Shadow

ஆடை விமர்சனம்

Aadai-movie-review

இந்தப் படத்திற்கு, நேரடியாக ‘நங்கேலி’ என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். ‘வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக் கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட் பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ என நாயகன் நாயகியைச் சிலாகிப்பான். நல்ல பெண் என்பதற்கு இயக்குநர், நாயகன் வாயிலாக முன் வைக்கும் இலக்கணம் அது. ஆடை படத்து அமலா பாலோ, இதற்கு முரணான பெண். நடுரோட்டில் ஒருவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பவர். அதாவது கெட்டவர். நாயகியை அப்படி நேரடியாகச் சொல்லிவிட முடியுமா? அதனால் சுற்றி வளைத்துப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கப் படாதபாடுபட்டு, க்ளைமேக்ஸில் கெட்ட பழக்கத்தை அவர் விட்டுவிடுவதாக படத்தை முடித்துள்ளார்.

ஆடை போலொரு பிரில்லியன்ட்டான படத்தைக் கொடுத்த இயக்குநரைப் பாராட்டியே ஆகவேண்டும். நகைச்சுவை என்ற பெயரில், ராகவா லாரன்ஸ் காஞ்சனா – 3 இல், நாயகிகளின் உடைகளைக் குறைக்கும் கேலிக் கூத்துகள் நடக்கும் காலகட்டத்தில், அமலா பாலின் நிர்வாணக் காட்சிகளைக் கூடத் துளி விரசமில்லாமல் மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஷாட்ஸ்கள் பிரமாதம். இந்தக் கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அமலா பாலின் தைரியமும் மலைக்க வைக்கிறது.

ஆனால், ‘ஃபெமினிசம் என்றால் ஆண்களுக்கு நிகராய்ப் பெண்கள் தண்ணியடிப்பது, ஆண்களை உசுப்பேத்தும் விதமாகக் குறைவான உடை அணிவது, ஆண்களை மதிக்காமல் இருப்பது, கல்யாணப்பந்தத்தில் விருப்பமில்லாமல் இருப்பது, குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பது’ என்ற விளக்கத்தை மக்கள் மனதில் பதித்திருப்பது வலதுசாரிகளின் குள்ளநரித்தனம். இப்படியாகப் பெண்ணியம் என்றாலே, ‘அந்த ஜந்து நம்மை நோக்கித்தான் ஓடி வருகிறது’ என அலறப் பழக்கப்படுத்தியுள்ளனர். கதையின் நாயகி ஒரு ஃபெமினிஸ்ட். ஆடை விஷயத்தில் வலதுசாரிகள் முன்வைக்கும் கண்ணியத்தைப் பின்பற்றினாலும், இந்தப் படத்தில் அமலா பாலும் ஃபெமினிஸ்ட் தான். அதை அவர் வசனமாகச் சொல்கிறார்; ஆண்களுடன் தண்ணியடிக்கிறார்; பைக்கில் ‘ரேஸ்’ விடுகிறார்.

படம் தொடங்கும் முன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முலக்கரத்தை (மார்பகத்தை மறைக்க மேலாடை அணிந்தால் வசூலிக்கப்படும் வரி) எதிர்த்து, தனது மார்பகங்களை அறுத்து வாழையிலையில் வைத்த நங்கேலியின் வீர வரலாறு அனிமேஷனாகக் காட்டப்படுகிறது. இயக்குநரின் சாமர்த்தியத்திற்கு இந்த அனிமேஷன் ஒரு சான்று. படத்தின் முடிவில், ‘போராடிப் பெற்ற சுதந்திரத்தை மிஸ் யூஸ் செய்யாதீங்க’ என நங்கேலி சொல்கிறார். படத்தின் தலைப்பு ஆடை. ஆக, பெண்கள் கண்ணியமாக ஆடை அணியவேண்டும், குடிக்கக்கூடாது என்று பொதுநலன் கருதி ரத்னகுமார் ஒரு படமாகவே எடுத்து விட்டிருக்கிறார். பாடல் வரிகளிலும் அது பிரதிபலிக்கிறது.

