Shadow

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இ.வி.கணேஷ்பாபு சார் மிகவும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பழக்கம். வீட்டில் நடக்கும் விழா அனைத்திற்கும் வருவார், இந்த விழாவையே வீட்டில் நடக்கும் ஒரு விழா போன்றே நடத்துகிறார். கட்டில் என்பதை ஒரு உருவகமாகத் தலைமுறை கடந்த ஒரு அடையாளமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. ‘கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்’ என்ற அர்த்தத்தில் வரும் பாடல் அருமை. அப்பா எப்போதும் பாடல் இப்படி எழுத வேண்டும் என்று சொன்னதே இல்லை. கற்றுக்கொடுத்ததே இல்லை. ஆனால் அவர் எழுதிய பாடல்களிலிருந்து நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் பாடல்கள் மிகப் பெரிய அறிவைத் தந்துள்ளது. ஒவ்வொரு பாடல்களிலும் இருந்து நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ‘வயவா’ என்றால் கணவன் என்று பொருள், மனைவியை இழந்த கணவனுக்கு, ‘நான் உன்னுடனே இருக்கிறேன்’ என ஒரு மனைவி சொல்வதாக வரும் பாடல் என்பதால் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினோம்” என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே, “பிஆர்ஓ சதீஷ மூலம் தான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள். முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. பப்ளி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்தக் கேரக்டரில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். கணேஷ் சார் கதை சொன்ன போது இந்தக் கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது. எனக்கு மிகப் புதிய அனுபவமாக இருந்தது. லெனின் சார் உடன் பணிபுரிந்த அனுபவம் இன்னும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. கேமரா மேன் ரவி சார் என்னை அழகாகக் காட்டியுள்ளார். ஶ்ரீகாந்த தேவா சார் இ.வி.கணேஷ்பாபு மூலம் தேசிய விருது வென்றிருக்கிறார். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

>> தயாரிப்பு – Maple Leafs Productions.
>> கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு – B.லெனின்
>> தயாரிப்பு, இயக்கம் – இ.வி.கணேஷ்பாபு
>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, மதன்கார்க்கி
>> ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)