Search

கீ விமர்சனம்

Kee-movie-review

கீ என்ற சொல்லிற்கு, ‘எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு தீமைகளும் உண்டு’ என தொல்காப்பியத்தில் பொருளுள்ளதாக இயக்குநர் காளீஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கணினியில் நாம் பயன்படுத்தப்படும் கீ (Key)- க்கள் தான் நமது நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறது என்றும் தலைப்பிற்குப் பொருள் கூட்டுகிறார் இயக்குநர். இயக்குநர் காளீஸ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படமும், 100 திரைப்படத்தினைப் போலவே, கதைக்குள் நேரடியாகச் செல்லாமல் அலைபாய்கிறது. சைபர் க்ரைமை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படம் எப்படித் தொடங்கக் கூடாது என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஹீரோவின் அறிமுகம், நேரடியாகப் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பாட்ஷா வைரஸ் குறித்து அவர் விளக்கமளித்து, அதைக் கொண்டு எந்தப் பெண்ணுடன் டேட்டிங் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கிறார். பல பாய்-ஃப்ரெண்ட்களைப் பெண்கள் கொண்டுள்ளனர் என்ற விசனத்தையும் பயத்தையும் பதிகிறார் இயக்குநர் காளீஸ்.

வந்தனா எனும் பத்திரிகையாளராக அனைகா நடித்துள்ளார். ஒரு முக்கியமான குற்றத்தைக் கண்டுபிடிக்க ஹேக்கரான ஜீவாவின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது. அதற்காக, ஜீவாவைப் படுக்கையறைக்கு அழைத்து, ‘எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை. இது சிக்கான் சிக்கான் ரிலேஷன்ஷிப்’ என அனைகா சொல்வதாக மிக அபத்தமான காட்சியமைப்பை வைத்துள்ளார். பல உயிர்களோடு விளையாடும் ஒரு பெருங்குற்றத்தை இழைக்கும் ஒரு நெட்வொர்க்கிற்கு எதிராக ஒரு ஜீனியஸைப் பயன்படுத்த ஒரு பத்திரிகையாளர் கைகொள்ளும் வழி இது என யோசிக்க இயக்குநர் காளீஸால் எப்படி முடிந்ததோ?

நிக்கி கல்ராணிக்கு வைத்திருக்கும் அறிமுக காட்சியெல்லாம், த்ரில்லர் படங்களுக்கு யோசிக்கவே கூடாத ஒன்று. சைபர் க்ரைம் த்ரில்லர் எனத் தீர்மானித்து விட்ட பின், அதை மையப்படுத்தி திரைக்கதையை அமைக்காமல், சகட்டுமேனிக்கு காட்சிகள் வைத்துள்ளதுதான் படத்தின் மிகப்பெரும் குறை. நாயகனை நிக்கி கல்ராணி கோயிலுக்கு அழைத்துப் போகும் காட்சி, அய்யோ அம்மா ரகம். ‘7/ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நாயகன் ரவிகிருஷ்ணாவின் பெற்றோரான விஜயனும் சுதாவும், மகனைப் பற்றிப் பேசும் உணர்வுபூர்வமான காட்சியொன்றை வைத்திருப்பார் செல்வராகவன். அந்தக் காட்சியின் கணத்தை அடைய, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாதையும், சுஹாசினியும் கொண்டு இயக்குநர் காளீஸும் முயன்றுள்ளார். கதைக்குத் தேவையில்லாத எதை முயன்றாலும் அவை பார்வையாளர்களின் மனதில் பதியாது.

வில்லனாக கோவிந்த் பத்மசூர்யா. மனிதர்களின் மனதைத் தொழில்நுட்பத்தால் ஊடுருவும் எமகாதக கதாபாத்திரத்தில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார். ஏடிஎம்களை ஹேக் செய்து பணத்தை மெஷினில் இருந்து வழியவிட வல்லவர். பணம் அவருக்கு ஒரு குறிக்கோள் இல்லை. எது எவரைச் செலுத்துகிறது என்பதற்கான நீண்ட விளக்கத்தை க்ளைமேக்சில் தருகிறார். தன் முன் மற்றவர்களை அடிபணிய வைக்கும் மனிதனின் பேராவல் தான் மனிதனின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம்.

அன்றாட வாழ்வில் நாம் தொழில்நுட்பத்தை எந்தளவு நம்பி வாழத் தொடங்கிவிட்டோமோ, அந்த அளவு அதற்கான விலையைத் தரவும் தயாராகி விடவேண்டும். இப்படியான பிரச்சனைகளை இந்த அரசாங்கம் எப்படிக் கையாளப் போகிறது, தனி மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்ற உரையாடலைப் படம் முன்வைக்காமல், ஜீவாவின் ஹீரோயிசத்தோடு படம் முடிகிறது.