Search

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

”காதல் ஒரு கடலு மாறி டா” என்றார் நம்மவர் கமல்ஹாசன். உண்மைதான். கடலின் பிரம்மாண்டமும், ஆழமும், அதனுள் அமிழ்ந்திருக்கும் ஜீவராசிகளும் நம் கண்களுக்கு மாத்திரமல்ல, நம் மனதிற்கும் அறிவிற்கும் கற்பனைக்குமே அப்பாற்ப்பட்டவை. அப்படித்தான் காதலும்.  எவருக்கு, எவரின் மேல், எதற்கு, எப்படி, எப்பொழுது இப்படி எந்தவொரு கேள்விக்குமே விடை கூற முடியாத கடலுக்கு இணையான பிரம்மாண்டமும், ஆழமும், விநோதமும் கொண்ட புரியாத புதிர் தான் “காதல்”.  அப்படி ஒரு இயல்புக்கு மீறிய,  சொல்வதற்கே இன்றும் மக்கள் கூச்சப்படும், இதுவரை ஓரிரு படங்களைத் தவிர்த்து பெரும்பாலான படங்களில் யாரும் பேச முன்வராத ஒரு காதலை, ஒரு அன்பை, காமத்தின் மற்றொரு வடிவத்தை துணிச்சலாகப் பேசி இருக்கும் திரைப்படம் தான் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே”.

நடிகை நீலிமா ராணியும் அவர் கணவர் இசையும் இணைந்து, இசை பிக்சர்ஸ் சார்பாக Shortflix OTT தளத்திற்காக தயாரித்திருக்கும் திரைப்படம் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே”  Shortfilix தளத்திற்காக இதற்கு முன் “சூல்” திரைப்படத்தை இயக்கிய ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கிறார்.

ஒரு முஸ்லீம் வீட்டில் ஒரு பெண்ணிற்கான திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில்,  அப்பெண்ணை காதலிக்கும் காதலன் வீட்டைவிட்டு ஓடிப் போக தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டிவிட்டு, மணப்பெண்ணின் போன்கால் வருவதற்காக காத்திருக்கும் புள்ளியில் திரைப்படம் துவங்குகிறது.  அதற்குப் பின் திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் சுவாரஸ்யத்தைக் கொடுக்கின்றன.

ஷகிரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார், வினோதா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ருதி பெரியசாமியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.  அந்த துணிச்சல் இருவருக்குமே இருக்கிறது என்பதை அவர்கள் நடித்திருக்கும் காட்சிகள் பறைசாற்றுகின்றன. ஆனால் ஆர்சத் ஃபெரஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். அவரது நடிப்பில் சற்று செயற்கைத்தனம் தெரிகிறது.

கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு காட்சியமைப்பிற்கும் கதைக்கும் வலு சேர்க்கிறது.  நிலவொளியில் படகு ஒன்றில் இருவரும் பயணிக்கும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.  விக்னேஷின் எடிட்டிங் துல்லியமாக இருக்கிறது.  தர்ஷன் ரவிக்குமாரின் இசை பல இடங்களில் தடம் புரண்ட ரயிலாக பயணிக்கிறது.  பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், அது காட்சிகளுக்கு இன்னும் கணம் சேர்த்து இருக்கும்.

கதையும் திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் ஸ்ருதி மற்றும் நிரஞ்சனாவின் அழகும் கவர்ச்சியும் கதைக்கும் காட்சிக்கும் வலு சேர்க்கிறது.  இருப்பினும் க்ளைமாக்ஸ் காட்சியில் விநோதா கதாபாத்திரம் தனியாக வந்து வீட்டிற்கு முன் நிற்பதும்,  கூடியிருக்கும் சொந்தங்கள் கல் எறிவதும் திரைக்கதையின் இயல்புத்தன்மையை பாதிக்கிறது. வலிய திணிக்கப்பட்ட காட்சிகளாக அவை உறுத்துகின்றன. மேலும் இறுதி முடிவுகாட்சி எதன் அடிப்படையிலான மனமாற்றத்தினால் அல்லது வெறுப்பினால் நிகழ்ந்தது என்பதற்கான விவரணைகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே” திரைப்படத்தின் படி, எல்லோருக்குமான வாழ்வு எங்கிருந்துனாலும் தொடங்கலாம், சிலரின் வாழ்வில் அது இப்படியும் தொடங்கலாம் என்பதை துணிச்சலாக பேசி இருக்கும் தைரியத்திற்காகவும்,  இது போன்ற வாழ்வியலை பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றியிருப்பதற்காகவும் இப்படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.  கண்டிப்பாக பார்க்கலாம்.  அது குடும்பத்தோடு பார்ப்பதா, இல்லை ரகசியமாக அனைவரும் தனித்தனியே பார்ப்பதா என்பது உங்கள் சித்தாந்தம், வாழ்வுமுறை, மற்றும் உணர்வுகள் தொடர்பான உங்கள் புரிதலை அடிப்படையாகக் கொண்டது.