நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன்.
நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது.
மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. தீங்கிற்கு துணை போகும் துரோகிகள் கருடனில் இப்படித்தான் முளைக்கிறார்கள்.
எவனோ ஒருவனின் மண்ணாசை, மச்சினனின் பெண்ணாசை இதனோடு மனைவி என்னும் பெண்ணின் ஆசை, சம்பந்தப்பட்ட துரோகியின் பொன்னாசை என்று கச்சிதமாக திரைக்கதை எழுதி, கர்ணா என்னும் கருணாகரனாக வரும் உன்னிமுகுந்தனின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கதாபாத்திர வடிவமைப்பு.
அடுத்ததாக சொக்கனாக வரும் சூரியின் கதாபாத்திரம். சூரியின் கதாபாத்திரத்தையும் இதே போல் மூன்று காட்சிகளின் வழி கச்சிதமாகப் பிரிக்கலாம். திரைப்படத்தில் கான்ஸ்டபிளாக வரும் மரியம் ஜார்ஜ், சொக்கனை விசாரிக்கும் காட்சிகள் மூன்று இடங்களில் வரும். அதுதான் சொக்கன் என்னும் கதாபாத்திரத்திற்கான கிராஃப்.
முதல் விசாரணையில் சொக்கன் என்பவன் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட புரோட்டா சூரியாகவே இருப்பான். இரண்டாம் விசாரணையில் அவன் ஒரு படி உயர்ந்து சூழ்நிலை சந்தர்ப்பத்தால் வாத்தியாரைப் பிடித்துக் கொடுத்த விடுதலை நாயகனாக உயர்ந்திருப்பான். மூன்றாம் விசாரணையில் இன்னும் கொஞ்சம் உயர்ந்து, கருட புராணம் போல் கருணாவுடன் விவாதித்திருப்பான். உச்சபட்ச காட்சியில் வானளக்கும் கருடனாக உயர்ந்திருப்பான்.
இந்த வரைவியலின் படிதான் சொக்கனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் படத்தில் மிகச்சிறப்பாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. இது படத்திற்கு இரண்டாவது பலம்.
மூன்றாவது நண்பனாக வரும் ஆதி, சசிக்குமாரின் கதாபாத்திரமாகும். இந்தக் கதாபாத்திரத்தில் இது போன்ற வரைவியல் அம்சங்களோ, கதாபாத்திர குணாதிசய ஏற்ற இறக்கங்கள் எதுவுமே இல்லாத, ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழும் ஒரு நேர்மையான மற்றும் தட்டையான கதாபாத்திரம். இருந்தாலும், மேற்சொன்ன மற்ற இரண்டு கதாபாத்திரங்களின் வரைவியல் இக்கதாபாத்திரத்தின் நடவடிக்கைகளினால் தான் நிர்மாணம் செய்யப்படுகிறது என்ற புள்ளியால் மற்ற இரண்டு கதாபாத்திரத்தையுமே தூக்கி நிறுத்தும் கதாபாத்திரமாக ஆதி கதாபாத்திரம் சிறப்பான உருமாற்றத்தை அடைகிறது. இது படத்தின் மூன்றாவது பலம்.
யுவனின் அட்டகாசமான பின்னணி இசை படத்தின் நான்காவது பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளின் இயல்பான, தத்ரூபமான, உணர்வுப்பூர்வமான நடிப்பு படத்தின் ஐந்தாவது பலம் என பல்வேறு அம்சங்கள் படத்திற்கு பக்கபலமாக இருந்து படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறது.
