யாருமே பேசாத, பேச விரும்பாத ஒரு கருவைத் தனது அப்பா காண்டம் குறும்படத்தில் இயக்குநர் ஆர்வா தொட்டுள்ளார். இப்படத்தை ரெட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
வயதுக்கு வந்த கல்லூரி படிக்கும் மகனிடம், ஒரு அப்பா, செக்ஸ், மாஸ்டர்பேஷன், சேஃப்ட்டி, காண்டம் எனப் பேசுகிறார். மகனின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு பற்றிய அத்தியாயம் அல்லது அப்பாவின் ஆணுறை என படத்தின் தலைப்பையே இயக்குநர் இருபொருள்பட வைத்து அசத்துகிறார்.
முதலில், இப்படத்தின் கதைக்கு 26 நிமிட கால அளவு என்பது மிக மிக அதிகம். நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 நிமிடங்களுக்கு ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்டுள்ள ஏரியல் ஷாட்களால் எக்ஸ்ப்ரீமென்ட் செய்துள்ளனர். அத்தகைய எக்ஸ்ப்ரீமென்ட் குறும்பட இயக்குநர்களுக்கு அவசியம் தான் என்றாலும், கதைக்குத் தேவைப்படாத பட்சத்தில் அதை எடிட்டிங் டேபிளிலேயே கத்தரித்து வீசியிருக்கலாம். நான்கு சுவருக்குள் நடக்கும் கதையொன்றை யோசித்ததன் விளைவே இப்படம் என்று இயக்குநரே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
Spoilers ahead. மகாபலிபுரத்தில் இருந்து பைக்கில் வருண் வந்து கொண்டிருக்கும்போது, அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஃபோனை எடுத்ததும், ‘அகெயின் ரிசார்ட் வரட்டுமா?’ எனக் கேட்கிறான். மறுமுனையில் இருக்கும் திவி எனும் பெண்ணுடன் வருணுக்கு, ‘ஃபர்ஸ்ட் டே’ முடிந்துவிட்டது என்பதைச் சொல்வதற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே உள்ளது. ஏனெனில் உடலுறவு வைத்துக் கொள்ள திவியை பைக்கில் ரிசார்ட்க்கு வருண் அழைத்துச் செல்வதாக திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர், வருணை மட்டுமே ரிசார்ட்டில் இருந்து பைக்கில் தனியாக வரும்படி காட்சிகள் வைத்துள்ளார். ஃபோனை எடுத்ததும், ‘எப்போ கிளம்புற?’ என்றோ, ‘போயிட்டிருக்கியா? ரீச் ஆனதும் கால் பண்ணு’ என்றெல்லாம் வருண் கேட்பதில்லை. ஆக, திணிக்கப்பட்ட அந்த ஃபோன் காலின் நோக்கம், அவர்களுக்குள் உடலுறவு முடிந்துவிட்டது எனச் சொல்வது மட்டுமே என்றாகிறது.
மகன் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்ட விஷயம் அப்பாவிற்குத் தெரிய வருகிறது. அந்தச் சூழலைப் பொறுப்புணர்ச்சியோடு அந்த அப்பா எப்படிக் கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மேலோட்டமாகப் பார்த்தால், ‘அட’ போட வைக்கிறது. “ப்ப்பாஆஆ, என்ன மாதிரியான அப்பாடா இவரு” என மயிர்கூச்செரிப்பு எழுகிறது. ஆனால், ரொம்பக் கவனமாகக் கண்ணைக் கவரும் ஜிகினா தாளில் அடிப்படைவாதத்தை அழகாகச் சுற்றித் தந்துள்ளார் இயக்குநர்.
தொலைக்காட்சியில் வரும் மருத்துவர்கள் ரொம்பப் பயமுறுத்தி, வீண் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள் என ஒரு பேராசிரியர் தோரணையில் அந்த அப்பா தனது மகனிடம் பேசுகிறார். அவர் ஒரு காட்சியில் கூட மகனிடம் ஆதுரமாகப் பேசுவதில்லை. அவரின் தோரணையே, மகனைக் கார்னர் செய்வது போல்தான் உள்ளதே தவிர, தோளில் கை போட்டுப் பேசும் நட்பான தந்தை இல்லை அவர்.
‘ஒரு தடவை செக்ஸ் வச்சுட்டா போதும், எப்பவும் அதே நினைப்புல இருந்து அழிஞ்சு போயிடுவ, அது ஒரு டெவில், உன்ன சும்மா விடாது, உன் லைஃபையே ஸ்பாயில் பண்ணிடும்’ என செக்ஸ் ஒரு மகத்தான குத்தம் என்பது போலவே மகனுக்கு அதீத மன உளைச்சலை ஏற்படுத்துகிறார் அந்த அப்பா. ஒருவரின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி அவனை அடிபணிய வைக்கும் டெக்னிக்கை மத அடிப்படைவாதிகள்தான் உபயோகப்படுத்துவார்கள். இந்த அப்பா, தன்னோட மகனை அப்படித்தான் கார்னர் செய்கிறார்.
