Shadow

கண்ணப்பா | ஓர் அசாத்திய சிவ பக்தரின் வரலாற்றுப்படம்

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஸ்டீஃபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இயக்குநர் முகேஷ் குமார் சிங், “மேடையில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என ‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்தியத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரம்மாண்டமான திரைக்காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி, “’கண்ணப்பா’ படத்திற்காக, 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு பெரும் குழுவை நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நான் ஒரு முறை அங்குச் சென்றிருந்த போது, மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு விஷ்ணு சார் சில காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் அதே போல் மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு ஒரு குழு இருந்தது. ‘அது யார்?’ என்று கேட்டேன். ‘அதுவும் நம்ம படம் தான். மதுபாலா மேடம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது’ என்று விஷ்ணு சொன்னார். மற்றொரு பக்கம் மூன்று கேமராக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ‘அங்கு என்ன நடக்கிறது?’ எனக் கேட்டால், சரத்குமார் சாரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றார். இப்படி மிகப் பெரிய குழுவுடன் ஏகப்பட்ட காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எடிட் செய்வதற்கும் சவாலாக இருக்கிறது. படம் சூப்பராக வந்திருக்கிறது. படத்தொகுப்பு செய்ய உதவிய இணை இயக்குநருக்கு நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த், “இந்தப் படத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஷெல்டன். அமெரிக்க ஒளிப்பதிவாளர் அவர். நான் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக தான் பணியாற்றியிருக்கிறேன். விஷ்ணு சார் என் குடும்ப நபர் போன்றவர். அவர் தான் என்னைத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். விஷுவலாக படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கண்ணப்பாவின் முக்கியமான கதை, அவர் யார், அவர் எப்படிப்பட்ட சிவ பக்தர் போன்றவற்றைத் தாண்டி, படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது” என்றார்.

நாயகி ப்ரீத்தி முகுந்தன், “இவ்வளவு பெரிய படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்தக் குழு ஒரு குடும்பம் போல் இருந்தது. என்னை ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்தப் படம் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் நடிப்பதற்காக தான் திரையுலகிற்கு வந்தேன். ஆனால் இந்தப் படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியைக் கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாகக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்த்து எனக்கு ஃபிலிம் மேக்கிங் மீது பேஷன் வந்துவிட்டது” என்றார்.