Shadow

“கனவுகளை நிஜமாக்கும் வரம்” – விக்னேஷ் சிவன் | LIK

பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு தனியார் கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம், “நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை, 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம். தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 இடியட்ஸ் அல்லது முன்னா பாய் M.B.B.S. மாதிரி மனதைத் தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். நானும் ரௌடிதான் கதையைப் படம் எடுக்கும் முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதைக் கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்தக் கதையைப் பல ஹீரோக்களுக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்லச் சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கித் தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார், எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.இந்தப் படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையைப் பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம் உண்மையாக நம்புவது தான் காதல்.இப்போது நாம் யாரையும் பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரைப் பற்றித் தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியைத் திட்டினாலும் பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு. தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது. அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், “தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்.விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாகத் தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்குப் பாடல் எழுதுகிறார் என்றால், அந்தப் படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு அதுவே சாட்சி” என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்துப் படம் இயக்குகிறார் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன். நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காகக் கதைகளையும் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாகக் கொண்டு படங்கள் ரொம்பக் குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே ‘சூப்பர்!’ன்னு உணர்வு வந்தது” என்றார்.

விக்னேஷ் சிவன், “இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு-வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு, ‘இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்’ என்று. ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்தப் படத்தில் வைத்திருக்கிறேன்.இந்தப் பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறிப் போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்குப் போவார்கள் என்று நான் நம்புகிறேன்.பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதைசொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்தப் படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்தப் படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், எனக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ” என்றார்.