32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

Dinesh R சேலம் Published: 28/02/2026 2 நிமிட வாசிப்பு Updated: 05/03/2026 சினிமா
எழுத்து அளவு:

ஆழி என்றால் கடல் எனப் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று ‘தி ஓஷன்’ என்பதையும் தலைப்பில் முன்னெச்சரிக்கையாகச் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாகர்கோவிலில் அரசியல் செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராகவும் வஸ்தாதாகவும் இருக்கிறார் மூர்த்தி. அவரது மகள் முகிலாவை ஏழையான அருள் காதலிக்கின்றான். இக்காதல் விஷயம் தெரிந்தவுடனே, அருளைப் படகில் கட்டிப் போட்டு கடலுக்குள் அழைத்துச் சென்று நையப்புடைக்கிறார் மூர்த்தி. அதிலிருந்து அருள் தப்பி மூர்த்திக்கு எதிராக ஆற்றும் எதிர்வினையே ஆழி படத்தின் முடிவாகும்.

ரத்தம் வழிய வழிய மூர்த்தியிடம் அடி வாங்குகிறார் அருள். ஒரு வதை முகாமில் சிக்கிய உணர்வைத் தருமளவுக்கு அடிக்கிறார், அடிக்கிறார், அருளை அடித்துக் கொண்டே இருக்கிறார் மூர்த்தி. நல்லவேளையாக மகள் மீது மூர்த்தி வைத்திருக்கும் பாசத்தையும், முகிலா – அருள் காதலையும், அருள் தன் குடும்பத்து மேல் வைத்திருக்கும் பாசத்தையும் இடையிடையே காட்டுகின்றனர். இல்லையெனில் பார்வையாளர்களுக்கு மன அதிர்ச்சி (trauma) தான் ஏற்படும்.

‘கடலில் தூக்கிப் போட்டு இலகுவாகக் கொன்றுவிடாமல் ஏன் இப்படி சித்திரவதை பண்றாஙக’ எனப் பார்வையாளர்கள் முணுமுணுக்குமளவு அக்காட்சிகள் ஓவர்-டோஸ் ஆகியுள்ளன. நல்லவேளையாக, இடைவேளைக்குப் பின் படம் கொஞ்சம் நிதானித்து, மூர்த்திக்கும் அருளுக்குமிடையே நிகழும் மாற்றத்தையும் போராட்டத்தையும் நோக்கிப் பயணிக்கிறது திரைக்கதை.

முகிலாவாகத் தேவிகா சதீஷும், அருளாக இந்திரஜித் ஜெகஜித்தும் நடித்துள்ளனர். முகிலா மிக அழகாக ரசிக்கும்படி திரையில் தோன்றி, வதையில் இருந்து நம்மைக் காக்கும் தேவதையாகக் கவருகிறார். காதல் காட்சிகளில் கூட, பரிதாபத்திற்குரிய அருளாகவே கடைசி வரை தோற்றமளிக்கிறார் இந்திரஜித் ஜெகஜித். முரட்டுத்தனமான மூர்த்தி கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார் சரத்குமார். திரைக்கதையில் பசையில்லாததால் அனுபவமிக்க நடிகரான சரத்குமாரும் செய்வதற்கும் ஒன்றுமில்லாமல் ஒருவித பரிதவிப்போடே திரையில் இருக்கிறார்.

எழுதியியக்கியுள்ள மாதவ் ரமா தாசனின் நோக்கமாகப்பட்டது, இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்துள்ள ரெசூல் பூக்குட்டியின் திறமையை முழுவதும் வெளிக்கொணர்வதாக இருந்துள்ளது. அடிச்சாச்சு, அடி வாங்கியாச்சு என இரண்டு பிரதான கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் குழம்பித் தவித்தாலும், ஒரு கதாபாத்திரம் போலவே படம் நெடுகேயும் ஒலி வடிவமைப்பு தனி ஆவர்த்தனம் செய்துள்ளது. கண்ணை மூடிப் படத்தை ரசித்தாலும், பெரிதாகக் கதையைத் தவறவிடாமல், ஆழியில் தத்தளிக்கும் படகில் சிக்கிய அனுபவத்தைச் செவி வழியாகத் திறம்பட பாவிக்க வைத்துள்ளார் ரசூல் பூக்குட்டி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.