Shadow

அக்காலி விமர்சனம்

சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.

சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கு விசாரணை தொடர்பாக Internal Affairs துறை சார்ந்து விசாரிக்க வரும் ஸ்வயம் சித்தா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் விசாரணையை துவங்குகிறார். மர்மமான பூஜை, இளம் பெண் கடத்தல், போலீஸ் அதிகாரியின் மனநலம் பாதிக்கப்படுதல், மற்றொரு இளம் பெண் மீது சந்தேகம், கடத்தப்பட்ட இளம் பெண்ணின் நண்பர்கள் எனக் கதை எங்கெங்கோ பயணப்பட்டு இறுதியில் மற்றொரு கிளைக்கதை கூறி படத்தை முடித்து வைக்கிறார்கள்.

ஏற்கனவே வெகுஜன வாழ்விற்கு தொடர்பே இல்லாத கதைக்களம் என்கின்ற பின்னடைவு இருக்க, அதனோடு சேர்ந்து குழப்பமான, தெளிவில்லாத, இலக்கில்லாத திரைக்கதையும் படத்தை சிதைத்து படம் பார்க்கும் நம்மை பாடாய்படுத்துகின்றன.

கதையாகவோ திரைக்கதையாகவோ நம்மை ஈர்க்கவில்லை என்றாலும் சில காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக அந்த ஹாரர் தன்மையுடன் வரும் இளம் பெண் தொடர்பான காட்சியும், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி அர்ஜய் தொடர்பான காட்சியும், கடத்தப்பட்ட இளம் பெண்ணின் நண்பன் ஒரு போதைப் பொருள் ஆசாமியை தேடிச் செல்லும் காட்சியும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயக்குமார், விசாரணை அதிகாரியாக ஸ்வயம் சித்தா, கிறிஸ்துவ மத போதகராக நாசர், ப்ளாக் மேஜிக் தொடர்பான நிபுணராக வினோத் கிஷன், பத்திரிக்கை எடிட்டராக வினோதினி, ப்ளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, பேய் பிடித்தவள் போல் ஆக்ரோசமாக அலையும் தாரணி, அவளுடைய நண்பர்கள் மூவர் என அனைவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.

படத்தின் கலை இயக்கம் தோட்டா தரணி. குறைந்தபட்சத்தில் கலை நேர்த்தியுடன் கூடிய பிரம்மாண்டமான செட்-களை வடிவமைத்துக் கொடுத்து படத்தின் உண்மையான ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். அது போல கிரி முர்பியின் ஒளிப்பதிவில் படத்தின் தரம் வேறொரு தளத்திற்கு செல்கிறது. ஒளிப்பதிவில் கையாளப்பட்டிருக்கும் வித்தியாசமான நகர்வுகளும், ஒளியமைப்புகளும் காட்சியை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி இருக்கின்றது. VFX காட்சிகளும் படத்தின் காட்சியமைப்பிற்கும் பிரம்மாண்டத்திற்கும் பெரிதும் உதவி இருக்கின்றன.

ஆனால் அதை தாங்கிப் பிடிக்குமளவிற்கு வலு இல்லாத கதையும், திரைக்கதையும் தான் மைனஸ். முகம்மது ஆசிஃப் ஹமீத் எழுதி இயக்கி இருக்கிறார். இயக்கத்தில் தன்னை நிருபித்திருப்பவர், கதை மற்றும் திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். எத்தனையோ கதைக்களங்கள் இருக்க, அதை விடுத்து எவருக்கும் எளிதில் புரியாத ப்ளாக் மேஜிக் தொடர்பான கதைக்களத்தை எடுத்தது ஏனோ என்கின்ற கேள்வி எழுகிறது. மேலும் இதே கதைக்களத்தைக் கூட இன்னும் மேம்பட்ட புரிதலுடன், சுவாரஸ்யத்துடன் நல்ல திரைப்படமாக மாற்றி இருக்கலாமே என்று தோன்றுகிறது.

அக்காலி – நம் காளி இல்லை.