நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி.
கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் பதவியை மகன் வருணுக்குத் தற்காலிக ஏற்பாடாகத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். அதில் துளியும் விருப்பமில்லாமல், ‘மூன்று வாரம் பல்லைக் கடித்துக் கொள்ளலாம்’ என வேண்டாவெறுப்பாகக் கவர்னரைச் சந்தித்து பதவி பிரமாணம் எடுக்கிறான் வருண். வினோதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருகிறது; தலைநகரத்துக்குக் குடிநீர் தரும் பிரம்மாண்டான ஏரிகளில் ஒன்று (செம்பரம்பாக்கம்) நிரம்பி உடையும் நிலையில் உள்ளதென முதல்வர் வருணுக்கு நெருக்கடி எழுகிறது. பின் என்னாகிறது என்றறிய நாவலை வாசிக்கவும்.
இரண்டாம் அத்தியாயத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை நீடிக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் தந்தை மகன் உறவு, கோமாவில் இருந்து மீண்டு நைச்சியமாக அரசியல் செய்யும் பழுத்த அரசியல்வாதி, எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்க்குக் கடத்துதல், வருணுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமாயிருக்கும் சீன நண்பன் வாங், பனாமாவின் ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்யப்படும் பொருளாதாரக் குற்றங்கள், முதல்வருக்கு அடைக்கலம் தரும் பிரதான எதிர்கட்சித் தலைவரின் வாரிசு என நாவலின் அனைத்துப் பகுதிகளுமே சுவாரசியம்.
தாயம் விளையாட்டில், எதிராளியின் காயை வெட்டினால் போனஸாக ஒரு ஆட்டம் கிடைக்கும்; அந்த எக்ஸ்ட்ரா ஆட்டத்திற்குப் பெயர் தான் “வெட்டாட்டம்”. அப்படியொரு வெட்டாட்டத்தில் வீழ்த்தப்படும் வருண் எப்படி மீண்டு பழமெடுக்கிறான் என்பதற்கான குறியீடாகத் தலைப்பைக் கொள்ளலாம். நாவலில் மொத்தம் 26 அத்தியாயங்கள் (0 – 25). அவற்றைக் குறிக்க தமிழ் எண்களை உபயோகப்படுத்தியுள்ளார். 10-க்கு, பிரத்தியேக தமிழ் எண் இருப்பினும், குழப்பத்தினைத் தவிர்க்க 1, 0 ஆகிய தமிழ் எண்களை இணைத்து நவீனப்படுத்தியுள்ளார். பழமையில் புதுமை. எல்லா அத்தியாயத்தின் தொடக்கத்திலும் தாயம் விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பைக் கொடுத்துக் கொண்டே வருகிறார். அவற்றுள் சில, ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாளில்லை’ எனப் பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுவாய் உள்ளது (“அந்த” க்ரூப்பைச் சேர்ந்தவர்கள், ஸ்டேட்டஸ் தேற்றி லைக்ஸ் அள்ளவும், வாட்ஸ்-அப்பில் பரவவிட்டுப் புளகாங்கிதமும் ஜென்ம சாபல்யமும் அடைந்து கொள்ள, இந்த நாவல் ஆயுதம் வழங்குகிறது என்றால் அது மிகையல்ல!)
நாவல் முழுவதும் தாயம் பற்றிய குறிப்புகள் என்றாலும், அட்டைப்படத்தில் இருப்பதோ ‘சதுரங்கம்’ விளையாட்டின் படம். அரசியல் ஒரு சதுரங்க விளையாட்டு போல; எதிர்படுபவர்களை வெட்டிக் கொண்டு முன்னேற வேண்டும் என்றெல்லாம் எதையாவது பொருத்திக் கொள்ள முடியும் தான். என்றாலும் கூட, அட்டைப்படத்தை வடிவமைத்த விஷால் ‘தாயம்’ விளையாட்டை அட்டைப்படமாக வைத்திருக்கலாம். வெட்டாட்டம் என்ற தலைப்பின் எழுத்துருவில் மட்டுமல்லாமல், உட்பக்கமாக மடிக்கப்பட்ட பின்னட்டையில் பகடைக் காய்களின் படம் இருப்பது ஆறுதல். வெள்ளை போர்வீரனும், கருப்பு மகாராஜாவும் ‘செக்-மேட்’ பொசிஷனில் அட்டைப்படத்தில் நிற்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட மகாராஜா என்பது நாவலோடு ஒத்துப் போகிறது என்றாலும், நாவலில் அப்படிச் செய்பவன் எதிரணியின் வீரனல்லன். வெள்ளை மகாராஜாவை, அவரது ரத்தத்தின் ரத்தமான வெள்ளை இளவரசனே தனிமைப்படுத்துகிறான். அது முன் அனுபவம் இல்லாத ஓர் இளவரசனுக்கு எப்படிச் சாத்தியமானது என்பதிலேயே நாவலின் சுவாரசியம் அடங்கியுள்ளது.
நாவலில் மூன்று பெண் பாத்திரங்கள் வருகின்றன. அவர்களைத் தமிழ் சினிமாவில் இருந்து கடன் வாங்கி, அப்படியே உலவ விட்டுள்ளார். இந்த நாவலில், அதிகார மட்டங்கள் வரை வேர் விட்டிருக்கும் ஓர் ஏஜென்சிக்கு வேலை செய்யும் கொலைகாரன் ஒருவன் வருகிறான். ‘தனக்கு ஏன் அழிக்கும் வேலை பிடித்திருக்கிறது?’ என ஒரு சித்தாந்தம் சொல்கிறான். அவன் சொல்லும் காரணம், ஒரு சிலிர்ப்பையும், மெல்லிய அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாவலின் ஓட்டத்தில் இருந்து சில கணங்கள் சிந்தனையைத் தேக்கி வைக்கிறது அவனது சித்தாந்தம். நாவலின் ஓரிடத்தில், மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும் வாங்-கின் சிந்தனையும் கூட ஒரு கணம் இப்படித் தத்துவ விசாரத்திற்குச் சென்று மீள்கிறது.
வெட்டாட்டத்தின் சிறப்பு அதன் எளிமையும் சுவாரசியுமும் மட்டுமில்லை. படிக்கும் பொழுதும் சரி, படித்த பின்பும் சரி, ஓர் உற்சாகம் மனதோடு இழையோகிறது. கதைக்குள் வாசகனை இழுத்து விடுவதே ஷானின் வெற்றி. சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் நாவல் தொட்டுச் சென்றாலும், எவ்வித மன அயற்சியும் அளிக்காமல் நிறைவாய் முடிகிறது.
வெளியீடு: யாவரும் பதிப்பகம் (90424 61472 / 98416 43380)
விலை: 240/-
ஆன்லைனில் வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல்
– தினேஷ் ராம்