ஒரு தடவை செக்ஸ் வைத்துக் கொண்டால், அதைப் பற்றியே தான் நினைப்பு சுழலும் எனில், எந்த நம்பிக்கையில் அந்த அப்பா தன் மகனிடம் தம் கட்டிப் பேசுகிறார்? புள்ளி விவரங்கள், அறிவியல், ஆராய்ச்சி என அடுக்கி மகனைப் பயமுறுத்துகிறார். 18 வயதிற்குப் பிறகு விருப்பட்டவருடன் டேட்டிங் செல்லும் இளைஞர்களும் இவ்வுலகில் அழிந்துவிடாமல் இருக்கிறார்கள் என்று அந்த ஆர்கிடெக்ட் அப்பாவிற்குத் தெரியாதா? புள்ளிவிவரங்களைப் பயமுறுத்த மட்டுமே உபயோகப்படுத்துகிறார் இயக்குநர். செக்ஸ் என்பது ரொம்ப நேச்சுரல் என்பதை சொல்லிவிட்டு, ஆனால், இயற்கையான அந்த உணர்வால் மகனது வாழ்க்கையும், படிப்பும் போய்விடும் என அச்சுறுத்துகிறார்.
பையன் சேஃப்டியாக செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று காண்டம் தரும் அப்பா, ஹெல்மெட் போடாமல் மகன் பைக் ஓட்டுவதைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிப்பதில்லை. ரமணா விஜயகாந்த் போல புள்ளிவிவரம் பேசிப் பயமுறுத்தும் அப்பாக்கு, விபத்துக்குள்ளாகும் ஹெல்மெட் போடாதவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அந்த அப்பாவின் உண்மையான நோக்கம் மகனின் சேஃப்ட்டி இல்லை. அவரது நோக்கம் என்னெவெனில்..
மகளின் கற்பைக் கொண்டு மகனிடம் ஒரு டீல் போடுவதில் இருந்து அதை யூகிக்கலாம். க்ளைமேக்ஸில் அப்பா, மதத் தலைவர் ரோலில் இருந்து ஒரு கலாச்சாரக் காவலர் ரோலுக்கு மாறுகிறார். சின்ன கலாச்சாரக் காவலரான வருணோ, தங்கை நித்யாவுடன் சுற்றும் விக்ரமை (தங்கைக்குப் பின் இல்லை) நண்பர்களோடு சேர்ந்து நையப்புடைக்கிறான். அது தெரிந்தும், மகனின் அந்த ரெளடித்தனத்தை அந்த அப்பா கண்டிப்பதில்லை. ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதைக் கண்டிப்பதில்லை. ஆனால், ஒரு பெண்ணின் விருப்பத்தோடு மகன் உடலுறவு கொண்டதை மட்டும் ஜீரணிக்க முடியாமல் குட்டி போட்ட பூனை போல் அல்லாடுகிறார் அந்தப் பழமைவாத அப்பா. ‘திவியை வீட்டிற்கு அழைத்து வா பேசலாம்’ என்று சொல்லாமல், ‘உன் மாமா முன் வாழ்ந்து காட்டு’ என்று பொருள் சார்ந்து மட்டுமே அந்த அப்பாவால் சொல்லமுடிகிறது. விருப்பப்பட்ட வாழ்க்கையை மகனுக்கு அமைத்துத் தரும் எண்ணமில்லாத அப்பாக்கள், மகன்களின் வாழ்வில் நிகழும் மிகப் பெரும் சாபம். நித்யாவுக்கு உண்மையிலேயே விக்ரம் தொந்தரவு தந்திருந்தால், அதை நேரடியாக அவரிடம் சொல்லும் சுதந்திரத்தை அந்த அப்பா அளிக்காதது நித்யாவுக்கு நிகழும் மிகப் பெருங்கொடுமை.
இந்தக் குறும்படத்தில் வரும் அப்பாவிற்கும், மகனுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. நித்யா யார் கூடப் பழகவேண்டும் என்கிற முடிவை, நித்யாவே எடுத்துவிடக் கூடாதென்பதில் காட்டும் அக்கறை தான் அது. நாளை இந்த வருணும் அப்பா ஆவான். அவனோட காண்டத்திலும், தன் மகள் யார் கூடச் சுற்றவேண்டும் அல்லது சுற்றக்கூடாது என்கிற முடிவை அவன்தான் எடுப்பான்.
மகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் அப்பா காண்டம் மகன்களால் தொடரும்.
– தினேஷ் ராம்