Shadow

மழையில் கரைந்த கனவு

ind-vs-nz

லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் முதலாவது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்ற வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் குல்தீப்புக்குப் பதில் சஹோல் சேர்க்கபட்டார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, மற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது. ஆட்டத்தின் முதல் பந்தை புவனேஷ்வர் வீச, குப்தில் எதிர்கொண்டார். பந்து பேடில் பட, LBW கேட்டனர். களநடுவர் மறுக்க, இந்தியா DRS கேட்டது, ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது தெரிய, இந்தியா தனது ரீவீயூ வாய்ப்பை இழந்தது.

புவனேஷ்வர், பும்ரா இருவரும் தத்தம் முதல் ஓவரை மெய்டினாக வீச, ஆட்டத்தின் 17வது பந்தில் நியூசிலாந்து முதல் ரன்னை எடுத்தது, குப்தில் ஏன் அந்த ரன்னை எடுத்தோம் என அடுத்த ஓவரில் நினைத்திருப்பார். பும்ரா வீசிய பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். இந்தப் போட்டிதொ தொடரில் நியூசிலாந்து ஆபத்பாந்தவன் வில்லியம்சன் இறங்க, அந்த ஓவரையும் மெய்டினாக முடித்தார் பும்ரா.

ஐந்து ஓவர் முடிவில் 7/1 என்ற நிலையில் நியூசிலாந்து இருந்தது, இந்த உலகக்கோப்பைத் தொடரில் முதல் ஐந்து ஓவரில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.
எட்டாவது ஓவரில் நியூசிலாந்திற்கான முதல் பௌண்டரியை நிக்கோலஸ் பும்ரா ஓவரில் அடித்தார். முதலாவது பவர் ப்ளே முடிவில் நியூசிலாந்து 27/1 என்ற நிலையில் இருந்தது. பவர் ப்ளேவில் இந்த உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.
நிக்கோலஸ் – வில்லியம்சன் இணை எந்தவித பெரிய ரிஸ்கும் எடுக்காமல், அதே சமயம் ரன் ரேட்டையும் உயர்த்தும் படி விளையாடியது .
ஒருவழியாக ஜடேஜா இந்த இணையைப் பிரித்தார். நிக்கோலஸ் 29 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து நியூசிலாந்தின் அனுபவம் மிக்க வீரர் டெய்லர், இந்த இணை விக்கெட் விழாமல் பார்த்து கொள்ள, மிகவும் பெறுமையாக விளையாடியது.
சஹோல் வீசிய முப்பதாவது ஓவரில் அரை சதத்தை நிறைவு செய்தார் வில்லியம்சன். அடுத்த ஓவரில் பும்ரா பந்துவீச்சில் டெய்லர் பேட்டில் பட்ட பந்து கீப்பர் தோணிக்கு சற்று முன் விழுந்ததால், கேட்ச் கண்டத்தில் தப்பினார். சஹோல் இந்த இணை பிரித்தார். வில்லியம்சன் 67 ரன்னில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் நீஸம் களமிறங்க, டெய்லர் மறுமுனையில் தடுப்பாட்டத்திலிருந்து மாறி, அடித்து ஆட ஆரம்பித்தார். 38வது ஓவரில், பாண்டியா ஓவரில் நீஸம் கொடுத்த கேட்ச்சை ரோகித் தவறவிட்டார். ஆனால் நீஸம், பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்க காலின் டி கிரெண்ட்ஹோம் அதிரடி காட்டினாலும், நீண்ட நேரம் களத்தில் இருக்கவில்லை. புவனேஷ்வர் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்னில் வெளியேறினார். இதற்கிடையே சஹோல் பந்தில் நியூசிலாந்திற்கான முதல் சிக்ஸை டெய்லர் அடித்தார். அந்த ஓவரில் நியூசிலாந்து 18 ரன்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் ஓர் ஓவரில் குவிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் இதுவே!
அந்த சிக்ஸ் மூலம் தன் அரைசதத்தை நிறைவு செய்தார் டெய்லர். ஒரு தினப் போட்டிகளில் அவரது ஐம்பதாவது அரைசதம் ஆகும். 45 ஓவரின் முதல் பாலில் டெய்லருக்கு அம்பயர் LBW கொடுக்க, டெய்லர் ரீவீயூ செய்தார். ரீப்ளேவில் பந்து Impact outside the off ஆக வர டெய்லர் தப்பித்தார்.

