

ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான அறிவியல் புனைவாக உருவாகியுள்ள படம் மகரம் ஆகும்.
ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்கக் கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன், “புதிய டீமாக இருந்தாலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து தைரியமாகச் செயல்பட்டுள்ளோம். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒன்று” என்றார்.
படத்தொகுப்பாளர் கார்த்திக் செல்வம், “தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு மான்ஸ்டர் கதையைப் பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சி செய்துள்ளோம். எல்லாத் தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திரையரங்கில் பார்க்கும்போது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
நடிகை இஷிதா, “இந்த படத்தில் ‘நாவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். முதலில் முழுக் குழுவினருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மொழி வேறுபாடு இருந்தாலும், என்னை மிகவும் அன்பாக ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாகவே இங்கே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்தக் கப்பலின் கேப்டன், நம்முடைய இயக்குநர் அகஸ்டின். பிரபு சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் கூட வைக்க நினைத்தால், ‘ப்ராசஸ்ஸை நம்புங்கள்’ என்று அவர் சொல்வார். இன்று டீசரைப் பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தை நிறைய அன்பும் ஆர்வமும் கொண்டு உருவாக்கியுள்ளோம்” என்றார்.
தயாரிப்பாளர் ராம் மணிகண்டன், “கடைசியாக ‘சதூர்’ ட்ரெய்லர் வெளியிட்டோம். ட்ரெய்லருக்குப் பிறகு பல டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு ப்ரிவியூ காட்டியபோது நல்ல ஃபீட்பேக் கிடைத்தது. சில கரெக்ஷன்ஸ் மற்றும் ஆலோசனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து படத்தின் தரத்தை மேம்படுத்தினோம். இதற்கிடையில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்று யோசித்தோம். அப்படித்தான் ‘மகரம்’ ஆரம்பமானது.
என் இன்ஜினியரிங் ஃபேக்டரியில் நடந்த ஒரு கலந்துரையாடலில்தான் இந்த ஐடியா வந்தது. அங்கேயே ‘ராக்ஸ் சினிமாடிக் யூனிவர்ஸ்’ உருவானது. இந்த யூனிவர்ஸின் முதல் ரிலீஸாக “மகரம்” வர இருக்கிறது. எங்கள் முதல் படத்திலிருந்தே இருந்த டீம் இங்கும் தொடர்கிறது. மேலும் புதிய திறமைகளும் இந்த யூனிவர்ஸில் இணைந்துள்ளனர். இனி வரும் அனைத்து ப்ராஜெக்ட்களிலும் இந்த டீம் இருக்கும். இயக்குநர் அகஸ்டின் அடுத்து ஹாலிவுட் படம் செய்யப்போகிறார்” என்றார்.
இயக்குநர் அகஸ்டின் பிரபு, “இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் சார். அவரின் நம்பிக்கையால்தான் இந்தத் திரைப்படம் தொடங்கியது. நான்கு கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது. பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே ‘மகரம்’ உருவானது. ‘சதூர்’ படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யவில்லை.
பெரிய டீம்களுக்கு கூடச் சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தைத் தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்குப் பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தைத் தரும்” என்றார்.
தொழில்நுட்பக் குழு:-
கதை திரைக்கதை இயக்கம் – A. அகஸ்டின் பிரபு
இசை – ஆதர்ஷ் சந்திரசேகரன்
படத்தொகுப்பு – கார்த்திக் செல்வம்
ஒளிப்பதிவு – அமல் டோமி
உடை வடிவமைப்பு – டிரக்ஷா & குழு
VFX மேற்பார்வை – A. அகஸ்டின் பிரபு
இணை இயக்குநர் – செந்தில் குமார்
தயாரிப்பு நிறுவனம் – ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் – ராம் மணிகண்டன்
மக்கள் தொடர்பு – A. ராஜா
பப்ளிசிட்டி டிசைனர் – கேசவன்
கலை – காளி
ஒலி கலப்பு – K. சக்திவேல்
நிற அமைப்பு (Colorist) – சியாயுதீன்


