Search

அயோக்யா விமர்சனம்

Ayogya-movie-review

2015 ஆம் ஆண்டு, வக்கந்தம் வம்சியால் எழுதப்பட்டு, பூரி ஜெகன்னாதரால் இயக்கப்பட்ட ‘டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் உத்தியோகபூர்வ மறு உருவாக்கம் இப்படம்.

பணமே சகல அதிகாரங்களையும் தருமென்பதையும், காவல்துறையில் சேர்ந்தால் அப்பணத்தை சுலபமாக அடையலாம் என்பதையும் சிறு வயதிலேயே கண்டுணர்கிறான் யாருமற்ற அநாதை சிறுவனான கர்ணன். காவல்துறையில் சேருவதை லட்சியமாக்கி, கொண்ட லட்சியத்தின் படி போலீஸாகவும் ஆகி, அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து சகல வழிகளிலும் பணத்தை அடைகிறான். அத்தகைய அயோக்கியனை சமயச்சந்தர்ப்பம் யோக்கியனாக மாற்றுவதுதான் படத்தின் கதை.

செய்வது அயோக்கியத்தனம் என்றாலும், மட்டு மரியாதை குறையும் பட்சத்தில், சுர்ரெனக் கோபம் சூடாய் மண்டையில் ஏறி தன்முனைப்பு உசுப்பிவிடப்பட்டு தன்னிலை மறந்துவிடுவான் கர்ணன். ஜூனியர் என்.டி.ஆர் அளவு விஷால் தன்னிலை மறக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படியாகும் பட்சத்தில், தனக்கு மிகவும் பிடித்தமான பணத்தை அள்ளித் தருபவர்களையே உண்டு இல்லை என செய்து விடுவான் கர்ணன். கோபம் போனதும், ‘ஆ, வடை போச்சே!’ என ஃபீல் செய்யும் உத்தம அயோக்கியன் கதாபாத்திரம் விஷாலுக்கு.

அவர் எத்தகைய அயோக்கியன் என்றால், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதோடு மட்டுமல்லாமல் அவரைப் புகைப்படம் எடுக்கவும் செய்வார். அதுவும் பின்புறம் காலுக்குக் கீழ் ஃபோகஸ் செய்யுமளவு அநாகரீகமானவர். தனக்குப் பிடித்த பெண் ஒரு ஆணுடன் பேசுவதையே பொறுக்காமல், அப்பெண் முன்பே அவனது சட்டையைப் பிடிக்கும் கேவலமானவர். இத்தகையவரை, நாயகிகளின் இலக்கணத்திற்குட்பட்டுக் காதலிக்கும் சிந்து பாத்திரத்தில் ராஷி கண்ணா நடித்துள்ளார். ஆனாலும், இந்த வாரம் வெளிவந்த மற்ற படங்களான 100, கீ போன்ற படங்களின் நாயகிகளை விடக் கொடுத்து வைத்தவர் என்றே சொல்லவேண்டும்.

பொது மனச்சாட்சியை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தையும் கதையில் இழையோட விட்டுள்ளனர். குற்றம் சாதாரணமாக நிகழ்ந்திருந்தால் கூட அயோக்கியனின் மனம் கரைந்திருக்காது. ஒரு குற்றத்தைக் குற்றமென உணர்ந்து நடுங்கவே, அக்குற்றம் கொடுமையானதாக நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டியதுள்ளது. க்ளைமேக்ஸில், கனவிலும் நிகழ வாய்ப்பில்லாத நீதிமன்றக் காட்சிகள் அரங்கேறுகின்றன. கற்பனையிலும் சினிமாவிலுமாவது, இத்தகைய முடிவுகள் அமைந்து ஒரு பொய்யான நிம்மதியை மக்களுக்கு அளிப்பதுதான் ஆறுதல். பாலியல் கொடுமைகள் எங்கோ எவருக்கோ நிகழும் சம்பவங்கள் என்ற நிலைமை மாறி, நமக்கு மிக அருகில் நம்மிடையே இருந்தே அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. இதற்கு நீண்ட கால அளவில் தீர்வென்ன என்பதைக் குறித்த உரையாடல் பரவலாக்கப்படவேண்டும். துரித தண்டனை, அதுவும் அந்தத் தண்டனை மரணம் என்பது பிரச்சனைகளுக்குத் தற்காலிக நிம்மதியை அளிக்குமே தவிர்த்து பெரிய அளவில் மாற்றம் நிகழ வாய்ப்புக் குறைவு.

நான்கு உருப்படாத தம்பிகளின் அன்பு அண்ணன் காளிராஜனாகப் பார்த்திபன் நடித்துள்ளார். ‘ப்ரோன்னு கூப்பிடலாமா?’, ‘இவனுக்கு யாருடா இப்படி வசனம் எழுதிக் கொடுத்தது?’ என சீரியசான காட்சிகளையும் கலகலப்பாக மாற்றுகிறார். அமைச்சராக வரும் சந்தானபாரதி சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களால் கூடச் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு ஒன்றிரண்டு காட்சிகளில் தோன்றினாலும் தனது வேலையைக் கச்சிதமாய்ச் செய்துள்ளார்.

‘ஒரே ஒரு காட்சி போதும், எனது அனுபவத்தால், திரையில் என்னிருப்பைத் தக்க வைத்துக் கொள்வேன்’ என்று எம்.எஸ்.பாஸ்கர் மீண்டும் தோட்டம் வெங்கடராமன் என்ற பாத்திரத்தின் மூலம் நிரூபித்துள்ளார். ஆனந்த்ராஜ், வேல ராம மூர்த்தி, பூஜா தேவாரியா என மிக சில காட்சிகளில் தோன்றுபவர்கள் கூட நிறைவான பங்களிப்பைத் தந்துள்ளனர். எனினும் படம் எமோஷ்னலாய் கனெக்ட் ஆகாததால், க்ளைமேக்ஸ் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் மிஸ்ஸாகிறது.