விதிகளின்றி விளையாடும்
விளையாட்டல்ல சுதந்திரம்;
அளவுக்கு அதிகமாய் ஆட்டம் போட்டால்
உன்னையே அழிக்கும் தந்திரம்.

(இந்தியாவிற்கு இரவில் சுதந்திரம் கிடைத்ததால், பெண்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாகத் தெருவில் நடமாடலாம் என அர்த்தம் இல்லை; அப்படிச் சுற்றித் திரிந்தால் ரேப் தான் செய்யப்படுவார்கள் என்ற அரசியல்வாதிகளின் அரிய கருத்தெல்லாம் நினைவில் வந்துபோனது).

நங்கேலியின் உயிர்த்தியாகத்தால், அந்தக் கேவலமான வரி மட்டுமே ரத்தானது. அதுவும் அவர் இறந்து ஒன்பது வருடங்களுக்குப் பிறகே அது நடந்தது. 1803 இல் நிகழ்ந்த நங்கேலினுடைய மரணத்திற்குப் பின், தொடர்ச்சியாய்ப் பரவிய கலவரங்களை அடக்க வழி தெரியாமல், 1812 இல் தான் அவ்வரியைத் திருவிதாங்கூர் சமஸ்தானம் நீக்கியது. ஆனாலும், ஆடை அணியும் சுதந்திரத்தினை கீழ்ச் சாதியினர்களுக்கு அளித்துவிடவில்லை சமஸ்தானம். சுமார் 40 வருடங்கள் நடந்த தோள் சீலைப் போராட்டத்தின் வாயிலாக, 1859 இல் தான், அனைவருக்குமான உடை சுதந்திரத்தைத் திருவிதாங்கூர் சமஸ்தானம் அளித்தது. அய்யா வைகுண்டநாதர் முன்னெடுத்து, கிறிஸ்துவ மிஷனரிகளின் தீவிர முயற்சியாலேயே அச்சுதந்திரம் கிடைத்தது. ஆனால், படத்தில் நங்கேலி இறந்ததுமே திருவிதாங்கூர் சமஸ்தானம் முலை வரியை நீக்கியதென, இந்து நாடான திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் க்ரைம் ரேட்டைக் குறைத்துள்ளனர். ஒரே ஒருவரின் மரணத்திற்கெல்லாமா அதிகாரம் அசைந்து கொடுக்கும்? 13 உயிர்களை நேரடியாகக் காவு வாங்கியாவது, தான் நினைத்ததைச் சாதிக்கவல்லது அதிகாரம் பொருந்திய அரசு.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நங்கேலியும், அமலா பாலிற்குப் பாடம் புகட்ட மிகத் தைரியமாகத் திட்டம் போட்டுச் செயற்படுத்துகிறார். ஆனால் கடைசியில், ஒரு ஏழைப் பெண்ணின் ஒரு வருடத்தைக் காவு வாங்கிய குற்றவுணர்வில்லாத அமலா பாலிடமே, நங்கேலி மன்னிப்பு கேட்டு உடைந்து அழுகிறார். ஏன் இப்படியொரு காட்சி ரத்னகுமார்? நங்கேலி மென்மையானவர், அதனால் மன்னிப்பு கேட்டாரென இயக்குநர் சப்பைக்கட்டு கட்டலாம். ஒருநாள் முழுவதும் உடையின்றி நிர்வாணமாய் ஒரு பெண்ணை நிலைகுலைய வைத்து, அதை ஒளிந்திருந்து பார்க்கும் பதற்றமில்லாதவராக அல்லவா உள்ளார் நங்கேலி? ஒரு நங்கேலி உடைக்காகப் போராடியவர்; இன்னொரு நங்கேலி, ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி அழகு பார்ப்பவராம். படைப்புச் சுதந்திரம் இயக்குநருக்கு உண்டு என்பதற்காக இப்படியா?

