Shadow

Are you ok baby விமர்சனம்

 

ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.

இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து தான் திரைப்படம் துவங்குகிறது.  அந்த நிகழ்ச்சியை திரைப்படத்திற்குள் வழங்குபவராக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.

“சொல்லாததும் உண்மை” என்கின்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒரு இளம்பெண், தன் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குழந்தையை சிலர் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனது குழந்தையை தனக்கு மீட்டுத் தர வேண்டும் என்றும் அந்த இளம்பெண் கோரிக்கை வைக்க,  உடனே அந்த இளம்பெண்ணின் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் விருமாண்டி ‘அபிராமி’ – சமுத்திரக்கனி தம்பதியருக்கு நிகழ்ச்சியில் இருந்து போன் செய்கிறார்கள்.  அந்த தம்பதியினர் தவழ துவங்கியிருக்கும் தங்கள் குழந்தையின் பாதுகாப்பு கருதி,  வீட்டில் இருக்கும் கூர்மையான பொருட்களை எல்லாம் மழுங்கடிக்கச் செய்யும் வேலைகளையும்,  குழந்தைக்கான தடுப்பு கதவு உருவாக்கும் பணியையும் மேற்பார்வை செய்து கொண்டிருக்க,  அவர்களிடம் போன் செய்து பேசும் லஷ்மி ராமகிருஷ்ணன், நீங்கள் முறையான வகையில் தத்தெடுக்காததால் குழந்தையை  நீங்கள் அந்த இளம்பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும், அப்பெண் தன் குழந்தை வேண்டும் என்று கோருகிறாள். அதனால் குழந்தையை அவளிடம் ஒப்படையுங்கள் என்று கூறும் காட்சியில் இருந்து திரைப்படம் துவங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை கவனிக்கும் குழந்தைகள் நல அமைப்பு தானாக முன் வந்து, இது ஒரு குழந்தை கடத்தல் வழக்கு போல் தெரிகிறது என்று கருதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, விசாரணை சிபிசிஜடி போலீசாருக்குச் செல்கிறது. அவர்களது விசாரணை வளையத்தில் அந்த இளம் பெண், தத்தெடுத்த அபிராமி – சமுத்திரக்கனி தம்பதியினர், அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பாவல் நவநீதன்,  அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லஷ்மி ராமகிருஷ்ணன் என அனைவருமே விசாரிக்கபடுகிறார்கள்.  அந்த விசாரணையின் வாயிலாக அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை சூழல், அவர் எந்த மாதிரியான சூழலில் தன் குழந்தையை விற்க சம்மதித்தார்,  தத்துக் கொடுக்கும் ஆவணங்களில் அவர் ஏன் கையெழுத்திட்டார்,  குழந்தையை தத்தெடுத்தவர்கள் யார் மூலமாக அந்த இளம்பெண்ணை அணுகினார்கள் என்கின்ற எல்லா உண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக துலங்குகிறது.  இறுதியில் குழந்தை பெற்றவள் கைகளுக்குச் சென்றதா..? வளர்த்தவர்கள் கைகளுக்கு சென்றதா..? இல்லை நீதிமன்றம் குழந்தையை குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைத்ததா..?  என்பதை விளக்குகிறது திரைக்கதை.

கதை தொடங்கி சில காட்சிகள் கடந்ததுமே, நம் மனம் ஒற்றை சார்பு எடுக்கத் துவங்கிவிடுகிறது. தன் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க வகை தேடியும் முடியாமல் அதை என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கும் அந்த இளம்பெண்ணிடம் நர்ஸ் ஒருத்தி குழந்தையைப் பெற்று குழந்தை இல்லாதவர்களிடம் தத்து கொடுத்துவிடு, நான் உனக்கு குழந்தை ஆரோக்கியமாக வயிற்றில் வளர்வதற்கும், குழந்தையை அவர்களிடம் கொடுப்பதற்கும் பணம் பெற்றுத் தருகிறேன் என்று கூற அதற்கும் சம்மதித்து பணம் பெற்றுக் கொண்டு குழந்தையைப் பெற்றெடுத்து மீண்டும் பணம்  பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்டு தன் குழந்தையைப் பிரியும் தாய் மேல் நமக்கு ஏனோ எந்தவித கரிசனமும் எழுவதே இல்லை.

