விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாயகியும், தன் அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து சென்ற நாயகனும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகிறார்கள். கடத்தியவர்கள் யார்..? என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதே “ஐமா” திரைப்படத்தின் கதை.
கடத்தப்படும் நாயகன் நாயகி இருவருக்குமான முன்கதை கதைக்கு தேவை இல்லை என்றாலும் கூட, மிகுந்த நாடகத்தன்மையோடு இருப்பது மிகப்பெரிய குறை. மேலும் கடத்தப்பட்ட இருவரும் தப்பிக்க்கும் படியே எல்லாம் செட் செய்து வைத்துவிட்டு, அவர்களை சுவாரஸ்யமே இல்லாத அந்த விளையாட்டை ஏன் விளையாடச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணம் திரைக்கதையில் துளி அளவும் இல்லை. அவர்கள் மருத்துவ தேவைகளுக்காகத் தான் கடத்தப்படுகிறார்கள் என்றால், அவர்களை அடைத்து வைத்தே அந்த தேவைகளை வில்லன் டீம் அடைந்துவிட முடியுமே.. எதற்கு இப்படி ஒரு விளையாட்டு..?
படத்தின் ஆரம்ப காட்சிகளில் துளி அளவு கூட எந்த உணர்வுமே ஏற்படவில்லை. அந்த விபத்தும், அந்த விபத்தை தொடர்ந்து நடக்கும் அண்ணன் தங்கை இடையேயான மாண்டேஜ் பாடலும், அதைத் தொடர்ந்து வரும் தங்கைக்கான பிறந்தநாள் நிகழ்வும், அதில் அண்ணன் இறக்கப் போகிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் கடிதமும் என எல்லாமே மிகுந்த நாடகத்தன்மையோடு இருக்கிறது. நாயகியின் பின்கதைதான் இப்படி என்றால் நாயகனின் பின்கதை அதனிலும் மோசம். படுத்த படுக்கையாக கிடக்கும் அம்மாவை பார்த்துக் கொண்டே உங்கள் சிகிச்சைக்காக பணம் புரட்டப் போகிறேன் என்று, ஏதோ ஒரு டாக்டருக்கு போன் செய்து நான் வரும் வரை அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள் டாக்டர் என்று கிளம்புகிறான். அம்மாவுக்கு என்ன நோய், எதற்காக பணம் புரட்ட ப் போகிறான், எப்படி பணம் புரட்டப் போகிறான், எந்த டாக்டரிடம் பேசினான்..? எதுவும் சொல்லப்படவில்லை. அதற்குள் கடத்தப்பட்டும் விடுகிறான்.
சரி, கடத்தப்பட்டவன் தன் தாயின் சிகிச்சைக்கு பணம் புரட்ட முடியாமல் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று கண் கலங்குகிறானா..? என்றால் அதுவும் இல்லை. தன்னோடு கடத்தப்பட்டு ஒரே அறைக்குள் மாட்டிக் கொண்ட நாயகிக்கு உதட்டில் முத்தம் கொடுக்கட்டுமா…? என்று கேட்கிறான். இப்படி சம்மந்தமே இல்லாமல் ஏதோ ஒரு ட்ராக்கில் பயணிக்கிறது கதையும் திரைக்கதையும்.
வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி தன்னை முன்னிலை படுத்துவது போல் ஒரு கதையைப் பிடித்திருக்கிறார். ஆனால் நடிப்பில் அவர் போக வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப அதிகம். தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்தால், நடிப்பை முறையாக கற்றுக் கொண்டு மேற்படி நடவடிக்கைகளில் இறங்குவது சிறந்தது.
யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், ஆகியோர் நடித்துள்ளனர். கே.ஆர்.ராகுல் இசையமைத்து உள்ளார், விஷ்ணு கண்ணன் ஓளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராகவ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராகுல் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார்.
கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருந்தால் ஐமா ஐமாய்த்திருக்கும். இப்பொழுது ஐமா ஐய்யோஅம்மா என்ற அளவில் மட்டுமே இருப்பது வருத்தமே..