Shadow

அறம் விமர்சனம்

Aramm movie review

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்

ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார்.

கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக இல்லாமல், பார்வையாளர்களின் கண் முன்னே உண்மையிலேயே நடப்பது போன்று மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படம். அந்தப் பெற்றோரின் தவிப்பை, ஊர் மக்களின் கோபத்தை, கலெக்டரின் கையறு நிலையை, ஃபையர் சர்வீஸ் ஆட்களின் இயலாமையை, ஆளுங்கட்சியின் ‘பவர் பாலிட்டிக்ஸ்’ குறுக்கீட்டை எனப் படம் அத்தனை விஷயங்களையும் உணர வைக்கிறது.

படம் பதைபதைப்பிற்குள் இட்டுச் செல்லும் முன், ஒரு குடும்பத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பெயின்ட்டர் புலேந்திரன் எனும் பாத்திரத்தில், தேர்ந்த குணச்சித்திர நடிகராக ராமசந்திரன் துரைராஜ் அசத்தியுள்ளார். அவரது மனைவி சுமதியாக சுனுலக்ஷ்மி நடித்துள்ளார். அவர்கள் வருவது சின்னஞ்சிறு அத்தியாயம் என்ற பொழுதிலும், கணவன் – மனைவியாக மனதில் ஆழப் பதிந்து விடுகின்றனர். கதாபாத்திரத் தேர்வில், இயக்குநர் நயினார் கோபி சதமடித்துள்ளார் என்றே சொல்லவேண்டும். “கயிற தவிர இவனுங்ககிட்ட ஒன்னுமே இல்லடா!” என அரசாங்கத்தைக் கழுவி ஊற்றும் வேடத்தைப் பழனி பட்டாளம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். சிறுமியைக் காப்பாற்ற போதுமான கருவிகளோ, சரியான திட்டமோ இல்லையென இயலாமையில் தவிக்கும் ‘வழக்கு எண்’ முத்துராமன் (ஃபையர் மேன்), ஜீவா ரவி (மருத்துவர்) என அனைவருமே தாங்கள் ஏற்ற வேடங்களை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இயக்குநர் நயினார் கோபி சாதித்துள்ளார். ‘மெட்ராஸ், கத்தி ஆகிய படங்களின் கதை என்னுடையது’ என்று பலவீனமாக ஒலித்த குரலின் சொந்தக்காரர். பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பைக் கொண்டு, சினிமா வரலாற்றில் உச்ச இடத்தினை பெறக் கூடிய ஓர் அற்புதமான படைப்பைக் கொடுத்துள்ளார். சமூக அக்கறையைக் கலையாக மாற்றக் கூடிய ரசவாதியாகத் தனது இருப்பினைக் கல்வெட்டில் செதுக்கியது போல் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளார். ஜெயராம், ஊர்வசி, பேப் ஷாம்லி நடிப்பில் வெளியான சிங்காரச்சிட்டு (மலையாளப் படமான மாலூட்டி-இன் தமிழ் டப்பிங்) படத்திற்கும், இப்படத்திற்கும், ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து விடுகின்ற ஓர் ஒற்றுமை உண்டே தவிர, இரண்டும் வேறு வேறு. அறம் படத்தில் விழுவது கருப்பர் கிராமத்தின் குழந்தை என்பது தான் படத்தின் முக்கியமான பேசுபொருள். 

கலெக்டர் மதிவதனியாக நயன்தாரா கலக்கியுள்ளார். ஆழ்துளை கிணறின் அருகில் தனியாக நின்று அவர் அழும் பொழுது, திரையரங்கில் எழும் பலமான கைத்தட்டல்களே அதற்குச் சான்று. வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த ஓர் இயக்குநருக்கு ஆதரவாகக் கை கொடுத்துத் தூக்கி விட்டு, இந்தப் படத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருந்துள்ளார் நயன்தாரா. இவரில்லையேல் இந்தப் படம் இல்லை. “நீங்க ஒரு வெற்றிப் பட இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு நகரும் வரை உங்க கூட இருப்பேன்” என்ற நம்பிக்கையையும் இயக்குநருக்கு அளித்துள்ளார். படத்தின் டைட்டில் போடும் பொழுது, ஒரு கை மேலிருந்து வந்து கீழிருக்கும் கைகளை ஆதரவாகப் பிடிக்கிறது.

கிட்டி, நயன்தாராவை விசாரிப்பதன் வழியே பார்வையாளர்களுக்குக் கதையைச் சொல்கிறார் இயக்குநர். சுவாரசியம் கருதி அவர் உரையாடலை அப்படி அமைத்திருந்தாலும், நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரி போலில்லாமல், அடுத்து என்ன என்று கதை கேட்கும் போக்கில் அவ்வுரையாடல் அமைவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். மையக் கதையின் சீரியஸ்னஸ்க்கு ஒத்து வராமல் இடையிடையே வம்படியாக இவர்களிடம் திரைக்கதை வந்து செல்கிறது.

மரங்களே இல்லாப் பொட்டல் காட்டில் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கிணற்றில் சிக்கிய சிறுமியின் நிலையைக் காட்டி, இதயத் துடிப்பை எகிறச் செய்யும் பெரும் பங்கை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கச்சிதமாகச் செய்துள்ளார். படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல், கண் முன்னே நடக்கும் ஒரு நிகழ்விற்குப் பார்வையாளர்களையும் சாட்சிகளாக மாற்றியுள்ளார் படத்தொகுப்பாளர் ரூபன். “ஒரு விதமான இயலாமையையும்; இயலாமையில் இருந்து விடுபடுகின்ற ஒரு விடுதலையுணர்வையும் ஜிப்ரான் தன் இசையில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று இயக்குநரே இசையமைப்பாளருக்குப் புகழாரம் சூட்டுகிறார். அது உண்மைதான் எனப் படம் பார்க்கும் பொழுது உணர முடிகிறது. நயன்தாராவுக்குக் கைதட்டல் எழுவது, அவரது நடிப்பிற்காக மட்டுமன்று, அந்த விடுதலையுணர்வை நாமும் அடைவதால்தான்! இப்படம், ஒரு பக்காவான டீம் வொர்க்.

“ஒருவர் தன்னால் இயன்ற வரையில் அறச் செயலைச் செய்யக் கூடிய இடங்களிலெல்லாம் இடைவிடாது செய்தல் வேண்டும்” என்பதே முதல் வரியில் இருக்கும் குறளின் பொருள். கலெக்டராக இருந்து செய்ய முடியாத அத்தகைய அறச் செயலை மனுஷியாக இருந்து நயன்தாரா செய்து முடிக்கிறார்.