோ நெற்றியில் வைத்திருந்த திருநீறுக் கீற்றுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் பவ்யமாக, “வசுக்கும், சுந்தருக்கும் தான்…” என நான் முடிக்கும் முன்..
“வெரிகுட்! வெரிகுட்!! நல்ல சாய்ஸ்” என மகிழ்ச்சியாகத் திரும்பி அவரது நண்பர்களிடம், “பொண்ணு இவருக்கு இல்லையாம்” என மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறார். இது எனக்கு தேவையா!?
முதல் நாளை விட அடுத்த நாள் கூட்டம் கொஞ்சம் கம்மி. அடுத்த முறை நாடகத்திற்கு வர்றேன் என வராதவர்கள் வீட்டுக்கு எல்லாம் நேரில் போய், ஜோவை விட்டு ஏப்பம் விட வைக்க வேண்டிது தான். கமலுக்கே விஸ்வரூபம் எடுக்க நாற்பது நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் பாட்டையா முதல் காட்சியில் இருந்தே தனது விஸ்வரூபத்தை மறைக்க படாதபாடு படுகிறார். 69 வருடமாக நடித்து வருகிறார். நாடகத்தை முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்ற குறை நீங்கவே நீங்காது.
சரி இப்ப ராமமூர்த்தி விஷயத்திற்கு வருவோம். தன் வாழ்வில் நடந்த எதிர்பாராத ஏமாற்றமளிக்கும் அனுபவங்களால் அவர் பரதேசியாகிட்டார். ம்ம்.. எப்படி இருந்த ராமமூர்த்தி?
பி.கு.: நான் சரியாக நடிக்கலை என்பதை சமாளிக்க எப்படிலாம் பாடுபட வேண்டியிருக்கு.
– தினேஷ் ராம்