Shadow

கூர்கா விமர்சனம்

gurkha-movie-review

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை.

படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிறது. மெட்ராஸ் மாலுக்கு யோகிபாபு வந்து சேர்ந்ததுமே படம் பார்வையாளர்களை உள்ளிழுக்கிறது.

தான் ஏன் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறேன் என உசேன் போல்டாக நடித்திருக்கும் சார்லி சொல்வது அழுத்தமாகப் பதியப்படவில்லை எனினும், அந்த விளக்கத்தின் பின்னுள்ள எதார்த்தம் மனதைக் கனக்கச் செய்கிறது. மாலில் தனக்கென ஒரு ரகசிய இடத்தை வைத்துள்ளார் சார்லி. ராட்சச இயந்திர விசிறியுடைய அந்த டனல் (tunnel) போன்ற இடம் மிகவும் அட்டகாசமாக உள்ளது.

அமெரிக்கத் தூதரக அதிகாரி மார்க்ரெட்டாக எலிசா நடித்துள்ளார். அவரை இம்ப்ரஸ் செய்ய, மெர்சல் விஜய் போல் தன்னை மருத்துவராகக் கற்பனை செய்து வேட்டியில் துள்ளி வரும் காட்சி அட்டகாசம். பல காட்சிகளில் அதகளமாக ஸ்பூஃப் செய்துள்ளனர். ஆனால், வில்லன் போர்ஷனை மட்டும் சீரியஸாகவும், சுவாரசியமாகவும் படைத்துள்ளார் இயக்குநர் சாம் ஆண்டன். இந்த வில்லன் போர்ஷனை, பெரிய ஹீரோக்கள் நடிக்கும் மாஸ் ஆக்ஷன் த்ரில்லரில் வைத்தாலும் துல்லியமாகப் பொருந்தும். ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், இன்னொரு பக்கம் அதற்கு நேர்மாறாகச் சீரியசான காட்சிகள் என அழகாக பேலன்ஸ் செய்துள்ளார் சாம். ராஜ்பரத்தின் ஆகிருதி வில்லன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. யார் யாரை எல்லாம் கடத்தியுள்ளோம் எனக் காவல்துறையினருக்கு சீரியஸ்னஸை உணர்த்திவிட்டு, ராஜ்பரத் பேசத் தொடங்குமிடம் கிளாஸ்.

RDX அலெக்ஸாக என்ட்ரி தரும் ஆனந்த்ராஜைப் பார்த்தவுடனே மக்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். மொட்டை மாடியில் வைத்து, யோகிபாபுவுடன் இனைந்து ஆனந்த்ராஜ் வெடிகுண்டை டிஃப்யூஸ் செய்யும் காட்சி செம காமெடி. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக, அண்டர்டேக்கர் என்ற பெயருடைய லாப்ரடார் வகை நாய் நடித்துள்ளது. அதே போல், பகதூர் பாபுவாகிய யோகிபாபுவின் தாத்தா உபயோகித்த பழைய மாடல் நோக்கியா ஃபோனும் கூடப் படத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.

படத்தின் இரண்டாம் பாதி மெல்ல வேகமெடுத்து முழு நகைச்சுவை விருந்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. படம் முடிந்து யோசித்தால், ஏன் சிரித்தோம் என சரியாக எதுவும் நினைவில் இருக்காது. ஆனாலும், படம் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் பல இடங்களில் கலகலப்பாகச் சிரிப்பார்கள். யோகிபாபுவின் ஒன்லைனர்ஸ் போலவே, ஹெச்.ராஜாவைக் கலாய்க்கும் மயில்சாமியின் ‘வைலன்ட்’ வீரமணி பாத்திரம், நித்தியானந்தரைக் கலாய்க்கும் நமோ நாராயணின் சந்தியானந்தா பாத்திரம் எனப் படத்தில் சிரித்து மகிழ ஏராளமான விஷயங்களை வைத்துள்ளார் இயக்குநர். பொதுமக்களைச் சுடவும் இந்த அரசாங்கம் தயங்காது என்பதைக் காவல்துறை அதிகாரி ரவிமரியாவின் மஞ்சள் உடையணிந்த தூத்துக்குடி பாய்ஸ் மூலம் பதிந்திருப்பது சிறப்பு. சமகால அவலத்தையும் இப்படி நகைச்சுவையினூடாகப் போகிற போக்கில் பதிந்துள்ள இயக்குநருக்குப் பாராட்டுகள்.