47வது ஓவரில் முதல் பந்தை வீசிய நிலையில் மழை குறுக்கிட, போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் மழை தொடர்ந்ததால், ஆட்டம் மறுதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒரு தினப் போட்டி, இருதினப் போட்டியாக மாறியது. ஏற்கெனவே, 1999 இந்தியா – இங்கிலாந்து போட்டி இதே போல் இருநாட்கள் நடந்தது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த நாள் மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்த டெய்லர் – லாதம் இணையை ஜடேஜா அருமையான ரன்அவுட் மூலம் பிரித்தார். மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட டெய்லரை, பவுண்டரி லைனில் இருந்த அடித்த டைரக்ட் ஹிட் மூலம் ஜடேஜா டெய்லரை 74 ரன்னில் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் லாதமை புவனேஷ்வர் பந்துவீச்சில் அருமையான கேட்ச் பிடித்தார் ஜடேஜா. லாதம் 10 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரில் ஹென்றி ஒரு ரன்னில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 239/8 குவித்து, இந்தியாவிற்கு 240 ரன்களை இலக்காக நிர்மாணித்தது.

உலகக்கோப்பையில் இந்தியா கடைசியாக சேஸிங்கில் வெற்றி பெற்றது 1983இல் தான். 1987, 1996, 2015 சேஸிங்கில் தோற்றது என ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள், இந்தத் தொடர் முழுவதும் ஆடிய ஆட்டத்தால் நம்பிக்கையுடன் இருந்தனர்.

அந்த நம்பிக்கையை இரண்டாவது ஓவரில் தகர்த்தார் ஹென்றி. ரோகித் சர்மா ஒரு ரன்னில் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த ஓவரில் போல்ட், கோலியை LBW முறையில் ஒரு ரன்னில் வெளியேற்ற, அடுத்த ஒவரில் ராகுலும் ஒரு ரன்னில் ஹென்றி பந்துவீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்தார். இந்தியா 5/3 பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது, இந்தத் தொடரில் முதல் மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியது இதுவே முதல்முறை. மூன்று வீரர்களில் ஒருவர் கூட அரைசதம் கடக்காத போட்டியும் இதுவும்.
பின்னர் இணை சேர்ந்த தினேஷ் கார்த்திக் – பண்ட் இணை சரிவிலிருந்து மீட்க தடுப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தது.ஐந்து ஓவர் முடிவில் 6/3 என்ற நிலையில் இருந்தது. இந்த உலகக்கோப்பையில் ஐந்து ஓவர் முடிவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.
குறிப்பாக தினேஷ் கார்த்திக் 21 பாலில் தான் தன் முதல் ரன்னை பௌண்டரி மூலம் அடித்தார், ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் அடித்த பந்தை நீஸம் அருமையாக ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து 6 ரன்னில் வெளியேற்றினார்.

10 ஓவர் முடிவில் 24/4 என்ற இந்தத் தொடரின் குறைந்தபட்ச முதல் பவர் ப்ளே ஸ்கோரில் இருந்தது. பின்னர் பாண்டியா – பண்ட் ஜோடி விளையாட ஆரம்பித்தது. அதிரடி ஆட்டக்காரர்களான இருவரும் சூழ்நிலை காரணமாகப் பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர் . 13வது ஓவரில் பண்ட் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை நீஸம் தவறவிட்டார். ‘என் கேட்சை மட்டும் கஷ்டமா இருந்தாலும் பிடிச்சிருங்க. மத்தவன் கேட்சை விட்டுருங்கடா’ எனக் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் நினைத்திருப்பார்.

