Shadow

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

பெரம்பூர் பையனுக்கும், ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆச்சா என்பதே அன்பே டயனா படத்தின் ஒரு வரிக்கதை.

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் குடியிருக்கிறது ஹீரோ பாரி இளவழகனின் குடும்பம். அம்மா ரோஜா, அவர் சாதிப்பற்றுக் கொண்ட கண்டிப்பான அம்மா. கதாநாயகனுக்கு அம்மா என்றால் பயம். அதே போல்தான் கதாநாயகனின் அப்பா சேத்தனுக்கும். அக்கா ஒருவர், தன் கணவனோடு ஒரு மனக் கசப்பில் மூளை சார்ந்த நோய்மை கொண்ட மகளோடு தாய்வீட்டிலேயே இருக்கிறார். கதாநாயகனின் தம்பி அநியாயத்திற்கு சமர்த்து. இப்படியான கதாநாயகனின் குடும்பத்திற்குக் குட்டைப்பாவடையும், குடும்பக் குடியுமாக வாழும் நாயகி ரம்யா ரங்கநாதன் எப்படி செட்டாவார் என்ற கேள்விக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை.

ஜமா படத்தில் கதாபாத்திரத்தோடு அவரைப் பிரித்துப் பார்க்க முடியாத படி நடித்திருந்தார் பாரி இளவழகன். அப்படம் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிற்பதற்கு அவரின் எழுத்தும் இயக்கமும் ஒரு காரணம் என்றாலும், அவரது நடிப்பே பெருங்காரணம். இந்த டயனாவில் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லாத நடிப்பு. ஆனாலும் மெனக்கெட்டு நன்றாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தி இருப்பவர் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் தான். அசத்திவிட்டார். சேத்தன் அபாரமான நடிப்பால் படத்தை பாசிட்டிவ் டோனில் கொண்டு போகிறார். ரோஜா, செல் முருகன், கதாநாயகியின் அக்கா, தம்பி ஆகியோர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பரிதாபங்கள் கோபி பல இடங்களில் டல்லடித்தாலும் சில இடங்களில் காமெடியால் ஜில்லடிக்கிறார்.

ஷெல்லி காலிஸ்டின் கேமரா வேலைப்பாடு அபாரம். பெரம்பூரின் நிலவியலை உயிரோட்டமாகக் காண்பித்துள்ளார். பரத் சங்கர் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் தரம்.

ஜமாவில் இயக்குநராகப் பெரிதாகப் பேசப்பட்ட பாரி இளவழகன், இப்படத்தில் மிகவும் மெலிதான கதையைத் தான் கையலெடுத்துள்ளார். புத்திசாலித்தனமான காட்சிகளைப் படத்தில் விரல் விட்டே எண்ண முடியும். ஆக, ஜமா படத்து ரசிகர்கள் ஏமாறலாம், ஆனாலும், கடைசியில் ஒரு மாஸ் காமெடி சீக்வென்ஸை வைத்துப் படத்தை ரசிக்கும்படி முடித்து ரசிக்க வைத்துள்ளார்.

– வெண்பா தமிழ்