சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க, பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹீரோ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “எனது முதல் படமான இரும்புத் திரை அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. அதே போல் ஹீரோ படத்தின் வில்லனும், கடுமையான குணாதிசயங்கள் கொண்ட பொறுப்பானதொரு பாத்திரம். அவர் கணிக்க முடியாக் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினை குறைந்தபட்ச புன்னகையாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குக் கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்தக் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களைக் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கூடவே அதற்கு நிகராய்ப் பொறுப்பும் மிகுகிறது” என்றார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் என இரும்புத்திரையில் பணிபுரிந்த அதே குழுவோடு இரண்டாம் முறையும் இணைந்துள்ளார் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.