தன் சூழலைப் பயன்படுத்தி தன் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள், எனக்கு என் குழந்தை  வேண்டும் என்று அவள் வந்து நிற்கும் அந்த ஆரம்பப் புள்ளியில் அவள் மேல் தோன்றும் கருணையானது அவள் திருமணமாகாமல் தன் காதலனுடன் உறவில் இருந்தவள்,  குழந்தையை கலைக்க வழி தேடியவள், முடியாமல் போகும்பட்சத்தில் இந்த வயிற்றை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்வது அசிங்கம் என்று கருதி வீட்டிற்குள் முடங்கியவள்,  தன் குழந்தையை வளர்க்கவும்,  தத்து கொடுக்கவும் பணம் பெற்றுக் கொண்டு கையெழுத்தும் இட்டவள் என்கின்ற காட்சிகள் விரிய விரிய,  அவள் மேல் தோன்றிய கருணை கரைந்து கரைந்து காணாமல் போகிறது. என்னதான் அவள் கத்தி கதறி அழுதாலும் அந்த குழந்தையை கேட்பதற்கான தார்மீக அறம் அவளிடம் இல்லை என்றே பார்வையாளர்களான நமக்கு தோன்றுகிறது. இதனால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்கின்ற ஊசலாட்டம் மனதளவில் நமக்கு இல்லவே இல்லை. இதுவே படத்தின் பலமும் பலவீனமும்.

இந்த கதைக்கு இடையே ஒரு நிகழ்ச்சியை நடத்தும் இயக்குநருக்கும் தொகுப்பாளருக்குமான ஈகோ முட்டல்களையும் பொதுவெளிக்கு வரும் பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் எளிதாக கேள்விக்குள்ளாக்கப்படும் அராஜகத்தையும், அதில் ஒளிந்திருக்கும் ஆண்களின் ஒழுங்கீனத்தையும்,  பணம் பார்ப்பதற்காக பேசும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு அறம் தவறும் பத்திரிக்கைகளையும் சாடியிருக்கிறார் இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன்.

குழந்தையை தத்து கொடுத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் அந்த இளம்பெண் முல்லையரசி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  கதாபாத்திரம் ஒற்றை சார்புடன் இருப்பதால் நம்மிடம் அது எந்தவித உணர்வெழுச்சிகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அவரது நடிப்பில் எந்தவொரு குறையும் இல்லை.  தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி – அபிராமி ஜோடியில் அபிராமி தன் இயல்பான நடிப்பால் சமுத்திரக்கனியை பல படிகள் மிஞ்சுகிறார்.  குழந்தையை பறி கொடுத்துவிட்டு, பாலூரும் மார்பகங்களை என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையை நினைத்து கலங்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.  லஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மையில் என்னவெல்லாம் செய்வாரா..! அதை இம்மி பிசகாமல் இக்கதையிலும் பிரதிபலிக்கிறார்.  ஆணாதிக்க மனநிலை கொண்ட நிகழ்ச்சி இயக்குநராக வரும் பாவல் நவகீதன் தன் முரட்டுத்தனமான நடிப்பாலும் குரலாலும் கவருகிறார்.  வினோதினி வைத்தியநாதன், மிஸ்கின், அனுபமா குமார், ரோபோ சங்கர், கலைராணி, உதய் மகேஷ் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  அந்த இளம் பெண்ணின் காதலனாக நடித்திருப்பவரான அசோக் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இளையராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பின்னணியிசையில் ராஜா தாலாட்டுகிறார். இசையற்று சத்தமில்லாமல் விடப்பட்ட இடங்கள் நம் மனதை ரணமாய் மாற்றுகின்றன.  கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு கேரளத்தையும் தமிழ்நாட்டையும் அழகாய் பிரித்துகாட்டுகிறது.

இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பிற திரைப்படங்களைப் போலவே “Are You Ok Baby” திரைப்படமும் ஓகே என்று சொல்வதற்கான திரைப்படம் தான்.