20 ஓவர் முடிவில் 70/4 என்று ஒரளவு சரிவில் இருந்து மீண்டது. வேகப்பந்து வீச்சாளர்களை இருவரும் அருமையாக எதிர்கொள்ள, ஸ்பின் பௌலர் சன்டனரைக் களமறக்கினார் வில்லியம்சன். அதற்குப் பலனும் இருந்தது. முதல் ஓவரை மெய்டினாக வீசிய அவர், அடுத்த ஓவரில் பண்ட் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட் மெய்டினாக முடித்தார். பண்ட் 32 ரன்னில் காலின் டி கிரண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து தோனி களமிறங்க, மைதானம் எங்கும் ஆரவாரம், இதே போல் பலமுறை அணியைக் காப்பாற்றினர் தோனி. இந்த முறையும் காப்பாற்றவேண்டும் என ரசிகர்கள் வேண்ட ஆரம்பித்தனர். மேலும் விக்கெட் விழாமல் இருக்க, தடுப்பாட்டத்தில் ஆடின இந்த இணையை மறுபடியும் சன்டனர் பிரித்தார். 32 ரன்னில் பாண்டியா வில்லியம்சன்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 92/6 என்ற நிலையில் இருக்க, மேட்ச் அவ்வளவு தான் என நினைத்தாலும், தோனி களத்தில் இருப்பதால், ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது,. அந்த நம்பிக்கைக்கு நானும் இருக்கிறேன் என ஜடேஜா எண்ணெய் ஊற்றினார். மற்ற எல்லா வீரர்களும் தடுமாறிய களத்தில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். நீஸம் வீசிய 33 வது ஓவரில் வெளியே வந்து அருமையான சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. அதன் மூலம் 100 ரன்களைக் கடந்தது இந்தியா. இந்த உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட ஸ்லோவான சதம் இதுவே.

தொடர்ந்து அதிரடியாக விளையாடின ஜடேஜா, மற்றவர் தடுமாறிய சன்டனர் பந்துவீச்சில் இரு சிக்ஸர்கள் பறக்க விட்டார். நீஸம் வீசிய 42வது ஓவரில், தன் அரை சதத்தை 39 பந்தில் நிறைவு செய்தார். 45 ஓவர் முடிவில் இந்தியா 188/6 என்ற நிலையில் இருக்க, கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. 46 வது ஓவரில் 10 ரன் கிடைக்க, 47 ஓவரில் 5 ரன் கிடைத்தது .
48 ஓவரை போல்ட் வீச, அந்த ஓவரில் ஜடேஜா 77 ரன்னில் வில்லியம்சன்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட, 49வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸுக்குப் பறக்க விட்டார் தோனி. அடுத்த ரெண்டாவது பாலில் இரண்டாவது ரன் ஒடும் போதும் குப்தில் டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் ஆனார் தோனி. க்ரீஸுக்கு அவரது பேட்டும் சில இன்ச் இடைவெளியே இருந்தது. ஆனால் அந்த இடைவெளி இந்தியாவின் இறுதியாட்ட கனவை தகர்ப்பதற்குப் போதுமானதாக இருந்தது. தோனி சரியாக 50 ரன்னில் வெளியேறினார்.
அதே ஓவரில் புவனேஷ்வர் பூஜ்ஜியத்திலும், கடைசி ஓவரில் சஹோல் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்தியாவின் ஆட்டமும், இறுதியாட்ட வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நியூசிலாந்து இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற, தொடர்சியாக இரண்டு முறை பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்தாலும், அரையிறுதியில் சேஸிங்கில் தோல்வியுற்று வெளியேறியது இந்தியா.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்