நகைமுரணாக, ‘நமக்குச் சுதந்திரம் வேணும். ஆனால் அதன் எல்லை எதுவரை என்று என் ஆடை படம் பேசும்’ என ஒரு பேட்டி அளித்துள்ளார் ரத்னகுமார். உள்ளபடிக்கு, படம் அப்படி எந்த சுதந்திரத்தைப் பற்றியும் பேசிவிடவில்லை. ஆடையெனத் தலைப்பு வைத்து, அவர் பேச முற்பட்டிருப்பது, prank video-களின் இம்சைகளையும், பிணத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அதைப் பெருமையாகச் சமூக ஊடகங்களில் போடும் மேனியாவைக் குறித்துமே! ‘நான் பெண்களின் உடை பற்றியோ, அவர்களின் உடை சுதந்திரத்தைப் பற்றியோ பேசவே இல்லை. Prank வீடியோஸ், அது தொடர்பான சுதந்திரம் பற்றித்தான் பேசினேன்’ என இயக்குநர் சூடமேற்றி சத்தியம் செய்யலாம். ஆனால், அவரது கதாபாத்திரமான நங்கேலியோ, ‘நீங்கள் செய்வது prank (குறும்பு) இல்லை. அது நீங்க உங்களுக்குத் தெரிந்தவர்களுக்குச் செய்வது. நீங்க செய்வது nuisance (தொல்லை)’ என்கிறார்.

ஒரு நாள் கர்வம் கொண்டு திரிவோம்
கடிவாளமின்றித் தடையேதுமின்றித் திமிராய்

மறுநாள் நம்மை நாமே உணர்வோம்
துணை யாருமின்றி
அழ தோளுமின்றி
புதிதாய் எழுவோம்

என்று படத்திலொரு பாடலுண்டு. தண்ணியடித்து, ரேஸ் விடும் திமிர் பிடித்த கடிவாளமில்லாத அமலா பால், நிர்வாணமாகத் தவிக்கும் பொழுது தன் தவறை எல்லாம் உணர்கிறார். அதாவது, அம்மா பேச்சைக் கேட்காதது, ஆண் நண்பர்களுடன் மது அருந்தியது, பெட் கட்டி உடையைக் கலையப் பார்த்தது எல்லாம் தவறாம். மஷ்ரூம் பிரியாணியில் போதை வஸ்துவைக் கலந்த அந்த ஆண் நண்பர் மீது இயக்குநரின் சுட்டு விரல் நீளவில்லை. எல்லாக் கேஸையும், பெண்கள் மீதே போட்டுவிடுகிறார் இயக்குநர்.

