Shadow

அவள் விமர்சனம்

Aval movie review

நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, ‘அவள்’ என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு.

ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளூர்ப் பேயாக இருந்தாலும் சரி, உலகத்தின் எந்தப் பாகத்துப் பேயாக இருந்தாலும் சரி, ‘இது என் வீடு. வெளியே போ இல்ல கொன்னுடுவேன்’ என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருக்கும். மனிதனுக்கு இறந்த பின்னும் வாழ்விடங்கள் மீதான பிரியம் விலகுவதில்லை போன்ற ஆழ்ந்த ஆன்மிகக் கருத்துகளை பேய்ப் படங்கள் தாங்கி வருகின்றன என்றால் அது மிகையில்லை. ஆனால், இப்படம் அப்படித் தொடங்கினாலும், அதிலிருந்தும் விலகி அழகானதொரு திருப்பத்தைக் க்ளைமேக்ஸில் கொண்டுள்ளது சிறப்பு.

பேய்ப் படங்களின் வெற்றி, பார்வையாளர்களை அச்சுறுத்துவதிலேயே உள்ளன. அதற்குத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு மிக அவசியம். கிரீஷின் பின்னணி இசை அதற்குத் திறம்பட உதவியுள்ளது. லாரென்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் கன கச்சிதம். மலைப் பின்னணியிலுள்ள வீடு ரசிக்க வைக்கிறது. அதுவும் அந்த மலைப் பிரதேசம் ஹிமாச்சல் பிரதேஷ் என்றால் கேட்கவும் வேண்டுமா? அந்தப் பனி மூட்டமான சூழலே ஓர் அமானுஷ்ய அழகைத் திரையில் பிரதிபலிக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தின் மூடையும், கலர் டோனையும் செட் செய்ய உதவியுள்ளது. திரையில் அமானுஷ்யத் தன்மையைக் கொண்டு வர இன்னொரு முக்கியமான தேவை, ஃப்ரேமுக்குள் தெரியும் பொருட்கள். கலை இயக்குநர் சிவ ஷங்கர் அதை மிகக் கவனமாகச் செய்துள்ளார். உதாரணத்திற்கு, ஜென்னியின் அறையைக் குறிப்பிடலாம்.

‘நான் ஏன் சாரி கேட்கணும்?’ எனச் சொல்லும் சாராவாக நடித்திருக்கும் சிறுமி குஷி ஹஜாரே கொள்ளை அழகு. கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை மிக அட்டகாசமாகத் தெரிவு செய்துள்ளனர். பால் டி’கோஸ்டாவாக வரும் அதுல் குல்கர்னி, பாஸ்டர் ஜோஷுவாவாக வரும் பிரகாஷ் பெலவாடி, மணற்கலை (Sand Art) மூலம் பேய்களுடன் தொடர்பு கொள்ளும் மாந்த்ரிகனாக வரும் அவினாஷ் ரகுதேவன் என அனைவருமே மிகச் சரியாகப் பொருந்துகின்றனர். ஆண்ட்ரியா படத்தில் இருந்தாலும், ஜென்னியாக நடித்திருக்கும் அனிஷா விக்டரைத் தான் படத்தின் நாயகியெனச் சொல்ல வேண்டும். மிக நன்றாக நடித்துள்ளார். ஜென்னிக்கு சித்தார்த் மீது ஏற்படும் ஈர்ப்பு, அதனால் ஆண்ட்ரியாக்கும் சித்தார்த்துக்கு இடையே ஏற்படும் உரசல் ரசிக்க வைக்கிறது. சித்தார்த் இப்படத்தில் டாக்டராக வருகிறார்; பார்கின்சன் நோய்க்கு மூளைக்குள் எல்க்ட்ரோட் செலுத்தி கை நடுக்கத்தை நிறுத்தும் காட்சி கூடச் சிலிர்க்க வைக்கிறது.

ஏ செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ள ‘அவள்’, முழு நீள தியேட்டரிக்கல் படம். படம் தரும் ஒலி-ஒளி தாக்கத்தை அனுபவிக்க நல்ல திரையரங்கில் படம் பார்ப்பது அவசியம்.