சொக்கனாக வரும் சூரி நடிப்பில் சொக்க வைக்கிறார். பல்வேறு விதமான உணர்ச்சிக் குவியல்களை முகத்தில் கூட்டி விருந்து வைக்கிறார். தன் முதலாளியைப் பாதிப்பது போல் எதுவும் பேசிவிடக் கூடாது என்கின்ற முன் ஜாக்கிரதையுடன் மூச்சு கூட விடாமல் கள்ள மௌனம் சாதிக்கும் போதும், அதே முதலாளி என்ன நடந்தது என்று கேட்டதும் மூச்சு கூட விடாமல் அந்த பிரச்சனையின் ஆதிப் புள்ளி துவங்கி மீதிப் புள்ளிகளை மிச்சமே வைக்காமல் புட்டு புட்டு வைப்பதும் என நடிப்பில் ராவடி செய்திருக்கிறார் சூரி. வாழ்த்துக்கள்.மேலும் அவரது உடலுக்குள் சாமி புகும் என்பதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் காட்சிகளுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
ஆதியாக வரும் சசிக்குமார் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அற்புதமாக நடித்திருக்கிறார். பேங்கில் இருந்து கோம்பை அம்மன் கோவில் நகைகளை வாகனத்தில் எடுத்து வரும் போது சசிக்குமார் காட்டும் புத்திசாலித்தனம் அக்கதாபாத்திரம் மீதான மரியாதையைத் தூக்கி நிறுத்துகிறது. நண்பனாகவே இருந்தாலும் தவறு தவறு தான் என்று அவர் நிற்கும் போது அக்கதாபாத்திரம் மனதில் மேலும் உயர்கிறது. அதற்கு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் கூடிய அற்புதமான நடிப்பை வழங்கி வாழ்ந்திருக்கிறார் சசிக்குமார். என்னதான் ஆதி கதாபாத்திரத்திற்கான வெயிட்டேஜ் கதையில் இருந்தாலும் இரண்டாம் தர நாயகனுக்கான இடத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று எண்ணாமல், நட்புக்கு சினிமாவிற்கு வெளியிலும் நற்சான்றாக இருந்து நடித்துக் கொடுத்திருக்கும் நடிகர் இயக்குநர் சசிக்குமாருக்கு அன்பாய் ஒரு பூங்கொத்து.
சொல்ல மறந்துவிட்டேன். அந்த ஆண்டிப்பட்டி காட்டிற்குள் நடக்கும் சம்பவம் தரமான மற்றொரு சுப்ரமணியபுரம் சம்பவம்.
ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் படமெடுத்து ஆடும் கருநாகம் போல கருணாகரன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மலையாள வாடையுடன் கூடிய இவரின் தமிழ் படத்திற்கு வேறொரு கலர் கொடுத்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி இவரின் மனதில் ஏற்படும் மாற்றத்தினை முகத்தின் வழி கடத்தி தான் மிகச்சிறந்த நடிகன் என்பதை நிருபிக்கிறார் உன்னி முகுந்தன்.
சொக்கனின் காதலியாக வரும் ரேவதி சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் மூலமாக வசீகரிக்கிறார். உன்னி முகுந்தன் மனைவியாக வரும் கண்ணம்மா புகழ் ரோஷிணி ஹரிப்ரியன் முதல் படத்திலேயே வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மதினியாக வரும் ஷிவதா அழுது நடிக்கும் காட்சிகளில் அழுகையால் நம்மையும் வெடிக்க வைக்கிறார்.
அக்மார்க் வில்லன்களாக வரும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும், மைம் கோபியும் மிகையற்ற யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து படத்தின் காட்சிகளுக்கு மேலும் உயிரூட்டி இருக்கின்றனர். கனி வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்,
யுவன் சங்கர் ராஜா, ஸ்டார் திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் தன் ஆதிக்கத்தைs செலுத்தி இருக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்களில் வின்டேஜ் யுவனின் தரிசனம். ஆர்தர் வில்சனின் கேமரா அலுங்காமல் குலுங்காமல் அல்லிநகரத்து சுற்றுவட்டாரத்தின் அக அழகு, புற அழகு இரண்டையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இண்டு இடுக்கெல்லாம் நகர்ந்து கேமரா நகர்வுகளை எண்ணி நம்மை ஆச்சரிய கடலுக்குள் தள்ளுகிறது.
கதை வெற்றிமாறனின் கதை என்ற பேச்சு நிலவினாலும் கூட, கதை என்ற இடத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார் மற்றும் அவரின் குழுவினரின் பெயரே வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் தன் கிராஸ்ரூட் ப்லிம்ஸ் மற்றும் லேர்க் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து இப்படத்தினைத் தயாரித்திருக்கிறார்.
ஓர் இயல்பான, எதார்த்தமான வாழ்வியலுடன் கூடிய கமர்ஷியல் கதையை எடுத்துக் கொண்டு, அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் கூர்மையான கதாபாத்திர வடிவமைப்பையும் கொடுத்து, சிறப்பான திரைப்படமாக உருவாக்கி, ஒரு நல்ல காண்பனுபவத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். 💐
கருட(ன்) தரிசனம் சிறப்பு.
– இன்பராஜா ராஜலிங்கம்