படத்தின் லாஜிக் ஓட்டைகள் வேறு இம்சிக்கின்றன. ஃபோனை இரவு தூக்கிப் போட்டு உடைக்கிறார் அமலா பால், அடுத்த நாள் சிறு கீரல் கூட இல்லாமல் அவர் கைக்கு ஃபோன் கிடைக்கிறது. அலுவலகத்திற்கு KTM பைக்கில் வருகிறார் அமலாபால்; ஆனால் போலீஸ் அலுவலகத்திற்கு வரும்பொழுது பார்க்கிங்கில் எந்த வண்டியுமே இருப்பதில்லை. ஆளரவமே இல்லாத பில்டிங்கிற்குள், ஒரு ஃபோன் கூடச் செய்யாமல் டெலிவரி செய்பவர் சரியான தளத்திற்கு உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடுவாரா? அம்மாவின் தொலைபேசி அழைப்பிற்குக் காத்திருக்கும் அமலா பால், 5 மட்டன் பிரியாணியை வீட்டு முகவரிக்கு ஆர்டர் போட்டிருந்தாலாவது, ‘நீயா ஆர்டர் போட்ட?’ என அவரது அம்மா அழைத்திருப்பார். அதையெல்லாம் விட்டு, ‘வாட்ட சாட்டமான ஆளாக இல்லாமல் சப்பையான ஆளிடம் உணவைக் கொடுத்துவிடுங்க’ என்கிறார் ஆர்டர் செய்யும்பொழுது. ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. காவல்துறையினரிடம் உதவி கேட்டால் அது செய்தியாகிவிடும் என நினைப்பது ஓகே, டெலிவரி பாயிடம் உதவி கேட்பதில் என்ன தயக்கம்? அட்லீஸ்ட் அவரது ஃபோனில் இருந்து ஒரு கால் பண்ணினால் கூட இவரது பிரச்சனை தீரும். இந்த லட்சணத்தில் அடிக்கடி பெட் வைத்து, எதையும் சாதிப்பேன் என அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்கிறார். யோசிக்கும் பொழுதே, சப்பையான ஆளாக வந்தால் மண்டையை உடைக்க வசதியாக இருக்குமெனக் கிரிமினலாக நாயகி யோசித்தால் படம் என்னத்த விளங்கும்? காமினி எனும் அமலா பால் ஏற்றிருக்கும் பாத்திரம், பிக் பாஸில் கலந்து கொண்டு சக ஹவுஸ்மேட்ஸ்களோடு சண்டையிட மட்டுமே லாயக்கானது.

படத்தில் ஒரு விளக்கு பிடிக்கும் அடல்ட் ஜோக் வருகிறது. அது ஓகே. ஆனால், ஏ சான்றிதழ் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, ராதாரவிக்கான பெயர் விளக்கமென ஒன்றை வைத்துள்ளார் இயக்குநர். எது நகைச்சுவை, எது வக்கிரம் என்று தெரியாத ரத்னகுமார்க்குக் கடும் கண்டனங்கள். நகைச்சுவையென ஒரு போலீஸ்காரரையும், அவரது மகளையும் கொண்டு அருவருப்பான முறையில் உருவ கேலி செய்துள்ள இயக்குநர், ‘மீ டூ’ வைக் கையில் எடுத்துள்ளது ஆகப் பெரிய கேலிக்கூத்து. பார்ப்பதற்கு வாலி போல் இருக்கும் ஒரு பிரபல கவிஞர் (வம்பிழுப்பதோ வைரமுத்துவை), பாட வாய்ப்புத் தேடி வரும் பெண்ணிடம் நூல் விட்டுப் பார்க்கிறார். உடனே ‘ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்’ எனத் தொலைக்காட்சி அலறுகிறது. அந்தக் கவிஞரின் வீடு அரசியல்வாதி வீடு போல் ஜேஜே-வென உள்ளது. அப்படிப் பலர் சூழ இருக்கும் நேரத்தில், அப்பெண் உள்ளிருக்க பெளன்சர்ஸ் கதவைச் சாத்துகின்றனர். சாட்சிகள் பலரை வைத்துக் கொண்டு பகிரங்கமாக ‘மீ டூ’வை அரங்கேற்றுகிறாராம் கவிஞர். இப்படி ஒரு சம்பவத்தைக் கூடச் சிறப்பாகச் செய்யாமல் சொதப்பி வைத்துள்ளார் இயக்குநர்.

இயக்குநரின் கந்தலான ஆடையிலும் கூடத் தனித்துப் பிரகாசிக்கிறார் விவேக் பிரசன்னா. மேயாத மான் போல் ஜாலியான படமொன்று எடுத்திருக்கலாம் ரத்னகுமார். ஏனோ, ‘பெண்கள் சுதந்திரமாக இருப்பதை நான் தவறு சொல்லவில்லை; ஆனால் எல்லை மீறுவதுதான் தவறுன்னு சொல்றேன்’ என நடுநிலை நக்கியாகப் படத்தைக் குழப்பியடித்துப் பார்வையாளர்களை ஜோக்கராக்கி விடுகிறார் இயக்குநர்.