Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ்பாபு, “கட்டில் படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஊடகம்தான். கவிஞர் வைரமுத்து ஐயாவை முதன் முதலில் பார்த்த போதே, அவரின் கம்பீரம் மிகவும் பிடித்திருந்தது. அவர் எவ்வளவு சிறந்தவர் என்று அவரிடம் நெருங்கிப் பழகினால் தெரியும். அவரை அருகிலிருந்து பார்த்தாலே போதும், அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள முடியும். அவர் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்குப் பெருமை. ‘கட்டில் மரங்களுக்குள்ளே எங்கள் மரபணுக்கூட்டம் வசிக்கிறதே!’ எனக் கட்டில் படத்தினை ஒரு வரியில் கொண்டு வந்துவிட்டார். லெனின் சார் இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக் கதை. அவர் மிகச் சிறப்பான கதையைத் தந்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் 101ஆவது படம் இது. அவருக்கு என் குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. பல ஆளுமைகள் இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் தேவா ஒரு அட்சய பாத்திரம். நாம் எதிர்பார்ப்பதைத் தந்து கொண்டே இருப்பார். சிருஷ்டி டாங்கே அர்ப்பணிப்பு உள்ள ஒரு ஹீரோயின். இந்தப் படத்தில் மிகச் சிறப்பான ஒரு கதாபாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்” என்றார்.
இயக்குநர் மோகன் ராஜா, “வைரமுத்து சார் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். நானும் அவருக்கு மிகப் பெரிய ரசிகன். தம்பி ரவியின் பயணத்தை உங்கள் ஆசியோடு துவக்கி வைத்தீர்கள். இன்று அவன் நன்றாக இருக்கிறான் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் இசையை மிக நீண்ட காலமாக மிஸ் செய்கிறேன். அந்த மெலடி இசையை இந்தப் படத்தில் மீண்டும் கேட்டது மகிழ்ச்சி. ‘கேமரா யார்?’ என்று கேட்கும் அளவில் சிறப்பாக இருந்தது. ஒரு அருமையான கதையைப் படமாக எடுத்துள்ளார் கணேஷ். சத்யஜித்ரேவின் படத்தை, ‘கட்டில்’ எனக்கு நினைவுபடுத்துகிறது” என்றார்.
நடன இயக்குநர் மெட்டிஒலி சாந்தி, “திரைப்படத்துறையில் பருந்து, கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் ‘கட்டில்’ படக்குழு வந்திருக்கிறோம். கட்டில் என்றவுடன் யோசித்தேன், ஆனால் கதை சொன்னவுடன் ஒத்துக் கொண்டேன். இந்தக் காலத்தில் உறவுகளை மதிப்பதில்லை. அந்த உறவுகளின் பெருமையை இந்தப் படம் சொல்லும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. மெலடி பாடல்களே இல்லை இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் நல்ல மெலடி பாடல்கள் இருக்கிறது. மனதுக்கு நிறைவாக இருக்கும். வைரமுத்து ஐயா பற்றிப் பேச வயதில்லை. அருமையான வரிகள் தந்துள்ளார். இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார்” என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா, “வைரமுத்து ஐயா வரிகளில் மூன்று பாடல்கள் செய்தோம். மிகப் பெரிய கொடுப்பினை. கார்க்கி ஒரு பாடல் எழுதியுள்ளார். இ.வி.கணேஷ்பாபு இந்தப் படத்திற்காக வந்தபோதே 3 மெலடிப் பாடல் என்றார். அப்போதே மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இ.வி.கணேஷ்பாபு அவர்கள் இயக்கிய குறும்படத்தின் மூலமாக எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம்” என்றார்.
தொழில்நுட்பக் குழு:
>> தயாரிப்பு – Maple Leafs Productions.
>> கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு – B.லெனின்
>> தயாரிப்பு, இயக்கம் – இ.வி.கணேஷ்பாபு
>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, மதன்கார்க்கி
>> ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)