எத்தனை வசீகரமான தலைப்பு? படமும் அப்படியே!
மலையாளத்தில் அன்னா பென் நடித்த ‘ஹெலன்’ எனும் வெற்றிப்படத்தைத் தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன். மகள் மீது பாசம் கொண்ட அன்பிற்கினியானான அருண் பாண்டியன், படத்திலும் கீர்த்திக்குத் தந்தையாக நடித்துள்ளார்.
சிக்கன் ஹப் எனும் கடையில் பணி புரியும் அன்பிற்கினியாள், ஓர் இரவு அக்கடையின் ஃப்ரீஸர் அறையில் சிக்கிக் கொள்கிறார். -15 டிகிரிக்குக் கீழ் செல்லும் அந்த ஃப்ரீஸர் அறையில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படத்தின் கிளைக் கதைகளான தந்தை – மகள் உறவு; கடனிலுள்ள அன்பிற்கினியாளுக்கும், வாழ்க்கையைச் சீரியசாகப் பாவிக்காத சார்லஸ் செபஸ்டியனுக்கும் உள்ள காதல்; அனைவர் மீதும் எரிந்து விழும் சிக்கன் ஹப்பின் மேனஜர்; அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமாக இருக்கும் மால் செக்யூரிட்டி என படத்தில் ரசிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு.
மால் செக்யூரிட்டியாக, மலையாளப் படத்தில் நடித்த ஜெயராஜ் கோழிக்கோடு அவர்களே தமிழிலும் நடித்துள்ளார். ஹெலனை எப்படிக் கவிதையாக அவர் முடித்து வைத்தாரோ, அது போல் அன்பிற்கினியாளையும் முடித்து வைக்கிறார். மூலத்தோடு ஒப்பிட்டு, ‘தமிழ்ல அந்த மேஜிக் மிஸ் ஆகுது’ என எவரும் சொல்ல முடியாதபடிக்கு, ஜெயராஜையே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் கோகுல். இயக்குநரின் இந்தச் சிறப்பான முடிவு, படத்திற்கு கூடுதல் அழகினைச் சேர்த்துள்ளது. தலைமை காவலராக ஹெலனில் சிறப்பாக நடித்திருந்த அடிநாட் சசியையும், அப்படியே தமிழில் பயன்படுத்தியுள்ளார் கோகுல்.
எஸ்.ஐ.ரவீந்திரனாக, தியேட்டர் ஆர்டிஸ்ட் ரவீந்திர விஜய், பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிப்பது உறுதி. அன்பிற்கினியாளைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவரது தந்தையிடம் பேசும்போது, அந்த எஸ்.ஐ.யின் மீது எரிச்சல் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. இப்படியாகக் கதாபாத்திரத் தேர்விலேயே, கோகுல் பாதி வெற்றியை எய்திவிட்டார். அதிலும் குறிப்பாக, மலையாளப் பட ரீமேக்கிலேயே, சில நொடிகள் வருவது போன்ற ஒரு மாஸான கதாபாத்திரத்தில் கோகுல் நடித்திருப்பதெல்லாம் அவரது உச்சபட்ச சாமர்த்தியத்திற்குச் சான்று. 😉
ஹெலனை அன்பிற்கினியாளாகத் தமிழில் மாற்றிவிட்டாலும், அசாரை, சார்லஸ் செபாஸ்டியனாக மாற்றி நேர் செய்துள்ளனர். குறிப்பாக, ‘நாடு இருக்கிற நிலையில்’ என வலதுசாரியின் சகிப்பின்மையை வசனத்துக்குள் நாசூக்காகக் கொண்டு வந்துள்ள கோகுலின் சாமர்த்தியத்தை மெச்சியே ஆகவேண்டும். சார்லஸாக நடித்துள்ள அறிமுக நாயகன் ப்ரவீன் ராஜா தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.
அருண்பாண்டியன், தன் மகளைக் காணவில்லை எனத் தேடும் பொழுதும், ஃப்ரீஸருக்குள் தன் மகளைப் பார்த்த கணத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்விலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், முதல் பாதியில், அவரொரு ஜாலியான மனிதர் என நிறுவ வைக்கப்பட்டுள்ள காட்சிகளில் சோபிக்க முடியாமல் தடுமாறுகிறார். அவரது குரலும், உடல்மொழியும் ரஃப் & டஃப் சுபாவத்தையே பிரதிபலிப்பது ஒரு குறை. ஆனால், ஒரு தந்தையாக வரும் காட்சிகளிளெல்லாம் அன்பிற்கினியனாகவே உருகிவிடுகிறார்.
மலையாளப் படத்தைத் தமிழில் ரீ-மேக் செய்யும் பொழுது, சவாலாகும் ஒரு பிரதான விஷயம் அதன் விஷுவல்ஸ். தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனம் பெறும் பெரும்பாலான மலையாளப் படங்கள், கவிதையைப் போன்ற ஒரு விஷுவல் ட்ரீட்டிற்கு மினிமம் உத்திரவாதமாவது அளிக்கும். ஆனால், முதல் ஃப்ரேமில் இருந்தே மேக்ஸிமம் உத்திரவாதத்தை அளித்துள்ளார் மகேஷ் முத்துசாமி. ஒரு ஃப்ரீஸர் அறைக்குள் ஒரு கதையைத் தொய்வில்லாமல் நகர்த்துவது என்பது புலி வாலைப் பிடிக்கும் கதை. கொஞ்சம் அசந்தாலும் பிசகாகிவிடும். இயக்குநர் கோகுலுக்குப் பக்க துணையாக இருந்து, அன்பிற்கினியாளைக் கண்ணிற்கு இனியாளாகவும் மாற்றியுள்ளார் மகேஷ் முத்துசாமி.
பரவலான கவனம் பெற்ற ஒரு வெற்றிப்படத்தில், அதுவும் ஹீரோயின் ஓரியன்டட் கதாபாத்திரத்தில் ஒருவர் ஒரு அளவுகோலை செட் செய்த பின், அந்த ரோலை எடுத்து நடிப்பது என்பது மிகச் சவாலான விஷயம். ஹெலன் படத்தைப் பார்த்தவர்களால், அன்னா பென்னுடன் கீர்த்தி பாண்டியனை ஒப்பிடாமல் படத்தைப் பார்க்கவே இயலாது. அந்தச் சவாலை ஏற்று, அநாயாசமாக அதில் வெற்றியும் கண்டுள்ளார். இரண்டாம் பாதியில், பார்வையாளர்களின் கவனத்தைத் தன் மீதே பதைபதைப்புடன் தக்க வைக்குமளவு அற்புதமாக நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். நடிப்பைக் கலையாகப் பாவிக்கும் தியேட்டர் ஆர்டிஸ்ட்களாலேயே இத்தகைய மேஜிக்கை நிகழ்த்தமுடியும்.
‘இந்தப் படம் என் மகளுக்கு நான் அளித்த கிஃப்ட்’ என ஒரு நண்பர் தன்னிடம் தெரிவித்ததாகப் பத்திரிகையாளர் சந்திப்பில், அருண்பாண்டியன் சொன்னது போலில்லாமல், கீர்த்தி பாண்டியன் தான் தன் நடிப்பால் தன் தந்தைக்கு அன்பிற்கினிய ‘கிஃப்ட்’ அளித்துள்ளார்.
தியேட்டர் ஆர்டிஸ்டான கீர்த்தி பாண்டியனால் எத்தகைய கதாபாத்திரத்திலும் சோபிக்க முடியும் என்பதற்கு அன்பிற்கினியாளே சாட்சி.